
மரு.பழ.ஜெகன்பாபு எம்.டி.எஸ்.
முகத்தாடை அறுவை சிகிச்சை நிபுணர், பேராசிரியர் & துறைத் தலைவர், பல் மருத்துவத் துறை, அரசு திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி
கேள்வி : ஒரு குழந்தைக்கு எப்போது பல் முளைக்கத் தொடங்கும்?
பதில் : ஒரு குழந்தை பிறந்ததி லிருந்து 6 மாதம் முதல் 1 ஆண்டு வரை முதல் பல் முளைக்கத் தொடங்கும். முதல் பல் வாயில் வரத் தொடங்கிய நாள் முதல் பல் துலக்க தொடங்கலாம்.
கேள்வி : குழந்தை பிறந்து 6-12 மாதத்தில் முதல் பல் முளைக்கும் என்கிறார்கள். ஆனால் என் உறவினரின் குழந்தைக்கு பிறந்த உடனேயே பற்கள் இருந்தது. அது எப்படி?
பதில் : அரிய நிகழ்வாக ஒரு சில குழந்தைகளுக்கு பிறந்த உடனேயே பற்கள் இருக்கலாம் இது வழக்கமாக வளரும் பற்கள் இல்லை.இதை பிறப்பு பற்கள் நேட்டல் டீத் (Natal teeth) என்பர் அல்லது பிறந்ததிலிருந்து 30 நாட்களுக்குள் முளைக்கலாம். அதை Neo Natal teeth என்பர். அது வெகு சில நாட்களில் விழுந்து விடும்.இந்த மாதிரியான பற்களால் நாக்கு, உதடு போன்ற இடங்களில் உராய்வினால் புண் ஏற்படலாம்.அவ்வாறு இருந்தால் பற்களை எடுக்க வேண்டியது வரும்.
பற்குச்சி
வேள்வி : பல் துலக்க பயன் படுத்தும் பற்குச்சியை (Tooth brush) எவ்வளவு நாளுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்.
பதில் : 3 மாதத்திற்கு ஒரு முறை பற்குச்சியை (Tooth brush) மாற்றப்பட வேண்டும்
கேள்வி : ஒரு நாளில் எத்தனை முறை பல் துலக்க வேண்டும்?
பதில் : ஒவ்வொரு நாளும் காலை எழுந்தவுடன் ஒரு முறையும், இரவு உணவு உண்டு படுக்கைக்கு செல்லும் முன்பும் பல் துலக்க வேண்டும். பற்பசையை (Tooth paste) ஒரு சிறு பட்டாணி அளவுக்கு எடுத்தால் போதும் அதுவே பல் துலக்க போதுமானதாகும்.
கேள்வி : வயதானால் பற்கள் தானாக கொட்டி விடுமா?
பதில் : வயது மூப்பின் போது பல் தேய்வு நடக்கலாம், ஆனால் பற்கள் விழாது பற்கள் ஆடி விழுகிறதெனில், ஈறு சம்பந்தமான நோய் உள்ளது என்று பொருள், உடனே பல் மருத்துவரை பார்க்க வேண்டும்
கேள்வி : ஒரு 7 வயது சிறுவனுக்கு விளையாடும்போது அடி பட்டு, பல் விழுந்து விட்டது. ஒரு சிலர் சின்ன பையன் தான் பல் முளைத்து விடும் என்கிறார்கள். இது உண்மையா?
பதில் : பொதுவாக 7 வயது முதல் 14 வயது வரை கலப்பு பற்கள் இருக்கும் (Mixed dentition stage) அதாவது பால் பற்களும் இருக்கும், நிரந்தர பற்களும் இருக்கும்.
நிரந்தர பற்களில் 7 வயதில் முன் பற்கள் (Incisor teeth) முளைக்கத் தொடங்கும், அப்போது வேறு பால் பற்களும் இருக்கும். எனவே அடிபட்டு விழுந்தது பால் பற்கள் எனில், புதிய பற்கள் முளைக்கும்.இதுவே விழுந்து முளைத்து நிரந்தர பற்கள் என்றால் வேறு பற்கள் முளைக்காது.
கேள்வி: ஒரு வேளை நிரந்தர பற்களை சிறு வயதிலேயே இழந்து விட்டால் வேறு மாற்று பற்களை வைக்க இயலுமா?
பதில்: நிச்சயமாக முடியும், வளர் பருவத்தில் இருந்தால் முதலில் தற்காலிக பற்களைப் பொருத்தலாம்.பின்பு 18 வயது நிரம்பிய பின் Implant எனப்படும் நிரந்தர வகை பற்களை பொருத்தலாம்.
பல் சீரமைப்பு
கேள்வி: சிறு வயதில் பற்கள் வரிசையாக இல்லாமல் இருந்தாலோ பல் வரிசை தூக்கிய படி இருந்தாலோ அதை சரி செய்ய இயலுமா? எந்த வயதில் அதை செய்ய வேண்டும்
பதில்: பல் சீரமைப்பு சிகிச்சையின் மூலம் பற்களின் வரிசையை க்ளிப் (Braces) மூலம் சரி படுத்தலாம்.தற்போது Aligners எனப்படும் கம்பிகள் இல்லாத முறையும் பிரபலமாகி வருகிறது.இதன் மூலமும் பற்களின் வரிசையை சீர்படுத்த முடியும்.
13-18 வயது வரை அதற்கு சரியான காலம்.ஆனால் ஈறுகள் சரியான வகையில் பராமரிக்கப்பட்டால் 40 வயது வரை கூட பல் சீரமைப்பு சிகிச்சையை செய்யலாம்.
