‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட’த்தின் அடிப்படையைச் சிதைக்கும் ஒன்றிய பி.ஜே.பி. அரசையும்,
அதற்குத் துணை போகும் கட்சிகளையும் கண்டித்து
‘மகாத்மா காந்தி 100 நாள் வேலைத் திட்ட’த்தின் அடிப்படையைச் சிதைக்கும் ஒன்றிய பி.ஜே.பி. அரசையும், அதற்குத் துணை போகும் கட்சிகளையும் கண்டித்து மதச்சார்பற்ற கூட்டணி சார்பில், டிசம்பர் 24 அன்று காலை நடைபெற விருக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழகத் தோழர்கள் பங்கேற்குமாறு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட’த்தின் அடிப்படையைச் சிதைக்கும் வேலையில், ஒன்றிய பி.ஜே.பி. அரசு செயல்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்குச் சூட்டப்பட்டிருந்த ‘மகாத்மா காந்தி’யின் பெயரும் நீக்கப்பட்டுவிட்டது.
ஒன்றிய அரசு வழங்கி வந்த நிதியையும் குறைத்து, அந்தச் சுமையை மாநில அரசின் தலையிலும் சுமத்திவிட்டது. கிராமப்புற ஏழை, எளிய மக்களின் வேலை வாய்ப்பையும் பறிக்கும் மக்கள் விரோத வேலையில் ஈடுபட்டு வரும் ஒன்றிய பி.ஜே.பி. அரசையும், அதற்குத் துணை போகும் அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளையும் கண்டிக்கும் வகையில், 24.12.2025 அன்று காலை 10 மணியளவில், மதச்சார்பற்ற கூட்டணி சார்பில், சென்னையிலும், மாநிலத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும், பஞ்சாயத்துகளிலும் நடைபெறவிருக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில், திராவிடர் கழகப் பொறுப்பாளர்களும், தோழர்களும் தவறாது பங்கேற்கக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
சென்னையில் நடக்கவிருக்கும் ஆர்ப்பாட்டத்தில் நான் பங்கேற்கிறேன்.
டிசம்பர் 24 அன்று தந்தை பெரியார் நினைவு நாள் நிகழ்ச்சியை முன்கூட்டி முடித்துக் கொண்டோ அல்லது ஆர்ப்பாட்டத்திற்குப் பிறகோ அந்தந்த ஊர்ச் சூழலுக்கேற்ப அனைத்துக் கட்சித் தோழர்களையும் இணைத்து நினைவு நாள் நிகழ்ச்சிகளை நடத்திட தோழர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
தலைவர்,
திராவிடர் கழகம்
20.12.2025
