நீதித்துறையை மிரட்டியவர்கள் யார்? ஹிந்துத்துவாக்காரர்கள் அல்லவா?
உச்சநீதி மன்றத்தினுடைய தலைமை நீதிபதியை நோக்கி செருப்பை வீசியது யார்? ஹிந்துத்துவாவாதிகள் அல்லவா!
சென்னை, டிச.20 நீதித்துறையை மிரட்டியவர்கள் யார்? ஹிந்துத்துவாக்காரர்கள் அல்லவா? உச்சநீதி மன்றத்தினுடைய தலைமை நீதிபதியை நோக்கி செருப்பை வீசியது யார்? எந்த அணி? ஹிந்துத்து வாவாதிகள் அல்லவா என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.
கடந்த 11.12.2025 அன்று சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் ‘‘மதக் கலவரங்களுக்கு உயர் நீதித் துறை ஆயுதம் ஆகலாமா?’’ என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை ஆற்றினார்
அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
உடனே, உள்துறை அமைச்சராக இருக்கக்கூடிய, பொறுப்புள்ள ஒருவர் நாடாளுமன்றத்தில், ‘‘தமிழ்நாட்டில் நீதித் துறையை மிரட்டுகிறார்கள்’’ என்று அவசரப்பட்டு அரசியலாக்குகிறார்!
நீதித்துறையை மிரட்டியவர்கள் யார், ஹிந்துத்துவக்காரர்கள் அல்லவா?
‘‘நீங்கள் நீதிபதியை மிரட்டுறீங்களா?’’ என்று ‘‘அரைவேக்காடு அண்ணாமலை’’களிலிருந்து எல்லாரும் புரியாமலேயோ அல்லது விஷமத்தனத்திற்காகவோ சாதாரணமாகச் சொல்லுகிறார்கள். உடனே திமுகவின் மேல் குற்றம் சொல்லவேண்டுமே என்று, உடனே அதனை ‘அரசியல்’ ஆக்குகிறார்கள். தயவுசெய்து எண்ணிப் பாருங்கள்! நீதித் துறையை மிரட்டியவர்கள் யார்? ஹிந்துத்துவாக்காரர்கள் அல்லவா?
தலைமை நீதிபதியை நோக்கிச் செருப்பைப் போட்டது யார்?
உச்சநீதிமன்றத்தினுடைய தலைமை நீதிபதியை நோக்கி செருப்பைப் போட்டது யார்? எந்த அணி? ஹிந்துத்துவாவாதிகள் அல்லவா!
குடியரசுத் தலைவருக்கே பதவிப் பிரமாணம் செய்து வைப்பவர் தலைமை நீதிபதி. நபர் முக்கியமல்ல; அந்தப் பதவி முக்கியம், அந்த பொறுப்பு முக்கியம். அப்படி வருகிற நேரத்தில், அவர் மீது செருப்பை வீசுகிறார் ஒருவர். ‘‘நான்தான் செய்தேன்’’ என்று திமிராகச் சொல்கிறார். அந்தச் செயலுக்கு வருத்தம் தெரிவிக்கமாட்டேன் என்று ஆணவத் திமி ரோடு சொல்கிறார் – அவர் வக்கீலாம்.
உள்துறை யாருடைய பொறுப்பில் இருக்கிறது?
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அவர்களுடைய கண்ணியத்தினால், செருப்பு வீசியவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டாம் என்று சொன்னார். ஆனால், யாருக்குக் கண்ணியம் காட்டவேண்டும்? அவர் சொல்லிவிட்டால், இதுதான் சாக்கு என்று நீங்கள் விட்டுவிடுவீர்களா? டில்லியில் உள்துறை யாருடைய பொறுப்பில் இருக்கிறது? உள்துறை அமைச்சராக இருக்கக்கூடிய அமித்ஷாவின் பொறுப்புதானே!
ஒரு கொலை நடக்கிறது அல்லது என்னைக் கத்தி யால் குத்துவதற்காக ஒருவன் வருகிறான். அல்லது என்னை அடிக்கலாம் அல்லது அடித்துவிட்டான் என்றால், நான் இயேசு பிரான், புத்தன் வழியில், காந்தி வழியில் வந்தவன் என்று சொல்லி, கொலை செய்தவன்மீது வழக்குப் போடவேண்டாம் என்று சொன்னால், காவல்துறை வழக்குப் போடாமல் விட்டுவிடுமா?
Cognizable offence, non cognizable offence என்று ஏன் கொண்டு வந்திருக்கிறார்கள்?
எனவே, நீதித்துறையை மிரட்டியவர்கள் இவர்கள்; இவர்கள்தான் இப்போது ‘‘மிரட்டுவதா?’ என்று போதிக்கிறார்கள் வாய்க்கூசாமல்!
சிபிஅய் என்பது என்ன
வானத்திலிருந்து குதித்ததா?
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக இருந்த ஜெய லலிதா அம்மையார் சட்டப்பேரவையில், சிபிஅய் (CBI) என்பது என்ன வானத்திலிருந்து குதித்ததா? என்று கேட்டார்களா, இல்லையா?
அப்போது கூட நாம் சொன்னோம், ‘‘யாரும் வானத்திலிருந்து குதிப்பதில்லை. வானத்திலிருந்து பொழிவது என்பது மழை மட்டும்தானே தவிர, அதுகூட வானத்திலிருந்து வரவில்லை என்றோம்.
தி.மு.க.வை குறை சொல்லக் கூடியவர்களுக்கு அறிவு நாணயம் வேண்டும். ஆதாரத்துடன் உங்களுக்கு ஒரு செய்தியைச் சொல்கிறேன். நேற்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் 107 பேர் கையொப்பம் போட்டு மக்களவைத் தலைவரிடம் கொடுத்திருக்கிறார்கள். அது வெறும் திருப்பரங்குன்ற வழக்கிற்காக மட்டுமல்ல! அதற்கு முன்பே ஆகஸ்ட் 11, 2025 குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதி இருக்கிறார்கள் என்பதை நாடாளுமன்றத்தில் ‘‘இந்தியா கூட்டணி’’ உறுப்பினர்கள் தெளிவாக விளக்கிச் சொல்லி இருக்கிறார்கள். ஆதாரத்தோடு சொல்கிறேன், இது 9.12.2025 நாளிட்ட ‘இந்து’ பத்திரிகை.
‘இந்து’ பத்திரிகையில் வெளிவந்த செய்தி!
அதில், Thirupparankundram case: INDIA bloc to move an impeachment motion against Justice
G.R. Swaminathan
“We are collecting signatures of the India Bloc MPs and will submit them to the Parliament (on December 9),” said CPI(M) Su. Venkatesan.
தொடர்ச்சியாக அடுத்து உங்களுக்கு வரிசையாகக் காட்டுகிறேன். 21, 22, 23, 24, 25 அத்தனைக்கும் சொல்ல வேண்டாமா? இம்பீச்மெண்ட் மீது பதில் சொல்ல வேண்டாமா? ஒரு குறிப்பிட்ட நீதிபதி, ஆண வத்தோடு, தன்னுடைய யதேச்சதி காரத் தொனியில், நடந்து கொண்டிருக்கிறார், தன்னுடைய ஆர்எஸ்எஸ் மத ெவறித்தனத்தைப் பச்சையாகக் காட்டி இருக்கிறார் என்பதைச் சுட்டிக்காட்டியிருக்கிறது அச்செய்தி. மிரட்டியவர் செருப்பைத் தூக்கிக் காட்டி யவரா? அல்லது முறைப்படி, இம்பீச்மெண்ட் வேண்டும் என்பவரா? யார் மிரட்டுவது? தயவு செய்து மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.
அதற்கு அடுத்தபடியாக இதில் இருக்கின்ற செய்தி யைப் பாருங்கள்.
Four months before the Thirupparankundram controversy, MPs from the INDIA bloc had written separate but identical letters to President Droupadi Murmu and then Chief Justice of India B.R. Gavai, raising concerns about the conduct of Madras High Court Judge Justice G.R. Swaminathan accused in of favoring advocates.
Dated August 11, the letters accused the judge of showing preferential treatment to advocates from the Brahmin community and those associated with Hindu right-wing ideologies.
This correspondence preceded the Opposition’s move in Parliament to initiate a motion seeking his removal from the Madurai Bench of the High Court.
The MPs alleged that Justice Swaminathan’s actions amounted to “proved misbehaviour and gross misconduct,” undermining judicial impartiality, transparency, and the secular character of the judiciary.
They claimed that, during his tenure as a single-bench judge, he routinely prioritised listings and time slots for a specific group of advocates, particularly those from the Brahmin community and those aligned with right wing ideologies,” the letters said.
The MPs said the pattern of the judge’s conduct showed a “caste-based preference”, contributing to a perception of exclusivity and caste alignment in judicial functioning.
இதன் தமிழாக்கம் வருமாறு:
திருப்பரங்குன்றம் சர்ச்சை ஏற்படுவதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பு, ‘இந்தியா’ கூட்ட ணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மற்றும் அப்போதைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் ஆகியோருக்குத் தனித்தனியாகவும், ஆனால் ஒரே மாதிரியான கடிதங்களை எழுதினர். அந்தக் கடிதங்களில், வழக்குரைஞர்களுக்குச் சாதகமாகச் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் நடத்தை குறித்து அவர்கள் கவலை தெரிவித்தனர்.
ஆகஸ்ட் 11 தேதியிட்ட அந்தக் கடிதங்களில், நீதிபதி பார்ப்பன சமூகத்தைச் சேர்ந்த வழக்குரைஞர்களுக்கும், ஹிந்து வலதுசாரி சித்தாந்தங்களுடன் தொடர்புடையவர்களுக்கும் பாரபட்சமான சலுகை காட்டுவதாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையிலிருந்து அவரை நீக்குவதற்கான தீர்மானத்தை நாடாளு மன்றத்தில் கொண்டுவருவதற்கு எதிர்க்கட்சிகள் எடுத்த முயற்சிக்கு முன்னதாகவே இந்தக் கடிதப் பரிமாற்றம் நிகழ்ந்தது.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் நட வடிக்கைகள், நீதித்துறையின் நடுநிலைமை, வெளிப்படைத்தன்மை மற்றும் நீதித்துறையின் மதச்சார்பற்ற தன்மை ஆகியவற்றைச் சிதைக்கும் வகையில், “நிரூபிக்கப்பட்ட தவறான நடத்தை மற்றும் பெரும் முறைகேடு” என்பதற்குச் சமமானது என்று அந்த நாடாளுமன்ற உறுப்பி னர்கள் குற்றம் சாட்டினர்.
‘‘தனி நீதிபதியாக அவர் பதவி வகித்த காலத்தில், ஒரு குறிப்பிட்ட குழு வழக்கு ரைஞர்களுக்கு, குறிப்பாக பார்ப்பன சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும், வலதுசாரி சித்தாந்தங்களுடன் தொடர்புடையவர்களுக்கும், வழக்குகளைப் பட்டியலிடுவதிலும், விசார ணைக்கான நேரத்தை ஒதுக்குவதிலும் அவர் வழக்கமாக முன்னுரிமை அளித்தார்’’ என்று அந்தக் கடிதங்களில் கூறப்பட்டிருந்தது.
நீதிபதியின் இந்த நடத்தை முறை, ‘‘ஜாதி அடிப்படையிலான பாரபட்சத்தைக்’’ காட்டு வதாகவும், இது நீதித்துறை செயல்பாடுகளில் ஜாதிச் சார்பு என்ற ஒரு பிம்பத்தை உருவாக்கு வதாகவும் அந்தக் கடிதங்களில் ‘இந்தியா கூட்டணி’ நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரி வித்திருந்தனர்!
திருப்பரங்குன்றம் பிரச்சினை வழக்குக்காக மட்டுமல்ல…
என்ன குற்றச்சாட்டு முதலில்? திருப்பரங்குன்றம் பிரச்சினை வழக்குக்காக மட்டும் அவர்மீது இம்பீச்மெண்ட் கொண்டுவரப்படவில்லை. முதல் குற்றச்சாட்டு அவர்மீது என்ன தெரியுமா?
அவர் ‘பிராமின்’ என்பதற்காக பேசுகிறேன் என்று நீங்கள் நினைக்கலாம். அவர் பிராமின் என்பதற்காக அல்ல; அவர் முறை தவறி நடந்திருக்கிறார். சட்டத்தை மீறி நடந்திருக்கிறார் என்பதால் பேச வேண்டியுள்ளது.
சென்னை மியூசிக் அகாடமிக் அரங்கத்தில் 24.1.2018 இல் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ் சமஸ்கிருத அகராதியை அன்றைய ஆளுநர் வெளி யிட்டார். அந்த நிகழ்ச்சியில், தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டது. அப்போது அந்த நிகழ்ச்சியில் புதிய காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரர், (‘ஜெயிலுக்கும் பெயிலுக்கும்’ முன்பு அலைந்தவர்தான் அவர்.) ‘அவ்வளவு பெருமை உள்ளவர்’ அவர். தமிழ்த் தாய் வாழ்த்தின் போது, ஆளுநர் உள்பட அவையினர் அனை வரும் எழுந்து நின்றனர். விஜயேந்திரர் மட்டும் எழாமலே கண்ணை மூடிக்கொண்டு மேடையில் அமர்ந்திருந்தார். நாட்டு பண் (தேசிய கீதம்) பாடும்போது மட்டும் எழுந்து நின்றார்! இது பற்றி அப்போதே பலத்த கண்டனங்கள் பரவலாக எழுந்தன. ஆனால், அதற்குத் தரப்பட்ட விளக்கம், அவர் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடும்போது தியானத்தில் இருந்தாராம். பிறகு தியானத்திலிருந்து மீண்டதினால், தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது எழுந்து நின்றாராம். இந்த விளக்கம் யார் கொடுத்தது, ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு? இதைப்பற்றி நாங்கள் தெளி வாக அப்பொழுதே கண்டித்து ‘விடுதலை’யில் எழுதி இருக்கிறோம்.
பக்தர்கள்கூட ஏற்றுக்கொள்ளமாட்டார்களே!
அவர் என்ன சொல்கிறார், ‘‘எழுந்து நிற்கவில்லை என்றால், அது பெரிய விஷயம் அல்ல; கடவுள் வாழ்த்துப் பாடும்போது எழுந்து நிற்காமல் இருக்கலாம்’’ என்கிறார். அதைப் பக்தர்கள்கூட ஏற்றுக்கொள்ளமாட்டார்களே!
தந்தை பெரியார் அவர்கள் கடவுளை மறுக்கிற வர்தான். ஆனால், தன்னுடைய 95 வயதில் கூட, ‘கடவுள் வாழ்த்துப்’ பாடினால், யாரையாவது பிடித்துக்கொண்டா வது எழுந்து நிற்பார். அதுதான் அவை நாகரிகம். மனிதப் பண்பாடு.
சட்டத்தின் முன்னால் அனைவரும் சமம் என்று சொல்லும்போது, இவரே இந்த வழக்கை விசாரிக்கிறேன் என்று போட்டுக்கொண்டு சொன்னார், இப்படி விஜ யேந்திரரை, சங்கராச்சாரியாரை காப்பாற்ற வேண்டும். ஆன்மிகவாதிகள், பிரார்த்தனையின் போது தியான நிலையில் அமர்ந்திருப்பார்கள். அதானல்தான் விஜயேந்திரர் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடும்போது அமர்ந்திருந்தார் என்று சொல்லி, அந்த வழக்கில் தீர்ப்பு அளித்தார்.
மீண்டும் ஓர் அரசாணை!
2021 இல் அரசாங்கம் போட்ட வழக்கு அது. அதற்காக மீண்டும் ஓர் அரசாணை போட்டார்கள். தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடும்போது எழுந்து நிற்பது கட்டாயம் என்பதற்காக.
அடுத்து நண்பர்களே, 30.8.2022, சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் ‘‘பிள்ளையார் ஊர்வலம் சம்பந்தமான ஒரு வழக்கு.’’ இதுபோன்ற வழக்குகள் எல்லாவற்றையும் ஜி.ஆர்.சுவாமிநாதன், தான் தான் விசாரிக்கவேண்டும் என்று திட்டமிட்டே ஏற்பாடுகளைச் செய்து கொள்கிறார். இது அப்போதைய தலைமை நீதிபதிக்குத் தெரியுமா? என்று தெரியாது.
‘எல்லா வழக்குகளையும்
நானே விசாரிப்பேன்!’
இதுகுறித்து நாங்கள் ‘விடுதலை’ எழுதினோம். இது என்ன நியாயம்? என்று கேட்டவுடன், அதற்கென்று போர்ட் ஃபோலியோ ஜட்ஜ் இருப்பார்கள். இந்த மாவட்டம், இந்த வழக்கு வந்தால், யார் விசாரிக்க வேண்டும் என்பதற்காகத்தான் அது. ஆனால், அதன்படி இவர் நடந்துகொள்வதில்லை. ‘எல்லா வழக்கு களையும் நானே விசாரிப்பேன்’ என்று சொல்கிறார் இந்த நீதிபதி.
பிள்ளையார் கலவரம் குறித்து அரசாங்கம் தொடர்ந்த வழக்கையும் இவர்தான் விசாரிப்பேன் என்றார்.
அன்றைக்கு அறிக்கையை ‘விடுதலை’யில் எழுதி னோம். ‘‘பிள்ளையார் ஊர்வலமா? அரசியல் ஆயுதமா? மத சம்பந்தப்பட்ட வழக்குகளை எல்லாம் ஆர்.எஸ்.எஸ். உணர்வுள்ள ஒரு நீதிபதியிடமே அனுப்புவானேன்’’ என்று எழுதினோம்.
அதற்குப் பிறகு விழித்துக் கொண்டது உயர்நீதி மன்றம். அடுத்த நாளே, அந்த வழக்குக்கு உரிய நீதிபதியான சிவஞானம் அவர்களிடம் சென்றது. இது ‘விடுதலை’யால் வெளிவந்த தகவல்.
மக்கள் மன்றத்தின் முன் நியாயம் கேட்பவர்கள் நாங்கள்!
எடுத்துக்கொள்கின்ற விஷயத்தில் நாங்கள் தோற்கமாட்டோம். காரணம், நாங்கள் முறைதவறி நடக்கமாட்டோம். மக்கள் மன்றத்தின் முன் நியாயம் கேட்பவர்கள் நாங்கள்.
அடுத்தாக, ‘அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும்’ என்ற வழக்கு.
திருச்சி குமாரவயலூர் கோயிலில் நியமிக்கப்பட்ட அர்ச்சகர் நியமன ஆணையை, சென்னை உயர்நீதிமன்றக் கிளை ரத்து செய்துள்ளது.
எப்படி நீங்கள் ரத்து செய்வீர்கள்? உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படிதான் அரசு ஆணை போட்டிருக்கின்றது. இந்த நீதிபதி உச்சநீதிமன்றத்திக்கு மேற்பட்டவரா, கீழ்பட்டவரா? உச்சநீதிமன்றத்தினுடைய தீர்ப்பைத்தானே நீங்கள் பின்பற்ற வேண்டும்; அதுதானே சென்னை உயர்நீதிமன்றத்தினுடைய நடைமுறையாகும்.
‘‘மதப் பிரச்சினை என்று வந்தால், நாங்கள் எடுத்து கொள்வோம். உடனே அதை செய்வோம்’’ என்றுதானே அங்கே பணியாற்றிய அந்த அர்ச்சகப் பார்ப்பனர் மனுவின் மீதுதான் நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதைப் பற்றி விளக்கமாக எழுதி இருக்கிறோம்.
பகுத்தறிவாளர்களைக் கிண்டல் அடிப்பார்!
அது மட்டுமல்ல, இதுபோன்ற வழக்குகளில் குறிப்பிட்ட ஒருவரையே நீதிபதியாக போடுவது. அதுமட்டுமல்ல, அந்த வழக்கிற்கே சம்பந்தம் இல்லாமல், பகுத்தறிவாளர்களைக் கிண்டல் அடிப்பார். வழக்குக்கு சம்பந்தமில்லாத விஷயத்தை, பெரியார்– மணியம்மை திருமணத்தைப்பற்றிப் பேசுகிறார், எழுதுகிறார்!
அவருடைய தன்மை எவ்வளவு கீழிறக்கத்திற்குப் போய்க்கொண்டிருக்கிறது. இந்த வார்த்தையை நான் பயன்படுத்த வருத்தப்படுகிறேன். ஒரு பெரிய தலைவர், இன்னும் கேட்டால், உங்களுடைய 1978 இல் ஜனதா ஆட்சியில், (ஆர்.எஸ்.எஸ். ஆட்சிக் காலத்தில்தான்) அவருக்கு நூற்றாண்டு – அதற்காக அஞ்சல் தலை வெளியிட்டுக் கவுரவப்படுத்தியது.
தந்தை பெரியார் தன்னுடைய சொத்தையெல்லாம் மக்களுக்கு கொடுத்தார். அதற்காகப் ‘போஸ்டல் கவர்’ வெளியிடப்பட்டது. அப்படிப்பட்ட தந்தை பெரியாரைக் கொச்சைப்படுத்தி, நீதிபதி இப்படி சொல்கிறார் என்றால், அவருடைய மனதில் இருக்கின்ற அக்கிரமம், வக்கிரம் எப்படி இருக்கிறது என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும்.
காட்டுமிராண்டித்தனம் வேறு உண்டா?
அதற்குப் பிறகு 2024 இல் ஒரு வழக்கு. கரூருக்கு பக்கத்தில் உள்ள கோயில் ஒன்றில், பார்ப்பனர்கள் சாப்பிட்ட எச்சில் இல்லையின்மீது உருண்டால் மோட்சம் கிடைக்கும்; அதனால் பலாபலன் வரும் என்று சொல்லி, அதை ஒரு சடங்காக நடத்தினார்கள். இதைவிட காட்டுமிராண்டித்தனம் வேறு உண்டா? இதை மக்கள் மத்தியிலே எடுத்துச் சொல்லி, விடாமல் பிரச்சாரம் செய்ததினுடைய விளைவு, 2015 இல் அது நிறுத்தப்பட்டது.
அதற்குப் பிறகு 2015 இல் ஒரு வழக்குப் போட்டு, அந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனிடம் வரவழைக்கப்பட்டு, அந்த வழக்கின் விசாரணையின் முடிவில் இவர் தீர்ப்புக் கொடுக்கிறார். ஏற்கெனவே அந்த வழக்கில், உச்சநீதிமன்ற நீதிபதி பானுமதி அவர்கள், பார்ப்பனர்கள் சாப்பிட்ட எச்சில் இலை மீது பக்தர்கள் உருளக்கூடாது என்று தீர்ப்பு வழங்கி இருக்கிறார். ஆனால், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்பில், ‘‘ஒரு சித்த புருஷர் சமாதி, நெரூர் சதாசிவ பிரமேந்திரர் சமாதி ஆண்டு முழுவதும் பக்தர்களால் நிரம்பி வழிகிறது. அவர் ஒரு சித்த புருஷர். ஜீவ சமாதி தினத்தன்று பக்தர்கள், ‘பிராமண பக்தர்கள்’ தான், மற்றவர்களுக்கு அனுமதி கிடையாது. பார்ப்பனர்கள் உணவு உண்ட வாழை இலைகளில், அங்கப் பிரதட்சணம் செய்யும் பாரம்பரிய வழக்கம் இருந்தது. இது பாரம்பரிய வழக்கம். இது ஆன்மிகப் பலனைத் தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மகாபாரதத்திலும் எச்சில் இலையின்மீது உருளும் அங்கப் பிரதட்சணை உண்டாம். மகாபாரதத்தில் கூட சாப்பிட்ட இலையில் அங்கப் பிரதட்சணை செய்வது ஆன்மிகப் பலனாகக் கருதப்பட்டது. இதற்குக் கிராமங்களில் மத அதிகாரிகளின் அனுமதி தேவையில்லை!
இது எப்படி இருக்கு? கிராமங்களில் மத நிகழ்வுகள் நடத்த அதிகாரிகளின் அனுமதி தேவையில்லையாம்! சட்டத்தை, தானே கையில் எடுத்துக் கொள்ளச் சொல்கிறார்!
தொடர்ச்சியாக இப்படி தீர்ப்பு எழுதி வருவது நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்களுடைய வாடிக்கையாகி வருகிறது!
(தொடரும்)
