சென்னை, டிச. 21– ரயில்வே முன்பதிவு பட்டியலை இனி 10 மணி நேரத்திற்கு முன்பே தெரிந்து கொள்ளலாம் என ரயில்வே துறை உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவின் மிகவும் முக்கிய பொது போக்குவரத்தாக ரயில்கள் இருந்து வருகின்றன. மாவட்டங்கள் மட்டும் இன்றி வெளி மாநிலங்களுக்கு செல்ல ரயில்கள் மிகவும் சிறந்ததாக இருக்கிறது.
இதற்காக, மக்கள் போட்டி போட்டு முன்பதிவு செய்வது வாடிக்கை. ஆனால், பயணச்சீட்டு கிடைத்துவிட்டதா இல்லையா என்பதை அறிய மக்கள் ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்பு வரை காத்திருக்க வேண்டும்.
முன்பதிவு பட்டியல்
இந்நிலையில், முன்பதிவு அட்டவணையை 8 மணி நேரத்துக்கு முன் வெளியிட வேண்டும் என பயணிகள் சங்கங்கள் கோரிக்கை விடுத்து வந்தன. அந்த கோரிக்கையை ஏற்று அனைத்து மண்டல ரயில்வேயும் கடந்த ஜூலையில் இருந்து 8 மணி நேரத்துக்கு முன் அட்டவணையை வெளியிட்டு வருகின்றன.
இந்தநிலையில், ரயில்வே முதல் முன்பதிவு பட்டியல் தயாரிக்கும் நேரத்தில் பெரிய மாற்றம் செய்துள்ளது. அதன்படி, தற்போது, ரயில் புறப்படுவதற்கு 10 மணி நேரம் முன்னதாகவே அதுகுறித்தான தகவலை தெரிந்து கொள்ளலாம்.
அதன்படி, காலை 5 மணி முதல் மதியம் 2 மணி வரை புறப்படும் ரயில்கள் இந்த ரயில்களுக்கான முதல் பட்டியல் ரயில் புறப்படுவதற்கு 10 மணி நேரம் முன்பே வெளியிடப்படும். உதாரணமாக காலை 10 மணிக்கு ரயில் இருந்தால், இரவு 12 மணிக்கே பட்டியல் வெளியாகும்.
மதியம் 2 மணிக்கு பிறகு புறப்படும் ரயில்கள் பிற்பகல் 2.01 மணி முதல் இரவு 11.59 மணி வரை புறப்படும் ரயில்கள், மற்றும் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை புறப்படும் ரயில்களுக்கும் இதே விதி. இவற்றுக்கும் 10 மணி நேரம் முன்பே பட்டியல் வரும்.
இதனால் பயணிகள் தங்கள் டிக்கெட் நிலை பற்றி முன்கூட்டியே தெளிவாக தெரிந்து கொள்ளலாம். இந்த மாற்றம் பயணிகளின் கவலையை குறைத்து, பயணத்தை நன்றாக திட்டமிட உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
