புதுடில்லி, டிச.23- பாதுகாப்பு அமைச்சகத்தில் பணியாற்றி வந்த உயர் அதிகாரி ஒருவர், துபாயைச் சேர்ந்த நிறுவனத்திடம் லஞ்சம் பெற்ற புகாரில் சிபிஅய் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சகத்தின் பன்னாட்டு ஒத்துழைப்பு மற்றும் ஏற்றுமதி பிரிவில் துணை திட்ட அதிகாரியாகப் பணியாற்றி வந்தவர் லெப்டினன்ட் கர்னல் தீபக் குமார் சர்மா.
துபாயைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திற்குச் சாதகமாகச் செயல்பட, அந்த நிறுவனத்தின் சார்பாக வினோத் குமார் என்பவர் மூலம் தீபக் குமார் சர்மாவுக்கு 3 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டது.
கடந்த டிசம்பர் 18-ஆம் தேதி இந்த லஞ்சப் பணத்தைப் பெற்றபோது, தீபக் குமார் சர்மா மற்றும் வினோத் குமார் ஆகிய இருவரையும் சிபிஅய் கைது செய்தது.
இந்த ஊழல் சதியில் ஈடுபட்டதாக தீபக் குமார் சர்மாவின் மனைவியும், ராணுவ அதிகாரியுமான கர்னல் காஜல் பாலி மற்றும் துபாய் நிறுவனத்தின் மீதும் சிபிஅய் வழக்குப் பதிவு செய்துள்ளது.
டில்லியில் உள்ள தீபக் குமார் சர்மாவின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், லஞ்சப் பணம் 3 லட்சம் ரூபாயுடன், கணக்கில் வராத 2.23 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், ராஜஸ்தான் மாநிலம் சிறீகங்காநகரில் உள்ள அவரது வீட்டில் இருந்து 10 லட்சம் ரூபாய் ரொக்கமும், முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.
பெங்களூரு, ஜம்மு மற்றும் டில்லி உட்பட பல்வேறு இடங்களில் சிபிஅய் அதிகாரிகள் தொடர்ந்து சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
