ஜாதி, மதக் கலவரங்களை உருவாக்கி, ஆட்சியில் அமரலாம் என்ற திட்டம் பெரியார் மண்ணில் ஒருபோதும் வெற்றி பெறாது!

13 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

மக்கள் நல அரசாகச் செயல்படும் ‘திராவிட மாடல்’
தி.மு.க. அரசே மீண்டும் தமிழ்நாட்டில் மலரும் என்பது உறுதி!

வெறும் குறைகளைக் கூறாமல், வளர்ச்சித் திட்டங்களையும் பார்க்கவேண்டும்!

செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்

சென்னை, டிச.21 மற்ற சில மாநிலங்களில் ஜாதி, மதக் கலவரங்களை உருவாக்கி, மக்களிடையே பிரிவினையை உருவாக்கி, ஆட்சியைப் பிடித்ததுபோல, தமிழ்நாட்டிலும் செய்துவிடலாம் என்பது ஒருபோதும்  நிறைவேறாது. மக்கள் நல அரசாகச் செயல்படும் ‘திராவிட மாடல்’ அரசான தி.மு.க.வே மீண்டும் தமிழ்நாட்டில் மலரும் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார் திராவி டர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

18.12.2025 அன்று சென்னை பெரியார் திடலில் செய்தியாளர்களிடம் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கூறியதாவது:

2025 ஆம் ஆண்டு முடிய போகின்ற இந்தக் கட்டத்தில், வருகின்ற 2026 ஆம் ஆண்டின் வேலை திட்டங்கள்,  மிக முக்கியமாகவும், அதே நேரத்திலே இப்போது ஏற்பட்டிருக்கக்கூடிய பல்வேறு நடப்புகள், அரசியல் நிகழ்வுகள் இவை கண்டனத்துக்குரியவைகளாக எப்படி அமைந்திருக்கின்றன; நாள்தோறும் ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்கின்ற பணியை, ஆர்எஸ்எஸ்சும், அதனுடைய அரசியல் பிரிவான பா.ஜ.க.வும் தொடர்ந்து செய்து கொண்டு, அதேபோல  எதிர்கட்சிகள் ஆளுகின்ற மாநிலங்களின் வளர்ச்சிப் பணிகளுக்கு முட்டுக்கட்டை போட்டுக் கொண்டும், அந்த முயற்சிகள் தங்களுக்குக் கைகூடாத நிலையில், எப்படியாவது குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக, சில கூட்ட ணிகளுக்கு ஆளைத் தேடினாலும், போதிய அளவுக்கு அவர்கள் கிடைக்கவில்லை என்றாலும், அவர்களுக்குக் கடைசியாக நம்பிக்கையாக இருப்பது இரண்டுதான்.

ஜாதி, மதக் கலவரத்தை உண்டாக்கத் திட்டமிடும் ஆர்.எஸ்.எஸ். – பி.ஜே.பி.!

ஒன்று, மதக் கலவரத்தை உருவாக்கி, தமிழ்நாட்டை கலவர பூமியாகக் காட்ட வேண்டும் என்கிற ஒரு வியூகம்; அடுத்தது, மிக முக்கியமாக அவர்கள் நம்பி இருப்பது, எப்படி சிபிஅய்யைத் தங்கள் வயப்படுத்தி இருக்கிறார்களோ, வருமானவரித் துறையை தங்கள் ஆயுதமாகக் கொண்டிருக்கிறார்களோ, அதேபோல அமலாக்க துறை என்பதை எப்படி அவர்கள் இன்றைக்கு தவறாகப் பிரயோகப்படுத்துகிறார்களோ, ‘தவறான மிஸ்யூஸ்’  செய்து கொண்டிருக்கிறார்கள். இதை நாம் சொல்லவில்லை; நீதிமன்றங்களே, சொல்லுகின்றன. அது உச்சநீதிமன்றமாக இருந்தாலும், டில்லி நீதிமன்றமாக இருந்தாலும், இந்தியா கூட்டணித் தலைவர்கள்,  குறிப்பாக தமிழ்நாட்டிலே இருக்கக்கூடிய எதிர்க்கட்சித் தலைவர்கள், திமுக தலைவர்கள் மீதெல்லாம் ஒரு ‘கேரக்டர் அசாசினேஷன்’ என்று சொல்லக்கூடிய அளவிற்கு, அவர்களைப் பற்றிய அவதூறுகளைப் பரப்புவது என்பதைத் தங்களுடைய நடைமுறைத் திட்டமாக வைத்துக்கொண்டுள்ளனர். அவற்றைப் பயன்படுத்தியும் வருகின்றனர் – அச்சுறுத்தியும் வருகிறார்கள்.

ஏற்கெனவே ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கு எதிராகத் தமிழ் மண்ணிலே எப்படியும் காலூன்றி, ஆட்சியைப் பிடித்து விடலாம்; ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை என்றாலும், அவர்கள் வழக்கமாக மற்ற மாநிலங்களிலே கையாளக்கூடிய ஆர்எஸ்எஸ்சினுடைய முறையான, முதலில் கூட்டணி என்று உள்ளே சேர்வார்கள்; ஆட்சி யிலே உங்களுக்குப் பங்கு கொடுக்கிறோம் என்று சொல்வார்கள். பிறகு அந்தக் கட்சியையே அவர்கள் ‘கபளீகரம்’ செய்து விடுவார்கள். இதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் உண்டு என்று உங்களுக்கும் தெரியும்.

மீண்டும் தி.மு.க. ஆட்சியே மலரும், மலரவேண்டும்!

ஆகவேதான்,  இன்றைக்கு நடைபெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் நிறை வேற்றப்பட்டிருக்கிற தீர்மானங்களில்,  2026 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கின்ற தேர்தலில், ஒரு கோடி பேருக்கு மேல் பெயர் நீக்கம் என்று உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. எப்படியாக இருந்தாலும், தமிழ்நாடு பெரியார், மண் தமிழ்நாடு சமூக நீதி மண், தமிழ்நாடு சுயமரியாதை மண் என்பதை மீண்டும் ‘திராவிட மாடல்’ ஆட்சிதான், அதனு டைய ஒப்பற்ற முதலமைச்சர் ஆட்சிதான் மலரும் என்பதைத் தெளிவாக, உறுதியோடு உலகத்துக்குத் தெரிவிக்கக்கூடிய ஒரு நிலையை உண்டாக்குவோம்.

திராவிடர் கழகம் தேர்தலில் நிற்காத ஓர் இயக்கம் என்றாலும்,  யார்  ஆட்சியில் இருந்தால், தந்தை பெரி யாரும், நீதிக்கட்சியும், மற்றவர்களும் எந்த உரிமை களைப் பெற்றுத் தந்தார்களோ – சமூக நீதியிலே, மற்ற இடங்களிலே – அவற்றைக் காப்பாற்றி, முன்னெடுத்துச் சொல்லக்கூடிய ஓர் ஆட்சியை அடையாளம் கண்டு சொல்லுவோம்; அதுதான் ‘திராவிட மாடல்’ ஆட்சி என்பதை எடுத்துக் காட்டுவதற்காகத்தான் – எங்களு டைய முயற்சிகள்; திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு இன்றைக்குக் கூடி,  எட்டு தீர்மானங்களை நிறைவேற்றி இருக்கிறது. அந்தத் தீர்மானங்களில் குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், வருகின்ற தேர்தலில்,  நம்முடைய கட்சி கூட்டணியில் பங்கு பெறாவிட்டாலும், மற்றவர்களுக்கு வழிகாட்டக்கூடிய, ஒருங்கிணைக்கக்கூடிய ஒன்றாகத்தான் நம்முடைய இயக்கம் இருக்கும். தீர்மானம் எண் 3, மிகத் தெளிவாக நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. ‘‘தமிழ்நாடு சட்டப்பேர வைத் தேர்தலும், நமது கடமையும்’’ என்ற தலைப்பில் உள்ள  தீர்மானம்.

காந்தியார் பெயரை நீக்குவதா?

நண்பர்களே,  தீர்மானங்களின் நகல்களை உங்க ளுக்குக் கொடுத்திருக்கிறார்கள். குறிப்பாக இரண்டு முக்கியமான அவசர பிரச்சினை, நாட்டிலே ஒன்றிய அரசால் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு நடப்பிலும் ஜனநாயகத்தை அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குழிதோண்டிப் புதைக்க வேண்டும்; பாசிசக் கொடியை உயர்த்த வேண்டும் என்ற எண்ணத்தோடு அவர்கள் தெளிவுற வேலை செய்கிறார்கள் என்பதற்கு அடையாளம் இரண்டு.

ஒன்று, காந்தியாருடைய பெயரில் இருக்கக்கூடிய ‘‘மகாத்மா காந்தி கிராமப்புற வேலைத் திட்டம்’’ என்ப தில் உள்ள காந்தியார் பெயரை நீக்கியது மட்டுமல்ல; அதனுடைய அடித்தளத்தையே அவர்கள் தொலைத்திருக்கிறார்கள்; மாநில உரிமைகளையெல்லாம் பறித்திருக்கிறார்கள் என்பது மக்களுக்கே இன்னும் விளங்கவில்லை. பல அரசியல் கட்சி தலைவர்களுக்கே விளங்கவில்லை. இன்றைக்கு ‘இந்து’ பத்திரிகையில் வந்திருக்கிற தலையங்கத்தில், மற்ற எல்லா விஷயங்களையும் விலாவாரியாகச் சொல்லி, அந்த அடிக்கட்டுமானத்தையே எப்படி அவர்கள் குலைத்திருக்கிறார்கள் என்பதையும் மிக் தெளிவாக எடுத்துச் சொல்லியிருக்கிறது. ஆகவே அதுகுறித்த தீர்மானத்தையும் செயற்குழுவில் நிறைவேற்றியிருக்கின்றோம்.

எல்லாவற்றையும் விட, கல்வியைக் காவி மயமாக்க வேண்டும் என்பதற்காக, நீண்ட காலமாக அதைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றது ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் மூன்று பட்டியல் இருக்கிறது. அதன்படி பார்த்தால் ஏற்கெனவே மாநில பட்டியலில் இருந்த கல்வி, நெருக்கடி காலத்தில், ஒன்றிய அரசிடம் போனது. அதுகுறித்த வழக்கு நீண்ட காலமாக நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது, மீண்டும் கல்வி மாநிலப் பட்டியலுக்கு வரவேண்டும் என்பதுதான் நமது உறுதியான நிலை!

ஆனாலும், ஒத்திசைவு பட்டியல் என்கிற ‘கன்கரண்ட் லிஸ்ட்’ என்று சொல்வதின் நோக்கம் என்னவென்றால், நமக்கும் சட்டம் செய்யக்கூடிய உரிமை உண்டு; ஒன்றிய அரசுக்கும் சட்டம் செய்யக்கூடிய உரிமை உண்டு என்பதுதான். மாநில உரிமைகள் பாதிக்கக்கூடிய அளவிற்கு ஏதாவது இருந்தால்,  மாநிலங்களின் அனுமதி பெற்ற பிறகுதான்  அதைச் செய்ய முடியும். அதுதான்  ‘கன்கரண்ட்’ என்று  பெயர் வைத்திருக்கிறார்கள். அதைப்பற்றிக் கவலைப்படாமல், நாங்கள் எங்கள் இஷ்டப்படி செய்து, ஒற்றை ஆட்சியாக, கூட்டாட்சியைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு, அந்த தத்துவத்தை ஏற்காமல், ஒற்றை ஆட்சியாக நடத்திக் காட்டப் போகிறோம். அதுதான் ஆர்எஸ்எஸ்சின் இலக்கு, ஆர்எஸ்எஸ்சின் கொள்கை என்பதை அடையாளப்படுத்துவதுதான் இந்தத் தீர்மானம்.

அதற்கு அடுத்த தீர்மானமாகச் சுட்டிக்காட்டி இருப்பது, இப்பொழுது பல்கலைக்கழகங்களில் மும்மொழி திட்டம் என்கிறார்கள். அதைச் சொல்வதற்கு இவர்களுக்கு அதிகாரமே கிடையாது. பல்கலைக்கழகத்துக்குள்ள எல்லாவற்றிலும் தங்கள் அதிகாரத்தை எடுத்து கொள்ள முடியுமா? என்றால், கிடையாது.

உயர்கல்வியை கபளீகரம் செய்வதா?

அட்டானமி என்று சொல்வது, யுனிவர்சிட்டி ஆட்டானமி. சுயாட்சி என்பது அதற்கு உண்டு. மாநிலங்களுக்கு அந்த உரிமைகள் உண்டு. மாநிலங்களும், பல்கலைக்கழகங்களை நிறுவலாம். அதற்குச் சட்டத்தில் இடம் இருக்கிறது. இவை எல்லாவற்றையுமே தூக்கி எறிந்துவிட்டு, இனிமேல் ஒன்றே ஒன்றுதான். எல்லா இடங்களிலும் ‘சென்ட்ரலைசேஷன்’ ஒன்றிய ஆட்சிக்கு அதிகாரங்களைக் குவிக்கவேண்டும் என்று திட்டமிடுகிறார்கள். அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்ற கோரிக்கை, நாடு முழுவதும் நீண்ட காலமாக இருக்கிறது. அதற்கு நேர் எதிராக, ‘சென்ட்ரலைசேஷன்’ என்று சொல்லக்கூடிய அளவிற்கு, யூஜிசி என்ற ஒன்று தேவையில்லை; ஏயூடிசி தேவையில்லை. மற்ற எதுவும் தேவையில்லை. நாங்கள் ஓர் அத்தாரிட்டி என்ற ஓர் ஆணயம் தயாரிப்போம் – அந்த ஆணையம்,எந்தப் பல்கலைக்கழகத்தையும் நீக்கலாம். எந்தப் பல்கலைக்கழகத்தையும் சேர்க்கலாம். எதை வேண்டுமானாலும் உருவாக்கலாம் என்று அவர்கள் இருக்கிறார்கள். இதைத்தான், இந்த தீர்மானத்தை விளக்கிச் சொல்லியுள்ளோம். இதற்கு மேல் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் கேளுங்கள். மற்றொரு முக்கியத் தீர்மானம் காந்தியாரின் பெயரை நீக்கியுள்ளதைக் கண்டித்து நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம். அதனுடைய அடிக்கட்டுமானத்தையே அவர்கள் குலைத்திருக்கிறார்கள். இரண்டாவது, இது மாதிரி காந்தியார் பெயரை நீக்குவதில் என்ன அவசரம் இப்போது? அதற்காக நிதி ஒதுக்கியிருக்கிறார்களா, என்றால் இல்லை.

இதில் ஒரு முக்கியமான அம்சம், சுட்டிக்காட்டப்பட வேண்டியது – ஊடக தோழர்களாகிய உங்கள் மூலமாக, நான் தெரிவிக்க விரும்புவது – வேலையின்மையைப் போக்க  ஒன்றிய பா.ஜ.க. அரசு உருப்படியாக எதையாவது செய்திருக்கிறதா? விலைவாசி ஏற்றம், முட்டையில் இருந்து பவுன் வரையில் விலைவாசி ஏற்றம்; ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சம்   ரூபாயை எட்டிவிட்டது என்று எல்லாருக்கும் தெரியும். ஒவ்வொரு நாளும் விலைவாசி மிகப்பெரிய அளவிற்கு  ஏறிக் கொண்டிருக்கின்றது. இந்தியாவிலிருந்து  ஏற்றுமதி செய்ய முடியவில்லை. காரணம், அமெரிக்க அதிபர் டிரம்ப் 50% வரியை போட்டிருக்கிறார். அதைக் கண்டித்து எதையும் செய்யவில்லை.

இவற்றையெல்லாம் மக்கள் மத்தியில் எதிர்க்கட்சிகள் சொல்லுவதற்கு வாய்ப்பளிக்காமல், திசை திருப்புவதற்காக, இப்போது எல்லாரும் ‘மகாத்மா காந்தி திட்ட’த்தைப் பற்றி பேசிக்கொண்டிருக்கின்றோம் பாருங்கள், அதனால் அவர்களைப் பொறுத்தவரையில், நாட்டில் மக்கள் அவதியுறக்கூடிய பிரச்சினைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்பிச் செய்வதற்கான ஏற்பாடுதான் இது.  அதை அடிப்படையாகக் கொண்டுதான் தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கின்றோம்.

தி.க. – தி.மு.க. இரட்டைக் குழல் துப்பாக்கிகள்!

செய்தியாளர்: திருவண்ணாமலையில், திமுக சார்பாக நடைபெற்ற ஒரு கூட்டத்தில், மூத்த அமைச்சர் ஒருவர், ‘இளம்பெரியார்’  என்று உதயநிதி ஸ்டாலினைச் சொல்லி இருக்காரே, அதைத் திராவிடர் கழகம் ஏற்றுக்கொள்கிறதா?

தமிழர் தலைவர்: யார் சொன்னாரோ,  எந்த நோக்கத்தில் சொன்னாரோ, அவரிடம்தான் இதைக் கேட்கவேண்டும்.

தந்தை பெரியாரின் தத்துவம் அவரோடு முடிந்துவிடும் என்று சிலர் நினைக்கிறார்கள். ‘அவரோடு அல்ல’, ‘வேரோடு ஆதிக்க சக்திகளை அழிப்பது வரையில், எங்கள் பணி – தந்தை பெரியார் பணி தொடரும்’ என்று இளையவர் ஒருவர் சொல்கிறார் என்பதில் மகிழ்ச்சியே!

யார் வேண்டுமென்றாலும், பெரியார் ஆகலாம். எப்பொழுது? கொள்கையைச் சொன்னால்.

‘வாலிபப் பெரியார்’  என்று ஆசைத் தம்பியைச் சொன்னார்கள். அது உங்களுக்கு தெரியுமா? இது இரட்டைக் குழல் துப்பாக்கி. இந்த கத்தரிக்கோலின் நடுவில், யாராவது விரலை விட்டால், மிக ஆபத்தாகிவிடும்.

செய்தியாளர்: தமிழ்நாடு அரசு, சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது என்று நீங்கள் சொல்கிறீர்கள். இன்றைக்குக்கூட,  வருவாய்த் துறை கிராம உதவியாளர்கள் போராட்டம் நடத்துகிறார்கள்; மின்வாரிய ஊழியர்கள் போராட்டம் நடத்துகிறார்கள்; போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் நடத்துகிறார்கள். இதற்கெல்லாம்  அடிப்படையாக அவர்கள் சொல்வது, ‘‘திமுக அரசு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றச் சொல்லித்தான் போராட்டம் நடத்துகிறோம்’’ என்று சொல்கிறார்கள். ஆட்சிப் பொறுப்பேற்று நான்கரை ஆண்டுகள் ஆகியிருக்கிறது. ஊழியர்களுடைய மிகப்பெரிய ஒரு வேதனையாவும் இருக்கிறது; குற்றச்சாட்டாகவும் இருக்கிறது. இதை நீங்கள் எப்படி பார்க்கறீங்க? இதற்கு நீங்கள் என்ன அழுத்தம் கொடுக்க போறீங்க, திராவிட கழகம் சார்பாக?

குறை சொல்வது எளிது– வளர்ச்சித் திட்டங்களையும் கவனத்தில் கொள்ளவேண்டாமா?

தமிழர் தலைவர்:  திராவிடர் கழகம் எதை எதை எப்பொழுது சொல்லவேண்டுமோ, அப்பொழுது சொல்லும். இப்போது போராடுகின்றவர்கள் எல்லாம்,  ஒன்றிய அரசைப் பார்த்து, மோடி அரசைப் பார்த்து, ‘‘கொஞ்சம் தாராளமாக நிதி கொடுங்கள். கொடுக்கப்படவேண்டிய நிதியையாவது கொடுங்கள். நீங்கள் நிதியைக் கொடுக்காமல்,  கழுத்தைப் பிடிக்காதீர்கள்’’ என்று கேட்பதற்குத் தயாராக இருந்தால், அங்கே இருந்து டேங்கில் தண்ணீர்  வந்து நிறைந்திருந்தால், இங்கே திறக்கலாம். டேங்கில் தண்ணீரே வராமல், தண்ணீரே இல்லாமல், குழாயைத் திறந்திடுங்கள், என்று சொல்வதற்குப் பதிலாக, டேங்கில் தண்ணீர் நிரப்புவதற்கு என்ன வழி என்பதைப் பார்க்க வேண்டும்.

எப்போதுமே,  தேர்தல் நெருங்கும்போது, தங்களுடைய கோரிக்கையைக் கொஞ்சம் நெருக்கினோம் என்றால், தேர்தல் அறிக்கையில் அதைச் செய்வார்கள் என்று  சொல்வது வழக்கமான ஒன்றுதான். எந்த அரசு வந்தாலும், எந்த கட்சி, இந்தக் கட்சி என்பதல்ல. எந்த அரசு வந்தாலும், நூற்றுக்கு நூறு மக்களை குறையில்லாமல் வைத்துக்கொண்டிருக்கிறோம் என்று சொல்ல முடியாது. குறைகள் சில இருக்கத்தான் செய்யும். ஒட்டுமொத்தமான என்னென்ன வளர்ச்சிகள், நலன்கள் நடந்துள்ளன என்பதையும் சீர்தூக்கிப் பார்க்கவேண்டாமா?

இதுபோன்ற போராட்டங்களை நடத்தி, குரல் எழுப்புவதற்கும், போராட்டங்களுக்கு அனுமதி கொடுப்பது, போராட்டக்காரர்களை அழைத்து அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்துவது போன்ற அணுகுமுறைகளை ‘திராவிட மாடல்’ அரசைத் தவிர, வேறு எந்த அரசிடமும் எதிர்பார்க்க முடியாது.

ஆட்சியைப் பிடிப்பது மட்டுமே தான் கொள்கையா?

செய்தியாளர்: த.வெ.க. தலைவர் விஜய் அவர்கள், ‘‘பெரியார் வழியில்தான் நாங்கள் நடக்கிறோம்; அந்தத் தலைவர் வழியில்தான் தேர்தலைச் சந்திக்கிறோம் என்று சொல்கிறார். திராவிடர் கழகம் விஜயை எதிர்ப்பதற்குக் காரணம் என்ன?

தமிழர் தலைவர்:  முதலில் அவர்கள் கொள்கையைச் சொல்லட்டும். யாருடைய வழி என்பது பிறகு. இதுவரையில் அவர்கள் கொள்கையை அறிவித்திருக்கிறார்களா? அதற்குப் பதில் சொல்லுங்கள்,  அந்த கட்சியினுடைய கொள்கை என்னவென்று சொன்னால்தான், அவருடைய வழி பெரியார் வழியா? பெரியார் வழி இல்லையா?  பெரியார் வழி என்று சொல்லிட்டு, வேறு ஒரு வழிக்குப் போனால், ஈரோட்டுக்குச் செல்வதற்குப் பதிலாக, டில்லிக்குப் போறேன் என்று வேறு பக்கமாகப் போய், அது பெரியார் வழிதான் என்று அவர் சொன்னால், சொல்பவருடைய சிந்தனையைப்பற்றித்தான் ஆராய்ச்சி செய்யவேண்டும். கேட்கின்றவர்களும் தலையாட்டாமல், அதைப்பற்றி ஆராய்ச்சி செய்யவேண்டும்.

ஆகவே, பெரியார் வழியா? இன்னொருவருடைய வழியா? அல்லது அய்வருடைய வழியா? அல்லது அய்வர் சிலையை வைத்திருக்கிறோமே, அந்தத் தலைவர்களுடைய வழியா? என்று சொல்லட்டும்!

ஒரு கட்சியைத் தொடங்கி, இரண்டாண்டுகளுக்குமேல் ஆகியிருக்கிறது. இதுதான் எங்களுடைய கொள்கை என்று அவர் சொல்லவில்லை.

ஜாதி ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு, சமூகநீதி, சமத்துவம் போன்றவைதான் திராவிடர் கழகத்தின் கொள்கை என்று தெளிவாகச் சொல்கிறோம்.

ஆர்.எஸ்.எஸ். என்றால், எங்களுக்கு நேர் எதிர் கொள்கையாகும். மதவெறியை உண்டாக்குவதுதான், ஹிந்துத்துவாவை உண்டாக்குவதுதான், ஹிந்து நாட்டை உருவாக்குவதுதான் அவர்களுடைய கொள்கை. அதை ஏற்கின்றோமா, இல்லையா என்பது வேறு விஷயம்.

அதுபோன்று, நீங்கள் குறிப்பிடுகிற அவருடைய கட்சியின் கொள்கையைச் சொல்லட்டும். அதற்குப் பிறகு, அவர் போவது அந்த வழியா? தவறான வழியா? என்பதைச் சொல்வோம்.

முதலமைச்சராக வேண்டும் என்கிற ஒரு முடிவைத் தவிர, அவருக்கு வேறு எந்தக் கருத்தும் இருப்பதாகத் தெரியவில்லையே!

ஜாதி ஒழிப்பு என்பது எங்களின் முதன்மையான கொள்கை!

செய்தியாளர்: 2026 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில், 210 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்று எதிர்க்கட்சிகள் சொல்லியிருக்கிறார்களே, அதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

தமிழர் தலைவர்: ஆசைகள் குதிரைகள் ஆகலாம்; குதிரைகள், நல்ல குதிரைகளாகவும் இருக்கலாம்; சண்டிக் குதிரைகளாகவும் இருக்கலாம்; பொய்க்கால் குதிரைகளாகவும் இருக்கலாம். குதிரைகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். குதிரைகளில் பல வகைகள் உண்டு.

சந்தையிலும், அல்லது சந்தைக்குப் பிறகு அதை ஓட்டுவதையும் வைத்துத்தான் முடிவு செய்ய முடியும்.

எனவே, இது பொய்க்கால் குதிரையா? அல்லது சண்டிக்குதிரையா? என்று பார்க்கத்தானே போகிறோம்.

யார் வேண்டுமானாலும் ஆசைப்படலாம்; அரசியலமைப்புச் சட்டப்படி, 22 வயதுள்ள ஒருவர், கட்சித் தொடங்குவதற்கு உரிமை உண்டு. ஆனால், பைத்தியமாக இருக்கக்கூடாது.

சில பேர் பைத்தியமாக இருந்துகொண்டு, இதுபோன்ற வேலைகளைச் செய்கிறார்கள். அவர்களுக்குத் தேவையானது, பதவியல்ல; வைத்தியம்தான்.

ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்காக ஓர் ஆணையம்!

செய்தியாளர்: ஜாதி ரீதியான பிரச்சினைகள் குறித்து………

தமிழர் தலைவர்: எங்களுடைய பணியில் முதல் பணி ஜாதி ஒழிப்புதான். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு மறைமலைநகரில் நடைபெற்றது. அம்மாநாட்டில், ஜாதி ஒழிப்புத் தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கின்றோம் – வற்புறுதியிருக்கிறோம். நாட்டில் நடைபெறும் ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்காக நம்முடைய முதலமைச்சர் அவர்கள், ஒரு நீதிபதி தலைமையில் ஆணையம் அமைத்திருக்கிறார்.

இன்னமும் நாடு முழுவதும் ஜாதி ஒழிப்புப் பிரச்சாரத்தைத் தீவிரமாகச் செய்யக்கூடிய ஒரே இயக்கம், திராவிடர் கழகம்தான். அந்தப் பணிதான் எங்களுக்கு முதன்மையானதாகும்.

அந்த ஊர்க்காரர்கள் எங்களைச் சந்தித்தாலும், சந்திக்காவிட்டாலும் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் எங்கள் பணி தொடரும். நாங்கள் சிறப்பாகச் செய்வோம். உங்கள் ஆலோசனைகளுக்கு நன்றி!

உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு
50 சதவிகித இட ஒதுக்கீடு

செய்தியாளர்: தி.மு.க. ஆட்சியில் பெண்களின் இட ஒதுக்கீட்டுப் பிரச்சினை…

தமிழர் தலைவர்: திராவிட மாடல் ஆட்சிக்கு, அக்கறையும், கவலையும், பொறுப்பும் இருக்கிறது என்பதற்கு உதாரணம், பெண்களே கேட்காத அளவிற்கு, 50 சதவிகித இட ஒதுக்கீட்டை, கடந்த உள்ளாட்சித் தேர்தலில், தந்தை பெரியார் கருத்துப்படி, பெண்களுக்குக் கொடுத்ததினால்தான், இன்றைக்குத் தமிழ்நாட்டில், மேயராக பெண்கள், நகராட்சித் தலைவராக பெண்கள் இருக்கிறார்கள்.

50 சதவிகிதத்திற்காகப் பெண்கள் போராட்டம் நடத்தவில்லை. ஆனால், உள்ளாட்சித் தேர்தலில், தி.மு.க. அரசு கொடுத்திருக்கிறது.

இதைச் செய்யக்கூடிய மனமும், கொள்கைத் தெளிவும், உறுதியும் ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் உண்டு.

– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *