‘‘இயக்கத்தை முன்னிறுத்துவீர்! கொள்கைக்காக உயிர் துறப்பீர்!’’

3 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

‘‘இயக்கத்தை முன்னிறுத்துவீர்! கொள்கைக்காக உயிர் துறப்பீர்!’’

இந்த (மேற்கண்ட) வாசகம் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களால், திராவிடர் கழகச் சிறப்புத் தலைமைச் செயற்குழுவில் கூறப்பட்ட குறள் போன்ற வாசகங்கள்.

நமது இயக்கத்திற்கென்று உள்ள தனித்துவமும், பொதுமதிப்பும் இந்த இரண்டுக்குள் அடக்கமாகும்.

‘நான்’ ‘நான்’ என்பதைப் புறந்தள்ளி ‘நாம்’ என்பதை முன்னிறுத்தினால் நான் என்கின்ற அகங்காரம் அந்தத் தருணத்திலேயே செத்து மடிந்து விடும். இயக்கத் தோழர்களிடத்திலும் இதன்மூலம், முன்பு இருந்ததைவிட மேலும் ஒற்றுமை உணர்ச்சி பலப்படும்.

நாம் எண்ணிக்கையில் எத்தனைப் பேர் என்பது முக்கியமல்ல; இருக்கின்ற நாம் தங்களை முன்னிறுத்தாமல், எதிலும் கொள்கைப் பார்வையில் இயங்குவதால் தான் நம்மால் எதையும் சாதிக்க முடிகிறது.

ஒரே ஒரு நிகழ்ச்சியை எடுத்துக்காட்டினால் இதன் அருமைப் புரியும்.

சுயமரியாதை இயக்கத்தின் – திராவிடர் கழகத்தின் முக்கிய கொள்கை என்று வரிசைப்படுத்தினால் ஒன்று ஜாதி ஒழிப்பு, இன்னொன்று பெண்ணடிமை ஒழிப்பாகும்.

இந்த இரண்டுக்காக –இவற்றிற்குத் தடையாக இருக்கும் கடவுளை, மதத்தை, வேதங்களை, இதிகாசங்களை, புராணங்களை, ஸ்மிருதிகளை, சாஸ்திர சம்பிரதாயங்களை எதிர்க்கிறோம்.

1957 நவம்பர் 3ஆம் தேதி தஞ்சாவூரில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட ஜாதி ஒழிப்பு சிறப்பு மாநாட்டில் தந்தை பெரியாரின் பிறந்த நாளையொட்டி எடைக்கு எடை வெள்ளி ரூபாய் நாணயங்கள் வழங்கப்பட்டன. (ரூ.7,704).

அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானம்: ஜாதியைப் பாதுகாக்கும் அரசமைப்புச் சட்டப் பிரிவை நீக்க வேண்டும்; அப்படி நீக்காத பட்சத்தில் ஜாதியைப் பாதுகாக்கும் சட்டப் பிரிவை நவம்பர் 26 (இந்திய அரசமைப்புச் சட்டம் அங்கீகாரம் பெற்ற நாள் நவம்பர் 26 – 1949) அன்று கொளுத்துவது என்பதுதான் அந்தத் தீர்மானம்.

என்ன நடந்தது? இலட்சோப லட்ச மக்கள் கூடிய ஒரு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை ஆட்சி அதிகாரத்தில் இருப்போர் ஆழமாகக் கவனமும் கருத்தும் செலுத்துவதற்குப் பதிலாக  ‘சட்டத்தைக் கொளுத்துவதா?’ என்று அங்கலாயித்தனர்.

‘சட்டத்தை எரித்தால் என்ன தண்டனை’ என்று  அரசமைப்புச் சட்டப் புத்தகங்களைப் புரட்டிப் புரட்டிப் பார்த்தனர்.

என்ன வேடிக்கை தெரியுமா? சட்டத்தைக் கொளுத்தினால் என்ன தண்டனை என்பது சட்டத்தின் எந்த சரத்திலும் காணக் கிடைக்கவில்லை!

அவசர அவசரமாக சென்னை மாநில சட்டமன்றத்தில் ஒரு சட்டத்தை நிறைவேற்றினர். (1957 நவம்பர் 18) சட்டத்தின் பெயர் ‘தேசிய அவமதிப்புத் தடுப்புச் சட்டம்’ (Prevention of Insults to National Honour Act) என்பதாகும்.

மூன்றாண்டுக் காலம் சிறைவாசம் (அபராதம்) அல்லது இரண்டும் சேர்ந்து என்று சட்டம் செய்யப்பட்டது.

கருஞ்சட்டைத் தோழர்கள் மருண்டனரா? 10 ஆயிரம் தோழர்கள் குடும்பம் குடும்பமாக சட்டத்தை எரித்து சிரித்த முகத்துடன் சிறை சென்றனரே! இதில் கர்ப்பிணிப் பெண்களும் உண்டு. சிறையில் மாண்டவர்கள் அய்வர் – சிறையில் நோய் வாய்ப்பட்டு விடுதலையாகி வெளியில் வந்தவுடன் சில நாட்களிலேயே மரணத்தைத் தழுவியவர்கள் 13 பேர்.

இப்படியொரு போராட்ட வரலாறு கருஞ்சட்டை இயக்கமான திராவிடர் கழகத்தைத் தவிர வேறு உண்டா?

இந்தத் தனி சிறப்பிற்கு என்ன காரணம்? கழகத் தலைவர் சென்னையில் கடந்த 18ஆம் தேதி நடைபெற்ற திராவிடர் கழக சிறப்புத் தலைமைச் செயற்குழுவில் குறிப்பிட்டாரே – ‘‘இயக்கத்தை முன்னிறுத்துங்கள் – கொள்கைக்காக உயிர் துறப்பீர்!’’ என்று சொன்னது ஓர் இயக்கத்திற்கான கருதுகோளாகும்! அதனை மனதிற் கொண்டுதான் 68ஆண்டுகளுக்குப் பிறகும் இயக்கத்தின் புதிய வரவுகளுக்கு நினைவூட்டினார்.

ஆம், திராவிடர் கழகம் இலட்சியத்திற்கான சமூகப் புரட்சி இயக்கம்!

இன்னொன்றையும் கழகத் தலைவர் நினைவூட்டினார். இயக்கத்திற்கு இலக்கணமாக தந்தை பெரியார் கல்வெட்டாகச் செதுக்கி வைத்ததுதான் அது!

(1) யோக்கியமான தலைமை.

(2) உண்மையான தொண்டர்கள்.

(3) உறுதியான கொள்கை.

(4) யோக்கியமான பிரச்சாரம்.

(‘குடிஅரசு’ – 26.12.1926)

இந்த இலட்சியமான பத்தியம் உள்ள இயக்கத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகம் இருப்பார்கள் என்று எண்ணிப் பார்ப்பது கடினம் தான். அதே நேரத்தில் இந்தப் பத்திய மிக்க தொண்டர்களைக் கொண்ட இயக்கம் சாதிப்பதை மற்ற யாராலும் சாதிக்க முடியாது.

தமிழ்நாடு  தனித் தன்மையுடன் இருக்கிறது. மதவாத சக்திகள் தலைதூக்க முடியவில்லை என்ற நிலை இருப்பதற்கு அடித்தளப் பலம் தந்தை பெரியார் கண்ட இந்த இயக்கமும், இந்தக் கொள்கைகளுமேதான்!

கழகச் சிறப்புத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் கழகத் தலைவரின் கருத்துரையின் கருவும் இதுவே!

பயணிப்போம் தோழர்களே – பத்தியமான கொள்கைகளோடு பாதுகாப்போம் தோழர்களே, தந்தை பெரியார் விட்டுச் சென்ற அடிக் கட்டுமானத்தை!

செல்வோம்! வெல்வோம்!!

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *