தலச்சேரி, டிச. 21– கேரள மாநிலம் கண்ணூர் அருகே, மேனாள் மார்க்சிஸ்ட் கவுன்சிலர் மற்றும் அவரது குடும்பத்தினரை வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயன்ற வழக்கில், பாஜக கவுன்சிலர் உட்பட 10 பேருக்கு 36 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
கண்ணூர் மாவட்டம் தலச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டர் மற்றும் தலச்சேரி நகரசபையின் மேனாள் கவுன்சிலர் ஆவார்.
கடந்த 2007ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி இரவு, ராஜேஷின் வீட்டிற்குள் புகுந்த ஒரு கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தியது. அப்போது அக்கும்பல் வெடிகுண்டுகளை வீசியதோடு, ராஜேஷ், அவரது அண்ணன் மற்றும் தாயாரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றது. அரசியல் முன்விரோதம் காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
நீதிமன்றத் தீர்ப்பு
இந்த கொடூரச் சம்பவம் குறித்து தலச்சேரி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் பாஜகவைச் சேர்ந்த பிரசாந்த் என்பவர் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு தலச்சேரி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீண்ட காலமாக நடைபெற்று வந்தது. வழக்கின் அனைத்து தரப்பு விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட பிரசாந்த் உட்பட 10 பேரும் குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு தலா 36 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பதவி இழக்கும் கவுன்சிலர்
தண்டனை பெற்றுள்ளவர்களில் ஒருவரான பிரசாந்த், சமீபத்தில் நடைபெற்ற கேரள உள்ளாட்சித் தேர்தலில் தலச்சேரி நகரசபை கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.
தற்போது நீதிமன்றம் அவருக்கு நீண்ட கால சிறை தண்டனை விதித்துள்ளதால், சட்ட விதிமுறைகளின்படி அவரது கவுன்சிலர் பதவி பறிபோகும் சூழல் உருவாகியுள்ளது.
