திருச்சி, டிச.21– திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரி இந்திய மருந்தியல் ஆசிரியர்களுக்கான கூட்டமைப்பு இணைந்து “நவீன மருத்துவத்தின் மூலம் பாரம்பரிய மருத்துவமான சித்தமருத்துவத்தில் மறுமலர்ச்சி” என்ற தலைப்பிலான கருத்தரங்கம் மூலிகை மருத்துவத்துறையின் சார்பில் 1912.2025 அன்று நடைபெற்றது. பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை தலைமையில் நடைபெற்ற இச்சிறப்புக் கருத்தரங்கை தஞ்சாவூர் மாவட்ட அரசு மருத்துவமனையின் மேனாள் சித்த மருத்துவ அலுவலர் மரு. எஸ்.கோவிந்தராஜ் துவக்கி வைத்து சிறப்பித்தார். திருச்சி மாவட்ட அண்ணல் காந்தி அரசு மருத்துவமனையின் மேனாள் சித்த மருத்துவ அலுவலர் மருத்துவர் காமராஜ் மற்றும் பெரியார் மருந்தியல் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் கோ.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இத்துவக்கவிழா நிகழ்ச்சிக்கு மூலிகை மருந்தியல் துறை பேராசிரியர் முனைவர் சி.விஜயலெட்சுமி வரவேற்புரை யாற்றினார். பேராசிரியர் கே.எஸ். பிரகதி நன்றி கூறினார்.
துவக்க விழாவினை தொடர்ந்து மரு. எஸ். கோவிந்தராஜ் தமது முதல் அமர்வாக “சித்த மருத்துவத்தின் பாரம்பரியம்” குறித்து உரையாற்றினார். இதில் மருத்துவ முறைகளில் முதலில் தோன்றிய மருத்துவம் சித்த மருத்துவம் என்றும் இயற்கையோடு இணைந்த வாழ்வை ஆறறிவு இல்லாத விலங்குகள் இன்னும் கடைபிடித்து வருகின்றன. ஆனால், மனிதன் இயற்கையை ஒட்டிய வாழ்க்கை முறையினை தவிர்த்ததால்தான் நோயின் பெருக்கம் அதிகமாகியிருக்கின்றது. வாதம், பித்தம், கபம் என்ற மூன்று பகுப்பினைக் கொண்ட உடலிற்கு தேவையான மருத்துவத்தினை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வகுத்துத் தந்தவர்கள் சித்தர்கள் என்றும் 4448 நோய்களை அடையாளப்படுத்திய சித்த மருத்துவத்தில் உயிர்க்கொல்லி நோய்களுக்கும் மருந்துகள் உள்ளன என்றும் அதனை மருத்துவ உலகிற்கு அடையாளப்படுத்தும் ஆராய்ச்சியினை இளம் மாணவர்கள் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து இரண்டாம் அமர்வாக திருச்சி மாவட்ட அண்ணல் காந்தி அரசு மருத்துவமனையின் மேனாள் சித்த மருத்துவ அலுவலர் மரு. எஸ்.காமராஜ் “சமையலறையே மருத்துவமனை” என்ற தலைப்பில் மாணவர்களிடையே உரையாற்றினார். ஒவ்வொரு குடும் பத்தின் முதல் சித்த மருத்துவர்கள் அம்மாதான் என்றும் அவர்களின் அக்கறை கலந்த சமையலும் உணவு பரிமாற்றமும்தான் நோயினை தீர்க்கக்கூடியது என்றும் உரையாற்றினார்.
சமையலறையிலுள்ள, நமக்கு நன்கு தெரிந்த மிளகு, சீரகம், வெந்தயம், இஞ்சி, பூண்டு போன்ற இயற்கை சார்ந்த, மருத்துவ குணங்கள் அதிகம் இருக்கக்கூடிய மூலிகைகளை தினசரி உணவில் பயன்படுத்தி வந்தால் மருத்துவமனை என்பதே தேவையில்லை என்றும் பச்சைக் காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள் போன்றவற்றை நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்துவதோடு புகைப்பிடித்தல், மது அருந்துதல், போதை பழக்கங்கள் போன்றவற்றை தவிர்த்து உண்ணும் உணவு
செரிக்கும் அளவிற்கு உடலுழைப்போடு செயல்பட்டால் நோய் என்பது நம்மை அணுகாது என்றும் உரையாற்றினார். நா, நிறம், மொழி, விழி, ஸ்பரிசம், மலம், சிறுநீர் மற்றும் நாடி என்ற 8 தேர்வு முறைகளை கொண்டு நோயினை சரியாக கணித்த சித்த மருத்துவம் அதற்கான தீர்வாக உண்ணக்கூடிய அகிய மூலிகைகளையும் நமது சமையலறைக்கு வழங்கியுள்ளது. நரை, திரை, மூப்பு, பிணி, இறப்பினை மட்டுப்படுத்தும் ஆற்றல் சித்தமருத்துவத்திற்கு உண்டு என்றும் உரையாற்றி கருத்தரங்கில் பங்கு கொண்டுள்ள மாணவர்கள் நவீன தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி மறைந்து கிடக்கும் அரிய மூலிகைகளின் மருத்துவப் பயன்களை மருத்துவ உலகிற்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மேலும் மூலிகை மருத்தியல் துறையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட மூலிகை தயாரிப்புக் கண்காட்சியினை பார்வையிட்ட மருத்துவர்கள் மரு. கோவிந்தராஜ் மற்றும் மரு. காமராஜ் ஆகியோர் வெகுவாகப் பாராட்டினர். அதனைத் தொடர்ந்து சித்த மருத்துவம் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளை மாணவர்கள் சமர்ப்பித்தனர். இக்கருத்தரங்கின் நிறைவு விழா மதியம் 3 மணியளவில் நடைபெற்றது. மரு. எஸ்.காமராஜ் நிறைவு விழா உரை நிகழ்த்தினார். அவர் தமது உரையில் காலை முதல் மாலை வரை மிகவும் நேர்த்தியாக சித்த மருத்துவ கருத்தரங்கை சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்திய கல்லூரியின் நிர்வாகத்தினர், முதல்வர், பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் கருத்தரங்கை நல்ல முறையில் பயன்படுத்திய பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் தமது பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார். மேலும் மாணவர்கள் தங்களது குறிக்கோளை நோக்கி, கடின உழைப்போடு இடைவிடாது முயற்சித்தால் வாழ்வில் வெற்றி நிச்சயம் என்பதனை தாம் மேற்கொண்ட சித்த மருத்துவ அனுபவங்கள் மூலம் பகிர்ந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் தேசிய சித்தா நாளினை முன்னிட்டு நடை பெற்ற கருத்தரங்கின் ஆய்வுக்கட்டுரைகள் அடங்கிய புத்தகம் வெளியிடப்பட்டது. மேலும் தமிழர் தலைவரின் 93ஆவது பிறந்ததாளினை முன்னிட்டு நடைபெற்ற குருதிக் கொடை முகாமில் குருதி (இரத்த) தானம் செய்த 31 மாணவர்களுக்கும் தமிழ்நாடு அரசின் தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் கணக்கெடுப்பினை மேற்கொண்ட இளநிலை மருந்தியல் நான்காமாண்டு மாணவர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்களையும் வாய்மொழி ஆய்வுக்கட்டுரைகள் (oral presentation) மின் ஆய்வுக்கட்டுரைகள் (e-poster presentation) சமர்ப்பித்தல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் கலந்து கொண்டவர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது.
முன்னதாக மூலிகை மருந்தியல் துறைத் தலைவர் முனைவர் எஸ்.ஷகிலா பானு வரவேற்புரையாற்றினார். பேராசிரியர் எம்.சாந்தா நன்றி கூறினார். சித்த மருத்துவத்தின் மறுமலர்ச்சி குறித்து நடைபெற்ற இக்கருத்தரங்கில் தாவரவியல், சித்த மருத்துவம், ஆயுர்வேதா, மருந்தியல், மருத்துவம் சார்ந்த 27 கல்வி நிறுவனங்களிலிருந்து மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஆய்வறிஞர்கள் என மொத்தம் 152 பேர் இணையம் மற்றும் நேரடியாக கருத்தரங்கில் பங்கு கொண்டு 49 ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
