மக்களைத் திரட்டுவோம்; நியாயங்கள் கேட்போம், நியாயங்களைத் தோற்க விட மாட்டோம்!
உங்களிடம் அதிகாரம் இருக்கிறது என்பதற்காக அதைத் தவறாக பயன்படுத்தாதீர்கள்!
சென்னை சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை
சென்னை, டிச.21 தமிழ்நாடு பெரியார் மண்ணாக இருக்கிறது. அதனால், இப்படியெல்லாம் குறுக்கு வழியில் தி.மு.க. ஆட்சியைத் தடுக்கலாம் என்று நினைக்கிறீர்கள். நீங்கள் இதை சொல்ல சொல்ல, அடிக்க அடிக்க எழும்பும் பந்து போலத்தான், இந்த உணர்வுகள் வரும், மக்களைத் திரட்டுவோம்; நியா யங்கள் கேட்போம், நியாயங்களைத் தோற்க விட மாட்டோம். உங்களிடம் அதிகாரம் இருக்கிறது என்பதற்காக அதைத் தவறாக பயன்படுத்தாதீர்கள் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.
- மக்களைத் திரட்டுவோம்; நியாயங்கள் கேட்போம், நியாயங்களைத் தோற்க விட மாட்டோம்!
- உங்களிடம் அதிகாரம் இருக்கிறது என்பதற்காக அதைத் தவறாக பயன்படுத்தாதீர்கள்!
- சென்னை சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை
- பார்ப்பனர்கள் சாப்பிட்ட எச்சில் வாழை இலையில் ‘‘அங்கப் பிரதட்சணம்!!’’
- துணைவேந்தர்களை நியமிக்க முடியாமல் முட்டுக்கட்டை – தேக்க நிலை!
- ‘‘நாம் வேதத்தை காப்பாற்றினால், வேதம் நம்மை காப்பாற்றுமாம்!’’
- ‘தெலுங்கு பேசும் மக்கள்குறித்து அவதூறாகப் பேசினார்!
- நீதியை திசை தடுமாறச் செய்த செயல்!
- நீதித்துறைகளில் உள்ள ‘களைகளும், கறைகளும்’ களையப்படவேண்டும்!
- ‘‘முகவுரை’’, ‘‘முகாரி’’ பாடுகிறார்!
- மக்கள் சுதந்திரம், பாதுகாப்பு மிகவும் முக்கியம்!
- மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் மதிப்பைக் கெடுக்க நினைக்காதீர்கள்!
- எதிர்க்கட்சிகளைத் தோற்கடிப்பதற்கு இதுவே போதும்; வேறு எதுவும் தேவையில்லை!
- நியாயங்கள் தோற்கக் கூடாது பயணங்கள் முடிவதில்லை!
கடந்த 11.12.2025 அன்று சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் ‘‘மதக் கலவரங்களுக்கு உயர் நீதித் துறை ஆயுதம் ஆகலாமா?’’ என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை ஆற்றினார்
அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
இன்றைக்குக் கிராமங்களில்தான் ஜாதிக் கலவரங்கள் அதிகம். இந்த ஜாதிக்கும், அந்த ஜாதிக்கும்தான் கலவரம். கோயில் திருவிழாவின் போதுதான் கலவரம். இதை அத்தனையும் சொல்கிறார்.
‘Subject to Public Order, Morality and Health’ என்ற அரசியல் கட்டுப்பாடுகள் என்னாயிற்று? அரசியலமைப்புச் சட்டத்தினுடைய விதி என்னாயிற்று? பறந்துவிட்டதா? அல்லது நீதிபதிகளுக்கு மறந்துவிட்டதா?
பார்ப்பனர்கள் சாப்பிட்ட எச்சில் வாழை இலையில் ‘‘அங்கப் பிரதட்சணம்!!’’
‘‘தேவையில்லை. ஒலி பெருக்கிப் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதிக்க வேண்டும்’’ என்று நீதிபதி கூறுகிறார். இதற்கு என்ன அர்த்தம்? ஒலி பெருக்கியைப் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதிக்கவேண்டும். இதைச் சொல்லி, உள்ளே நுழைகிறார்! அவ்வதிகாரிகள் அனுமதி வழங்கும் கேள்வி எழவில்லை. பின் உணவு கொண்ட பின், பார்ப்பனர்கள் சாப்பிட்ட எச்சில் வாழை இலையில் ‘‘அங்கப் பிரதட்சணம்’’ செய்யும் அடிப்படை உரிமையை நன்றாகப் பயன்படுத்த முடியும். இதில் அதிகாரிகள் தலையிட முடியாதாம்!
அரசியலமைப்புச் சட்டத்தின் கூறுகள் 25, 26 இன்படி இது சரியா?
ஆகவே, இதைத் தடுக்க முடியாது என்றெல்லாம் சொல்லி, இப்படி ஒரு ஆணையைக் கொடுத்தார். இதனை எதிர்த்து வழக்கு போட்டனர் வாஞ்சிநாதனும், மற்றவர்களும். உடனே, அவர் மேல அந்த எரிச்சல், கோபம் அவருக்கு. அந்த வழக்கின் விசாரணையில், அவருடைய தீர்ப்புக்குத் தடை வழங்கப்பட்டது.
ஏற்கெனவே, உச்சநீதிமன்றத்திற்குப் போயி ருக்கக்கூடிய அளவிற்கு வந்த சூழ்நிலைகளை எல்லாம் மாற்றி, இது 2024. அடுத்தது 2025.
துணைவேந்தர்களை நியமிக்க முடியாமல் முட்டுக்கட்டை – தேக்க நிலை!
இந்த 2025 இல், தமிழ்நாடு அரசுக்குச் சங்க டத்தை உருவாக்குவதற்காக மிகப்பெரிய அளவிற்கு துணைவேந்தர்கள் நியமனம். அதனுடைய விளைவுதானே இன்று வரையில்10, 11 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களே இல்லாமல் இருப்பதற்குக் காரணம்? வெறும் ஆர்.என். ரவி மட்டும் காரணமல்ல, ஆளுநர் மட்டும் காரணமல்ல நண்பர்களே! முழுக்க இந்தத் தீர்ப்பின் அடிப்படையிலேயும் துணைவேந்தர்களை நியமிக்க முடியாமல் முட்டுக்கட்டை – தேக்க நிலை இருக்கிறது.
தமிழ்நாட்டில் எத்தனைப் பல்கலைக்கழகங்கள் சரி வர நடத்தப்பட முடியவில்லை. எவ்வளவு பெரிய மோசமான ஒரு சூழ்நிலை.
மத உணர்வுகளை அடிப்படையாக வைத்துக்கொண்டு நீங்கள் நடந்தால், அரசியலமைப்புச் சட்டத்தையே, ஓர் அரசாங்கத்தையே முடக்க நினைப்பது. ‘‘மாவட்ட ஆட்சியரைக் கூப்பிடுங்கள், உள்துறை செயலாளரைக் கூப்பிடுங்கள்’’ என்று சொன்னால், என்ன அர்த்தம்? நீங்கள் தயவு செய்து எண்ணிப்பாருங்கள்.
இந்த ஆண்டே 5 ஆம் மாதத்தில் ஒன்று, 7 ஆம் மாதத்தில் ஒன்று.
‘‘நாம் வேதத்தை காப்பாற்றினால், வேதம் நம்மை காப்பாற்றுமாம்!’’
இங்கே நீதிபதி அய்யா சொன்னதுபோல, யார் குற்றவாளிகளைக் காப்பாற்றுகிறார்கள்; வேதம் படித்தால், வேதம் நம்மை காக்கும். சென்னையில் இருக்கும் ஓர் அறக்கட்டளையில் உரையாற்றும்போது அவர், ‘‘நாம் வேதத்தை காப்பாற்றினால், வேதம் நம்மை காப்பாற்றும்’’ என்று. இப்படி எல்லாம் சொல்லி கொண்டிருக்கும்போது, அரசியலமைப்புச் சட்டமாக மனுதர்மத்தைத் தான் வைக்கவேண்டும் என்று சொல்கி றார்கள்.
ஒரு நிகழ்வுபற்றி சொல்கிறேன். சென்னையில் ஒரு கூட்டம் நடக்கிறது. ஆர்,எஸ்,எஸ்,காரர்கள் எல்லாம் கலந்துகொண்ட நிகழ்ச்சி அது. அதுகுறித்து பத்திரிகையில் செய்தியாக வெளிவந்திருக்கிறது. நீதிபதியாக இருக்கக்கூடிய ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்ந்திருக்கிறார். அவரை உரையாற்ற அழைக்கிறார்கள். அவரும் உரை யாற்றுகிறார். அப்படி உரையாற்றும்போது, ‘‘எனக்கு ஸநாதனம் என்பதெல்லாம் மிகவும் முக்கியம். என்னதான் செய்தாலும், ஸநாதனம் நெறிகள் அப்படியே நடக்கும் என்பதற்கு ஒர் உதாரணம் சொல்கிறார்.
‘தெலுங்கு பேசும் மக்கள்குறித்து அவதூறாகப் பேசினார்!
திரைப்பட நடிகை திருமதி கஸ்தூரி என்பவர், அ.தி.மு.க.வில் இருந்து பிறகு பா.ஜ.க.வுக்குச் சென்றவர். சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கம் அருகில், ‘‘பிராமணர்களைக் காப்பாற்ற’’ நடந்த போராட்டத்தில், பங்கேற்று ‘தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக’ சென்னை, மதுரை காவல் ஆணையர் அலுவலகங்களில் புகார்கள் அளிக்கப்பட்டன. கஸ்தூரி மீது சென்னை எழும்பூர், மதுரை திருநகர் காவல் நிலையங்களில் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. நடிகை கஸ்தூரியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து, அவரை கைது செய்ய, தனிப்படையினர் தேடி வந்தனர். இதனிடையே, அய்தராபாத்தில் இருந்த நடிகை கஸ்தூரியை தனிப்படைக் காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர், சென்னை அழைத்து வந்து, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
ஒரு நாளோ, இரண்டு நாள்களோதான் சிறைக்குள் இருந்தார் அந்த நடிகை!
‘‘தொலைக்காட்சியில் இந்தச் செய்தியைப் பார்த்துவிட்டு, என்னுடைய (ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்களுடைய) மனைவி, அந்த நடிகைக்கு ஜாமீன் கொடுங்கள், பாவம்’’ என்று சொன்னார்.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேறு ஒருவர்.
‘‘எங்க வீட்டு அம்மா ஃபோன்மூலம் சொன்னதைக் கேட்டு, உடனே அந்த நடிகைக்கு ஜாமீன் வழங்கினார்’’ என்று பெருமையாகச் சொன்னார் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்.
நீதியை திசை தடுமாறச் செய்த செயல்!
இது நியாயம்தானா? வேறு வீட்டுப் பெண்கள் சொன்னால், விட்டுவிடுவார்களா? இது நீதியை திசை தடுமாறச் செய்த செயல் அல்லவா?
அந்த நிகழ்வில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உரையாற்றிய செய்தி, பத்திரிகைகளில் வந்திருக்கின்றது. அவர் எடுத்துக்கொண்ட பதவிப் பிரமாணத்திற்கு நியாயமா? நீதியை பச்சாதாபத்திற்கும், பரிந்துரைக்கும் ஆளாக்கிய நிலை ஏற்கத்தக்கதா?
அடுத்து திருப்பரங்குன்றத்தில் நடந்த சில நிகழ்வு களை வைத்து, அவருடைய எண்ணங்கள் எப்படி இருக்கின்றது என்பது மிகத் தெளிவாகத் தெரிந்தது.
பயிர்கள் பாதுகாக்கப்படுகிற முறையிலேயே களைகளும் நீக்கப்படவேண்டும்;
நீதித்துறைகளில் உள்ள ‘களைகளும், கறைகளும்’ களையப்படவேண்டும்!
அதுபோன்று நீதித்துறைகளில் உள்ள ‘களைகளும், கறைகளும்’ களையப்படவேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தைப் பின்பற்றாதவர்கள், கடமையாற்றுவதற்கு என்ன தகுதி உரிமை இருக்கிறது?
மதச்சார்பற்ற ஓர் அரசு, மதக்கலவரங்களை உரு வாக்கக் கூடிய அளவிற்கு, யார் பாதுகாக்க வற்புறுத்த வேண்டுமோ, அந்த வேலியே நீதித்துறைப் பயிரை மேயலாமா? ஆகவேதான், நாங்கள் அரசியலமைப்புச் சட்டப்படி சொல்லுகிறோம். நடந்த நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டுகிறோம். ஏன் நீதித்துறைக்கு அவரால் இதுபோன்ற ஒரு நெருக்கடி வர வேண்டிய அவசியம் என்ன? ஏதோ ஒரு திட்டம் உருவாகிக் கொண்டிருக்கிறது. அதாவது ஒன்றிய உள்துறை செயலாளர் தமிழ்நாட்டிற்கு வரவேண்டும். தமிழ்நாட்டில், சட்டம் – ஒழுங்கு இல்லை. இங்கே கலவரம் நடக்கிறது. இங்கே பாதுகாப்பு இல்லை.
‘‘முகவுரை’’, ‘‘முகாரி’’ பாடுகிறார்!
தமிழ்நாட்டு ஆளுநர் என்பவர் அதற்கு முன்னாலேயே இத்தகைய போக்குக்கு, ‘‘முகவுரை’’, ‘‘முகாரி’’ பாடுகிறார்! அது என்னவென்றால், தமிழ்நாட்டில் பயங்கரவாதம் தலை தூக்கி ஆடுகிறது? எங்கே தலை தூக்குகிறது பயங்கரவாதம்? டில்லி செங்கோட்டைக்கு முன்னால் 29 பேரின் உயிர்ப் பலியாகி இருக்கிறதே, தயவு செய்து எண்ணிப் பார்க்க வேண்டாமா?
தமிழ்நாட்டில் என்ன பயங்கரவாதம்! இங்கே, யாருக்குப் பாதுகாப்பு இல்லை? எப்படிப்பட்டவர்களும் இங்கே தாராளமாக வருகிறார்களே! இங்கே கருத்துச் சுதந்திரத்திற்கு இடம் இருக்கிறதா, இல்லையா?
ஆகவேதான் நண்பர்களே, நீதித்துறைதான் நம்மு டைய ஒரே நம்பிக்கை!
மக்கள் சுதந்திரம்,
பாதுகாப்பு மிகவும் முக்கியம்!
பாதுகாப்பு மிகவும் முக்கியம்!
மக்களின் நம்பிக்கையான அந்த நீதித்துறையினுடைய சுதந்திரம் காப்பாற்றப்பட வேண்டாமா? மதச் சுதந்திரத்தை விட, மக்கள் சுதந்திரம்தானே மிக முக்கியம். மக்கள் பாதுகாப்பு மிக முக்கியம். அந்த அடிப்படையிலே சொல்லுகிறோம்; ஆனால், அந்த நேரத்திலேதான், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தினை அகற்றிவிட்டு, மனுதர்மத்தை அந்த இடத்தில் வைக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள் – திட்டமிடுகிறார்கள்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் மதிப்பைக் கெடுக்க நினைக்காதீர்கள்!
தமிழ்நாடு பெரியார் மண்ணாக இருக்கிறது. அதனால், இப்படியெல்லாம் குறுக்கு வழியில் தி.மு.க. ஆட்சியைத் தடுக்கலாம் என்று நினைக்கிறீர்கள். நீங்கள் இதை சொல்லச் சொல்ல, அடிக்க அடிக்க எழும்பும் பந்து போலத்தான், இந்த உணர்வுகள் வரும், மக்களைத் திரட்டுவோம்; நியாயங்கள் கேட்போம், நியாயங்களைத் தோற்க விட மாட்டோம். உங்களிடம் அதிகாரம் இருக்கிறது என்பதற்காக அதைத் தவறாக பயன்படுத்தாதீர்கள். அருள்கூர்ந்து மற்ற நீதிபதிகளும் கூட! அவர்களுக்கும் பாதுகாப்பு இருக்க வேண்டும். நியாயங்களை செய்யுங்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் மதிப்பைக் கெடுக்க நினைக்காதீர்கள்!
எந்தக் கருத்தாக இருந்தாலும், அதை அரசியல மைப்புச் சட்டத்தில் இருக்கின்றபடி செய்யுங்கள். நீங்கள் எடுத்துக்கொண்ட பிரமாணத்தை முதலில் காப்பாற்றுங்கள்.
‘‘Without Fear or Favour’’ என்ற சொற்றொடரை மறக்கலாமா?
ஒருவேளை பழைய ஆளா? நீங்களே கலவரத்தை உண்டாக்க வேண்டும் என்று சொல்வது? திடீர் என்று அதிகாரிகள் வருவது, திடீரென்று ஒன்றிய உள்துறை செயலாளர் அங்கே வரவேண்டும் சொல்வது. இதெல்லாம் புரியாமல், உள்துறை அமைச்சர் மிரட்டு கிறார் என்று அங்கே பேசுவது. அதற்கு இங்கே இருக்கின்ற சில அரசியல் கட்சிகள் ‘ஆமாம் சாமி’ போட்டு, அரசியல் செய்ய ஓர் ஆயுதம் கிடைத்தது என்று கணக்குப் போடுவது!.
எதிர்க்கட்சிகளைத் தோற்கடிப்பதற்கு இதுவே போதும்; வேறு எதுவும் தேவையில்லை!
‘கூட்டணி அரசியல்’ வேறு; தயவுசெய்து மதக் கலவரங்களையும், மக்களைப் பாதுகாப்பதையும், கூட்டணி அரசியலையும் போட்டுக் குழப்பிக் கொள்ளா தீர்கள்.
இந்த எதிர்க்கட்சிகளைத் தோற்கடிப்பதற்கு இதுவே போதும்; வேறு எதுவும் தேவையில்லை. கொஞ்ச நஞ்சம் உங்களுக்கு இருக்கின்ற ஆதரவுகூட இதில் துடைத்தெறியப்படும். நாங்கள் துடைத்தெறிய மாட்டோம்; நீங்களே துடைத்தெறிந்து கொள்கிறீர்கள். இதைப் புரிந்து கொள்ளுங்கள்.
நியாயங்கள் தோற்கக் கூடாது பயணங்கள் முடிவதில்லை!
எனவேதான், நிச்சயமாக மதக் கலவரங்களுக்கு நீதிபதிகளை, நீதித்துறையைப் பொறுப்பாக தூண்டுதலாக ஆக்கி, அதற்கு ஒரு தமிழ்நாடு உயர்நீதி மன்றம் என்றால், அது ‘‘சார்ட்டர்ட் ஹைகோர்ட்னு’’ என்று பெயர் பெருமையுடையது சென்னை உயர்நீதிமன்றம். முதலில் கல்கத்தா, பம்பாய் அதன்பின், சென்னை பெருமை உள்ளது. இந்தப் பெருமையை தயவு செய்து இப்படிப்பட்ட சார்பு நிலை பிறப்பிப்பதன்மூலம் குறைத்து விடாதீர்கள் என்று கேட்டு விடைபெறுகிறேன். நியாயங்கள் தோற்கக் கூடாது – பயணங்கள் முடிவதில்லை!
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
