வடநாட்டில் இல்லாத கல்வி நிலையங்கள் இங்கு இருப்பதற்குக் காரணம் திராவிடர் ஆட்சி தான்! திராவிட மாடல் ஆட்சி தான்!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சாதனைகள் தொடர “திராவிட மாடல் அரசு”க்கு வாக்களிக்க
கழகத் தலைவர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்து உரையாற்றினார்

• உளுந்தூர்பேட்டையில் இதற்கு முன் இத்தனை பள்ளிக்கூடங்கள் உண்டா?
• விழுப்புரத்தில் இதற்கு முன் இத்தனைக் கல்லூரிகள் உண்டா?

உளுந்தூர்பேட்டை. டிச. 21–  ”இந்தக் கூட்டத்தின் நோக்கம் என்ன? நாங்கள் எதற்காக இப்படி அலைந்து கொண்டிருக்கிறோம்? என்ன காரணம்? இதற்கு முன் நடந்த சட்டமன்றத் தேர்தல்களுக்கும், 2026 இல் வரப்போகின்ற தேர்தலுக்கும் என்ன வேறுபாடு? எனக் கேள்விகள் கேட்டு, ”இது வெறும் ஓட்டுக்கான தேர்தல் அல்ல, தமிழ் நாட்டுக்கான தேர்தல் என்பதைச் சொல்வதற்காகவும் தான்”  என்பதைச் சுட்டிக்காட்டி கழகத் தலைவர் உரையாற்றினார்.

உளுந்தூர்பேட்டை திராவிடர் கழகம் சார்பில், “இதுதான் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி; இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி” எனும் தலைப்பில் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரும் தொடர் கூட்டங்களில் ஒன்றாக 16.12.2025 அன்று மாலை 6 மணியளவில் உளுந்தூர்பேட்டை மணிக்கூண்டு அருகில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் கோ.சா.பாஸ்கர் தலைமை ஏற்று வழி நடத்தினார். மாவட்டச் செயலாளர் பா.முத்து அனைவரையும் வரவேற்று சிறப்பித்தார். திராவிடர் கழகம் சார்பில் மாவட்டக் காப்பாளர் ம.சுப்பராயன், மருத்துவர் அணி மாநிலச் செயலாளர் கோ.சா.குமார், மாவட்டச் செயலாளர் ச,சுந்தரராஜன், மாவட்டத் துணைத் தலைவர் குழ.செல்வராஜ், நகர்மன்றத் துணைத் தலைவர் வைத்தியநாதன், தி.மு.க. நகரச் செயலாளர் தா.டேனியல் ராஜ், ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர் ஜெய்சங்கர், வி.சி.க.மாவட்டச் செயலாளர் கு.அறிவுக்கரசு, ஆதித் தமிழர் கட்சி மாவட்டச் செயலாளர் க.செந்தில்குமார், நகரச் செயலாளர் மருது உள்ளிட்டோர் முன்னிலை வகித்துச் சிறப்பித்தனர்.

எழுச்சிகரமாக நடைபெற்ற விழுப்புரம் கூட்டம் முடிந்து கழகத் தலைவர் தமது பிரச்சாரப் படையுடன் உளுந்தூர்பேட்டைக்கு வருகை தந்தார். தோழர்கள் மிகுந்த எழுச்சிகரமான வரவேற்பை வழங்கினர். அதைத் தொடர்ந்து, தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் முன்னிலை வகித்து சுருக்கமாக உரையாற்றினார். முன்னதாக கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தொடக்க உரை ஆற்றினார். அதைத் தொடர்ந்து பெரியார் உலகம் நிதியளிக்கும் நிகழ்வு நடைபெற்றது. பின்னர் முன்னிலை வகித்துச் சிறப்பித்த அனைத்துக் கட்சி பிரமுகர்களும் கழத் தலைவருக்கு மரியாதை செய்தனர். கழகத் தலைவர் முக்கியப் பிரமுகர்களுக்கு பயனாடை அணிவித்து மரியாதை செய்தார். பிரச்சாரப் பயணத்தில் கழகத் தலைவருடன் கலந்து கொண்டுள்ள மாநில ஒருங்கிணைப்பாளர்களான இரா.ஜெயக்குமார் மேடை நிருவாகத்தைக் கவனித்துக்கொண்டார். உரத்தநாடு இரா.குணசேகரன் கழகப் புத்தகங்களை அறிமுகம் செய்து, வாங்கிப் பயன்பெற மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து உரையாற்றினார். இறுதியாக கழகத் தலைவர் உரையாற்றினார்.

அவர் தமது உரையை நிகழ்ச்சியின் தலைப்பைச் சொல்லி, ”இந்தக் கூட்டத்தின் நோக்கம் என்ன? நாங்கள் எதற்காக இப்படி அலைந்து கொண்டிருக்கிறோம்? என்ன காரணம்? இதற்கு முன்னால் நடந்த சட்டமன்றத் தேர்தல்களுக்கும், 2026 இல் வரப்போகின்ற தேர்தலுக்கும் என்ன வேறுபாடு? எனத் தொடர்ச்சியாக கேள்விகள் கேட்டு, ”இது வெறும் ஓட்டுக்கான தேர்தல் அல்ல, தமிழ்நாட்டுக்கான தேர்தல் என்பதைச் சொல்வதற்காகவும் தான்” என்று பதில் சொல்லித் தொடங்கினார். பின்னர், இயக்க வரலாற்றில் உளுந்தூர்பேட்டையில் நடந்த ஒரு முக்கியமான நிகழ்வை விவரித்தார். அதாவது, “இங்கே ஒரு மணிக்கூண்டு இருக்கும்” என்று சொன்னவுடன் சட்டமன்ற உறுப்பினர் உள்பட மற்றவர்கள் ஆமாம் என்பதைப் போல தலையாட்டினர். அவர்கள் தலையாட்டுவதைப் பார்த்தவாறே, “இன்றைக்கு நகரத் தலைவர், எம்.எல்.ஏ.க்கள் என்று எல்லோரும் இருக்கிறார்கள். அன்றைக்கு அப்படி அல்ல. அப்போது எனக்கு வயது 12 இருக்கும். இங்கு நான் பேசினேன். இன்றைக்கு 93 என்று சொன்னார்கள். எனக்கு அந்த நினைவு வருவதில்லை. அப்போது எங்கள் மீது ’பொத்’ ’பொத்’ என்று கல் விழுந்தது. மண்ணை வாரி விட்டார்கள். ’கடவுள் இல்லை என்ற பிரச்சாரம் உளுந்தூர்பேட்டையில் செய்யக்கூடாது’ என்று சொன்னார்கள். நான் வழக்கறிஞர் ஆன பிறகு, கடலூர் நீதிமன்றத்தில் ஒருவர் மாலையுடன் வந்து தன்னுடைய வழக்கை நடத்த வேண்டும் என்று சொன்னார். நான், வழக்கு சரி, மாலை எதற்கு? என்று கேட்டேன். அதற்கு அவர், ’ரொம்ப நாளுக்கு முன் உளுந்தூர்பேட்டையில் நடந்த உங்க நிகழ்ச்சியில் நான் தான் கல்லுப் போட்டேன்’ என்று சொல்லி வருந்தினார். இன்றைக்கு இவ்வளவு நேரம் ஆன பிறகும் எல்லோரும் காத்திருக்கிறீர்கள்” என்று 79 ஆண்டுகளுக்கு முன் நடந்த திராவிடர் இயக்கத்தின் வேர் எங்கே இருக்கிறது என்றும், எதிர்த்தவர்களே மாலை போட வந்த திராவிடர் இயக்கத்தின் வெற்றி வரலாற்றையும் சுட்டிக்காட்டி, உளுந்தூர்பேட்டை மக்களை நெகிழவும், வியப்படையவும் வைத்தார்.

தொடர்ந்து திராவிடர் இயக்கம் எப்படிப்பட்ட அறிவுப் புரட்சி இயக்கம் என்பதைச் சொல்வதற்கு, “முடிவெட்டுகிறவன் பிள்ளை முடி வெட்டணும்; வெளுப்பவன் பிள்ளை வெளுக்கணும்; மலம் எடுக்கிறவன் பிள்ளை மலம் எடுக்கணும்; பார்ப்பான் மட்டும் படிக்கணுமாம்” என்று முகத்தில் அறைவது போலச் சொல்லி, அன்றைய கொடுமையான நிலையை உணர்த்தி, ”இதுதானே மனுதர்மம்?” என்றார். தான் ஆதாரம் இல்லாமல் சொல்லவில்லை என்பதைக் காட்டுவதற்காக, மனுதர்மம் புத்தகத்தையும் எடுத்துக் காண்பித்தார். மேலும் அவர், அந்த மனுதர்மத்தின் ஆதிக்கம் எப்படிப்பட்டது என்பதை இன்னமும் தெளிவாக்குவதற்காக, அன்றைக்கு மனுதர்மம் தான் அரசர்களையும் வழி நடத்தியது என்றும், மக்கள் அடிமைகளாக இருந்தனர் என்றும், பெண்கள் அடிமையிலும் அடிமைகளாக இருந்தனர் என்றும் சொல்லிவிட்டு, “இதைப் போராடி தலைகீழாக மாற்றியதுதான் நீதிக்கட்சி. அந்த நீதிக்கட்சியின் நீட்சிதான் இன்றைய திராவிட மாடல் அரசு” என்று பலத்த கைதட்டல்களுக்கிடையே கூறினார். மேலும் அவர், “நீதிக்கட்சிக்கு வயது 110; சுயமரியாதை இயக்கத்திற்கு வயது 100; திராவிடர் கழகத்திற்கு வயது 80; திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வயது 75” என்று வயதுகளைக் குறிப்பிட்டுச் சொல்லி, திராவிடர் இயக்கத் தொண்டின் வரலாற்று நீட்சியை நினைவுபடுத்தினார். தொடர்ந்து, ”உளுந்தூர்பேட்டையில் இதற்கு முன் இத்தனை பள்ளிக்கூடங்கள் உண்டா? விழுப்புரத்தில் இதற்கு முன் இத்தனை கல்லூரிகள் உண்டா?” என்று கேள்வி கேட்டு, ”வடநாட்டில் இல்லாத கல்வி நிலையங்கள் இங்கு இருப்பதற்குக் காரணம் திராவிடர் ஆட்சி தான்! திராவிட மாடல் ஆட்சி தான்!” என்று பதில் சொன்னார்.

அதன்பிறகு திராவிட மாடல் அரசின் பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கடந்த நான்கரை ஆண்டுகளில் நடைபெற்றுள்ள சாதனைகளைப் பட்டியலிட்டார். குறிப்பாக திராவிட மாடல் அரசு பெண் கல்விக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைப் பட்டியலிட்டார். அந்த சாதனைகள் எல்லாம் எப்படிப்பட்ட நெருக்கிடையில் நடைபெற்றது என்பதையும் சுட்டிக்காட்ட, ஒன்றிய அரசின் ஓரவஞ்சனையையும் சேர்த்துச் சொன்னார். தொடர்ந்து ஆளுநர் மூலம் கொடுத்த குடைச்சல்களும், அதிலிருந்து திராவிட மாடல் அரசு சட்டப்படியாக எப்படி மீண்டு வந்தது என்பதையும் சுட்டிக்காட்டி, இத்தனைக்கும் பிறகும் தமிழ்நாடு எல்லா துறைகளிலும் சாதனை படைத்து வருவதையும் விவரித்தார். எல்லாவற்றுக்கும் மேலாக, ”ஓட்டைத் திருத்துவதாகச் சொல்லி, ஓட்டைத் திருடுகிறார்கள்” என்று எஸ்.அய்.ஆர். பற்றியும் கடுமையாக விமர்சித்தார். இவையெல்லாம் போதாது என்று, சில மின்மினிப் பூச்சிகளும், பட்டாம்பூச்சிகள் சிலவும் வேடமிட்டு கொண்டு வந்திருப்பதை எடுத்துரைத்து, “வேடம் என்றாலே அதைக் கலைத்துத்தான் ஆக வேண்டும்” என்ற யதார்த்தத்தை படம் பிடித்துக் காட்டினார். தொடர்ந்து, காந்தி தேசிய 100 நாள் வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் பெயரையும் மாற்றி, திட்டத்தையே உருக்குலைத்து, மாநில உரிமைப்பறிப்பு செய்த ஒன்றிய அரசைக் கண்டித்துப் பேசினார். அண்ணல் காந்தி மீது ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.விற்கு இருக்கும் வன்மத்தை விளக்கி, எது திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி? எது ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.ஆட்சி? என்று ஆழமாக விளக்கி இறுதியாக தனது உரைவீச்சின் சாரமாக, ”திராவிட மாடல் அரசுக்கு வாக்களிக்கச் சொல்வது என்பது தனி மனிதர் ஸ்டாலினுக்காக அல்ல; இங்கே மேடையில் இருக்கும் எங்களுக்காக அல்ல; உங்கள் பிள்ளைகளுக்காக! உங்கள் பேரப்பிள்ளைகளுக்காக! நம் எதிர்கால சந்ததிகளுக்காக” என்று திராவிட இயக்கத்தின் நீண்ட காலக் கனவைச் சொல்லி உரையை நிறைவு செய்தார். தொடர்ந்து, தோழர்கள் அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு பயணத்தைத் தொடர்ந்து, நள்ளிரவுக்கு மேல் சேலம் ஆத்தூரில் முகாமிட்டார்.

நிகழ்வின் இறுதியாக ஒன்றியத் தலைவர் செல்வ.சக்திவேல் நன்றியுரை கூறி நிறைவு செய்தார். பொதுக்குழு உறுப்பினர் தி.பாலன், மாவட்ட மகளிரணித் தலைவர் பழனியம்மாள் கூத்தன், பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் எழிலரசன், ப.க. பொறுப்பாளர் வேல்முருகன், மாவட்ட இளைஞரணித் தலைவர் கரிகாலன், மாவட்ட இளைஞரணிச் செயலாளர் முத்துவேல் உள்ளிட்ட தோழர்களும், உளுந்தூர்பேட்டை, சுற்றுவட்டார மக்கள், அனைத்துக் கட்சித் தோழர்கள் வருகை தந்து கழகத் தலைவரின் உரையைக் கேட்டுப் பயன்பெற்றனர். கூட்டம் தொடங்குவதற்கு முன் மழை பொழிந்து விட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *