“வானம் பார்க்கும் வண்ணப் பூக்கள்”
வெளியீடு; எஸ் பழனி
பக்கம்; 144. விலை 150
பாவலர் சீனி பழனி எம்.ஏ. (தமிழ்) அவர்கள் பல நூல்களை கவிதையாக யாத்தளித்துள்ளார்.
144 பக்கங்கள் கொண்ட ‘வானம் பார்க்கும் வண்ணப் பூக்கள்’ என்ற இந்நூலில், இயற்கை, அரசியல், மதம், தலைவர், பன்மலர் எனத் தலைப்பிட்டு கவிதைகளை எழுதித் தொகுத்தளித்துள்ளார்.
அனைத்துத் தலைப்பின் கீழ் இடம்பெறும் கவிதைகள் அனைத்தும் பகுத்தறிவு மனம் பரப்பும் பாக்கள் என்பதே இந்நூலுக்குத் தனிச்சிறப்பு.
தலைவர் எனும் தலைப்பில் தந்தை பெரியாரின் தத்துவச் சிறப்பை – பகுத்தறிவுப் புரட்சியை – பண்பாட்டுப் பெருமையைப் பாங்குற சொல்லியிருப்பது தனிச்சிறப்பு. பயன்மிக சிந்தனையை பாட்டாக்கி – பகுத்தறிவு உலகமைய இன்னும் பல நூல்கள் எழுதிடுக. பாராட்டுகள்!
- • • •
“கறுப்பு வெளிச்சம்”

வெளியீடு; இளந்தேனி பதிப்பகம்
பக்கம்: 104. விலை: 100
கவிஞர் துரை வசந்தராசன் தனது கவிதைத் தொகுப்பை “கறுப்பு வெளிச்சம்” எனும் தலைப்பிட்டு வெளியிட்டு உள்ளார்.
ஏறத்தாழ 100 கவிதைகள் வேறுடன் நிற்க வல்லதாய் உள்ளது.
திராவிட இயக்கச் சிந்தனையை அடிப் படையாகக் கொண்ட கவி மழையாக கவிதை மழை.
விதைப்போர் என்ற தலைப்பில் பகுத்தறிவு விதைத்திட்ட பாங்கும், சதிக்கூட்டம் ஜாதி கொண்டு நம்மை பிளந்திட்ட வரலாறை சரியாய் – உரைப்பதும் பண்பாட்டுப் பொங்கல் என்று பெயரிட்டு பகுத்தறிவை பொங்கச் செய்திருப்பதும் நம்மை மகிழ்ச்சி பொங்கச் செய்கிறது.
இன்னும் பல கவிதைகள் பொங்கட்டும் – திராவிடம் ஓங்கட்டும்.
- • • •
”தென்னைமரம் பேசுகிறேன்”

வெளியீடு; மணிமேகலை பிரசுரம்
பக்கம்: 106. விலை: 120
தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் திறம்மிகு அலுவலகராகப் பணியாற்றி, ஓய்வுக்குப் பின் ஓய்ந்து விடாது தொடர்ந்து கற்றலில் ஈடுபாடு கொண்டு பல நூல்களை உருவாக்கிய பெருமைக்குரியவரே பாராட்டுக்குரிய இந்நூலாசிரியர் ஞா.சிவகாமி.
இவரது “தென்னைமரம் பேசுகிறேன்’ எனும் சிறுகதைச் சரம். இருபது தலைப்புகளில் உருவாக்கியுள்ளார். முதல் தலைப்பே , “தென்னை மரம் பேசுகிறேன்” என்ற தலைப்பாகிறது. பகுத்தறிவு, பெண்ணுரிமை, ஆண் ஆதிக்கம், குழந்தைகளை பால் வேறுபாட்டோடு பார்க்கும் கொடுமை, குழந்தையின் பெருமை, நலவாழ்வு, ஒழுக்கத்தின் மேன்மை என பல வாழ்வியல் கூறுகளை அறிவார்ந்த பார்வையால் வடித்திருக்கும் பாங்கு அருமை.
திராவிட இயக்க சிந்தனையோடு சமுதாய மறுமலர்ச்சி, புரட்சிகர சமூகத்தின் சிறப்புகளை கற்போர் மனதில் பதியும் நிலையில் எழுதியுள்ளார். பாராட்டுகள். தொடரட்டும் இவரது எழுத்துப் பணி என வாழ்த்துகிறோம்.
- • • •
”நினைவுகளின் நிழலில்”

வெளியீடு; தடயம் பதிப்பகம்
பக்கம்: 102. விலை: 200
கவிஞர் அ.பழநியாண்டி அவர்கள் சட்டம் பயின்ற அறிஞர் என்ற நிலையிலும், தமிழ் பயின்ற தகைமைக்கு உரியவர் என்பதை நிலைநாட்டவல்ல பல நூல்களை தமிழில் உருவாக்கியுள்ள சிறந்த எழுத்தாளர்.
‘நினைவுகளின் நிழல்’ எனும் தலைப்பில் நினைவில் நிற்கும் நிலைத்த கருத்துகளைக் கவிதையாக உருக்கொள்ளச் செய்து இக் கவிதைத் தொகுப்பை வெளியிட்டு உள்ளார்.
புத்தர், பெரியார், பகுத்தறிவு, அறிவியல், குருதி (இரத்த) உறவு, குடும்ப உறவு, கொள்கை உறவு என வாழ்வியலின் பல பரிமாணங்களின் நினைவலைகள் இவரின் தமிழ் அலையில் அழகுற மிதக்கிறது.
மேலும் பல நூல்கள் நூல் உலகில் உலாவர எழுதுங்கள். வாழ்த்துகள்.
