இரண்டாம் கட்ட ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் (20.12.1948)
இன்று அன்னை மணியம்மையார் குடந்தையில் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கைதான நாள் (20.12.1948)
சென்னை மாநிலத்தில் ராஜகோபாலாச்சாரியார் அமைச்சரவை 20.6.1948இல் மீண்டும் கட்டாய ஹிந்தியை பள்ளிகளில் பாடமாக்கியது. அதை எதிர்த்து இரண்டாம் கட்ட ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தை தந்தை பெரியார் அறிவித்தார்.
14.12.1948 குடந்தையில் கூடிய கழக மத்திய நிர்வாகக் குழு கூட்டத்தில் 19.12.1948 முதல் தடையை மீறி ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்திட தீர்மானிக்கப்பட்டது.
கும்பகோணத்தில் 20.12.1948 அன்று அன்னை மணியம்மையார் தலைமையில் தடையை மீறி ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. தடையை மீறி போராட்டம் நடத்தியதற்காக அன்னை மணியம்மையாரும் அவரோடு கே.ஏ.புஷ்பாவதி ஆகிய இருவரும் கைதுசெய்யப்பட்டு கும்பகோணம் நகரக் காவல் நிலையத்தில் மாலை 7 மணி வரை வைத்திருந்து, பின் பாபநாசம் துணைச் சிறைச் சாலையில் (சப்–ஜெயில்) சிறைப்படுத்தினர். மூன்று நாள்களுக்குப் பிறகு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
அன்னை மணியம்மையாரிடம் துணை ஆட்சியாளர் விசாரணை செய்தபோது கேட்ட கேள்விகளுக்கு அன்னையார் பதிலளித்தார். கடைசியாக கேட்டகேள்வி: தடை உத்தரவை மீறிச் சட்டத்தை மீறியுள்ள தங்களை ஏன் தண்டிக்கக் கூடாது? சமாதானம் ஏதாவது சொல்கிறீர்களா?
மணியம்மையார் பதில்: ‘‘நான் சமாதானம் சொல்வதற்காக இங்கு வரவில்லை. சர்க்கார் சட்டத்தை நிறைவேற்றியிருக்கும் தாங்கள் என்ன தண்டனை விதித்தாலும் ஏற்க சித்தமாய் இருக்கிறேன். தாராளமாய் செய்யுங்கள்.’’
துணை ஆட்சியர்: தங்களுக்கு இரண்டு மாத சிறைத் தண்டனை அளிக்கிறேன்.
மணியம்மையார் பதில்: மிக்க மகிழ்ச்சி, வணக்கம். என்றுகூறி சிரித்த முகத்தோடு சிறை நோக்கி பயணித்தார், பாபநாசம் சப் ஜெயிலிருந்து வேலூர் சிறையில் அடைக்கப்பட்ட மணியம்மையார் விடுதலை ஆன பின் தந்தை பெரியார் சிறை வாயிலில் காத்திருந்து வரவேற்றார். வரலாற்றில் இந்த பெரும் பேற்றினை பெற்றிட்ட அன்னை மணியம்மையார் தடையை மீறி போராட்டத்தில் கைதான அந்நாள் தான் இந்நாள்.
