சென்னை, டிச. 21– தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த மழைப்பொழிவு தணிந்துள்ள நிலையில், வரும் நாட்களில் உறைபனி மற்றும் வறண்ட வானிலை நிலவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மய்யம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
பனிமூட்டம் – குளிர்பனி
கடந்த இரண்டு நாட்களாக தென் மாவட்டங்களில் மழையைத் தந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தற்போது குமரிக்கடல் பகுதி யிலிருந்து நகர்ந்து, இலங்கை மற்றும் நில நடுக்கோட்டுக்கு தெற்கே நிலை கொண்டுள்ளது. இது சுமத்ரா தீவுப் பகுதிக்குச் சென்று, அங்குள்ள காற்றுச் சுழற்சியுடன் இணையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காற்றழுத்த தாழ்வுப்பகுதியின் நகர்வு காரணமாக வானிலையில் கீழ்க்கண்ட மாற்றங்கள் ஏற்படும்.
உள் மாவட்டங்கள்: கடலோரப் பகுதிகளில் லேசான பனிமூட்டம் இருந்தாலும், உள் மாவட்டங்களில் பனிப்பொழிவு மிக அதிகமாக இருக்கும்.
எல்லை மாவட்டங்கள்: கருநாடகா மற்றும் கேரள எல்லை மாவட்டங்களில் கடும் மூடுபனி நிலவும். சில இடங்களில் இது மேகமூட்டமாக மாறி மழையாகவும் பெய்ய வாய்ப்புள்ளது.
நீலகிரி மாவட்ட உறைபனி: மேகங்கள் இல்லாத தெளிவான வானிலை நிலவும் போது, பனிப்பொழிவில் குளிர் காற்று நுழைந்தால் அது உறைபனியாக மாற வாய்ப்புள்ளது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் வரும் நாட்களில் உறைபனி நிலவக்கூடும்.
மழைக்கான வாய்ப்பு
(டிசம்பர் 25 – 28) இலங்கை அருகே ஏற்படும் மேக உருவாக்கம் காரணமாக வானிலை மீண்டும் மாறும்.
டிசம்பர் 25 – 27: தமிழ்நாட்டில் மேகமூட்டமும், குளிர் பனியும் நீடிக்கும்.
டிசம்பர் 28: உறைபனி விலகி, குளிர் காற்றுடன் கூடிய மேகமூட்டம் உருவாகி, மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 19.12.2025 முதல் டிசம்பர் 22ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னையில் வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை நேரங்களில் லேசான பனிமூட்டம் நிலவக்கூடும்.
