நம்பூதிரிப் பார்ப்பனர்கள் மற்ற கீழ்ஜாதிப் பெண்களைக் கொடுமைப்படுத்தியதோடு நிற்கவில்லை. நாயர் குலப் பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு “சம்பந்தம்” திருமண முறை மூலம் ஆளாக்கிக் கொடுமை புரிந்தார்களோ, அதேபோல் நம்பூதிரிப் பார்ப்பனப் பெண்களை ‘ஜாதிய சட்டம்’, ‘ஆச்சாரம்’ என்றெல்லாம் கூறி வேறு முறையில் கொடுமைப்படுத்தினர். நம்பூதிரி பார்ப்பனப் பெண்களை “அந்தர் ஜனம்” என்றே அழைப்பர். ‘அந்தர்’ என்றால் ‘உள்ளே’ (கதவுகளுக்குப் பின்னால்), ‘ஜனம்’ என்றால் மக்கள். வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என்ற சமூகக் கட்டுப்பாட்டிற்கு உள்ளான இந்தப் பெண்கள்தான் ‘அந்தர் ஜனம்’. நம்பூதிரிப் பார்ப்பனர்கள் வீடுகள் ‘இல்லம்’ என்று அழைக்கப்படும். ‘தரவாடு’ என்று பொதுவான பெயரிலும் இவை அழைக்கப்படும்.

ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு பெயர் இருக்கும். அந்தக் குடும்பத்தில் உள்ள அனைவரின் பெயருடன் முன்பாக அவர்கள் இல்லத்தின் பெயர் இருக்கும். குடும்பத்தின் தலைவர் ‘அச்சன் நம்பூதிரி’ என்றழைக்கப்படுவார். அந்தக் குடும்பத்தின் முடிசூடா மன்னர் அவர். அவர் வார்த்தைகளே அந்த ‘இல்லத்தின்’ சட்டங்கள். அதை யாரும் மீற முடியாது. வீட்டின் பிள்ளைகள், மனைவி தவிர மற்ற ‘அந்தர் ஜனங்கள்’ ஒருவித பயம் கலந்து மரியாதையோடுதான் அவரிடம் பேசுவார்கள். சரியாகச் சொன்னால், மனைவி தவிர மற்ற பெண்கள் அதே தரவாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அச்சன் நம்பூதிரியின் முன்கூட நின்று பேச மாட்டார்கள் என்பதே இல்லங்களில் வழமையான நிகழ்வாகும். இல்லத்தில் உள்ள மற்ற அந்தர் ஜனங்கள் மட்டுமே ஒவ்வொரு பெண்ணுக்கும் (அந்தர் ஜனத்திற்கும்) நட்பு, பேச்சுத் துணை. வெளியே நினைத்தபடியெல்லாம் செல்ல முடியாது. கோயில்களுக்கு (அம்பலம்) செல்ல அனுமதியுண்டு, ஊரில் உள்ள குளத்திலோ, ஆற்றிலோ (புழா) குளிக்க மட்டும் இல்லத்தை விட்டுச் செல்லலாம். அப்போதும் தனியாகச் செல்ல முடியாது. அந்தப் பெண்ணுக்குப் பாதுகாப்பாக ‘சூத்திர’ நாயர் ஜாதிப் பெண்ணோ (பெரும்பாலும்) அல்லது கீழ்ஜாதிப் பெண்ணோ, அந்த ‘இல்ல’த்தின் பணியாளர் கூடவே காவலுக்கு வருவார். அவருக்கு ‘தாசி’ என்று பெயர். வெளியே வரும் அந்தர் ஜனம் தன் உடலை முழுமையாக மறைத்துக் கொண்டுதான் வரவேண்டும். (கீழ்ஜாதிப் பெண்கள் மேலாடையின்றி, திறந்த மார்புகளுடன் இடுப்புக்குக் கீழேயும், முழங்காலுக்கு மேலும் ஒரு துண்டு மட்டுமே கட்டிக் கொண்டு வீட்டிலும், வெளியிலும் ஜாதியச் சட்டங்கள் என்ற பெயரில் இதே பார்ப்பனர்கள் அலைய விட்டனர்.)
கோயில்களுக்கோ, குளத்திற்குகோ செல்லும்போது தாசி, அந்தர் ஜனம் வருகிறார் என்றே கத்திக் கொண்டே செல்வார். ‘மறைகுடை’ என்று சொல்லப்படும் தென்னை ஓலையால் வேய்ந்த குடையை அந்தர் ஜனம் கையில் கொண்டு செல்ல வேண்டும். தாசி அந்தர் ஜனம் வருவதை கட்டியங்கூறி முன்னே செல்ல, பின்னால் மறைகுடையால் முகத்தை மறைத்தவாறு அந்தர் ஜனம் பின்னால் செல்வார்.
இந்தச் சமூகக் கட்டுப்பாட்டால் வேற்று மனிதர்களோ, கீழ்ஜாதி ஆண்களோ யாரும் எந்த அந்தர்ஜனத்தையும் பார்க்கவே முடியாது. அந்தர் ஜனம் தங்க நகைகள் அணியக் கூடாது. வெள்ளி, பித்தளை நகைகள் அணியலாம். வெள்ளை நிற ஆடைகள் மட்டுமே அணிய வேண்டும். பொட்டு வைத்துக் கொள்ளக் கூடாது. அம்பலத்திற்கு (கோயிலுக்கு)ப் போனால் சந்தனப் பொட்டு, வைத்துக் கொள்ளலாம். தலை முடியைப் பின்னிக் கொண்டு சடை போட்டுக் கொள்ளக் கூடாது. முடியின் கீழ் ஒரு முடிச்சுப் போட்டுக் கொள்ள வேண்டும். நம்பூதிரி குடும்பத்துப் பெண்கள், நம்பூதிரிப் பார்ப்பனர்களின் பெரிய, இருண்ட தரவாடுகளிலேயே ஒரு கொத்தடிமைப் போலத்தான், ஒரு துறவியைப் போலத்தான் வாழ முடியும். (Ref: தெரிந்த வரலாற்றின் தெரியாத பக்கங்கள்” Saturday, July 8. 2017” அந்தர் ஜனம் – பரிதாபத்துக்குரிய நம்பூதிரிப் பெண்கள்”) வெளியுலகத் தொடர்பும் இல்லாமல் ஒரு ‘இல்லத்’து அந்தர் ஜனங்களை விட்டு வேறு எந்தத் தொடர்பும் இல்லாமல் அச்சன் நம்பூதிரிக்குக் கட்டுப்பட்டு அந்த வீட்டைச் சேர்ந்த ஆண்களிடம் கூட பேச முடியாமல், ஒரு ‘மாடி வீட்டு ஏழைகளை’ப் போலவே அந்தர் ஜனங்களின் வாழ்க்கை அமைந்து போயின.
பெரும்பாலான ‘இல்லங்’களில் ஒருவேளை உணவிற்கு இரண்டு பறா (ஏறத்தாழ பதின்மூன்று கிலோ) அரிசியும், அதற்கு ஏற்ற அளவு பதார்த்தங்களும் சமைக்கும் பொறுப்பை இரண்டு அல்லது மூன்று அந்தர் ஜனங்கள்தான் செய்வர். வேதம் ஓதுதல் தொடர்பான ‘ஒத்து’ போன்ற சிறப்புப் பூசைகள் நடக்கும் விருந்துகளிலும் சமைப்பதும் இவர்கள் வேலைதான். அப்பொழுது வீட்டிலிருக்கும் மற்ற அந்தர் ஜனங்களும், அடுத்த இல்லத்து அந்தர் ஜனங்களும் உதவிக்கு வருவர். பெரிய பித்தளைப் பாத்திரங்களில், அரிசி சோறு சமைத்து கொதிக்கின்ற அந்த பாத்திரங்களைக் கவிழ்த்து, கஞ்சி வடித்துச் செய்யும் அந்த கடினமான வேலைகளை அந்த அந்தர் ஜனங்கள் செய்வது ஒரு கொடுமையான காட்சி! மற்றவர்களிடம் பேச முடியாது. முஸ்லீம் களின் ‘கோஷா’ என்ற முறையே மாற்றுப் பெயரில். மகிழ்ச்சியூட்டும் நிகழ்வுகளிலோ, தெருக் கொண்டாட்டங்களிலோ பங்கேற்க முடியாது. தொடர்ச்சியான கண்காணிப்பு, வீடுகளில் கூட ஜன்னல்கள் இல்லாத இருண்ட வீடுகள். நல்ல காற்றையும், உலகின் அற்புத அழகையும்கூட அவர்கள் பார்க்க முடியாது. இருண்ட தரவாடுகளில், சிறைபட்ட சிட்டுகளாகவே வாழ்க்கை முழுவதையும் கழிக்க வேண்டிய கட்டாயம்!
அழுதுகொண்டே பிறக்கும் குழந்தை வாழ்நாள் முழுவதும், மனதளவில் அழுதுகொண்டே வாழ்ந்து, மரணத்தை மவுனமாக ஏற்கும் வாழ்க்கைதான் ஒரு அந்தர் ஜனம் வாழ்க்கை! (வாழ்க்கை முழுவதும் உள்ளுக்குள் (அந்தர்) அழுதுகொண்டே வாழ்க்கையை நகர்த்தியதால்தான் “அந்தர்ஜனம்” பெயர் வந்ததோ?
அந்தர் ஜனம் கருவுற்றால் தரவாட்டில் பெரிய சிறப்புதான். ஆண் குழந்தையால் வம்ச விருத்தி ஏற்படும் என்று சிறப்பு வழிபாடுகளும், வேண்டுதல்களும், யாகங்களும் நடைபெறும். எதிர்பார்த்தபடி ஆண் குழந்தை பிறந்தால் இல்லம் முழுக்க பெருமகிழ்ச்சிதான். இல்லத்தின் பணியாளர்கள் குலவையிட்டு அந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வர். அருகில் உள்ள தரவாடுகளுக்கு இந்த மகிழ்ச்சியான செய்தி சொல்லப்படும் கிராமம் (நம்பூதிரிகளின் தரவாடுகள் இருக்கும் பகுதி) முழுவதும் அந்த மகிழ்ச்சியான செய்தி பரப்பப்படும். அந்த நேரம் அந்த இல்லத்தின் வேண்டுதல் பலிக்காமல் பெண் குழந்தை பிறந்து விடுமானால், எந்தவித மகிழ்ச்சியான கொண்டாட்டங்களும் இருக்காது. கதவை மெதுவாகத் தட்டி மற்றவர்களிடம் கிசுகிசுப்பாக செய்தி சொல்வார்கள். அச்சன் நம்பூதிரி இல்லத்தில் மரணமடைந்தால், ‘அம்மா’ என்ற அவர் மனைவி படும் அவமானங்கள், புறக்கணிப்புகள், பொருளாதார மறுப்புகள் ஆகியவை அவரை அளவிற்கு மீறி புண்படுத்தும். அச்சன் நம்பூதிரி உயிரோடு இருக்கம் வரை அந்த இல்லத்தில் ஒரு அரசி போல் இருந்த ‘அம்மா’ அவர் மறைந்த உடன் செல்லாக் காசாகிவிடும் பரிதாப நிலை அனைத்துத் தரவாடுகளிலும் ஒரு இயல்பான நிகழ்வு. கணவனின் மரணத்திற்குப் பின், “பெண்ணுக்கென்று சொந்தமாக எதுவும் கிடையாது” என்பதே உண்மை நிலை.
பணக்கார நம்பூதிரிப் பார்ப்பனர்கள் வீட்டில், பிறந்த குழந்தையைப் பராமரிக்க ஏழை நம்பூதிரி இல்லத்துப் பெண் நியமிக்கப்படுவார். நாயர் பெண்கள் குழந்தையை (அந்த வீட்டில் வேலை செய்யும் தாசி) தொட்டால் ‘தீட்டு’ என்பதால் அவர்களுக்குக் குழந்தையைத் தொடக் கூட அனுமதி கிடையாது. பணியில் அமர்த்தப்பட்ட அந்த ஏழை நம்பூதிரிப் பார்ப்பனப் பெண் குழந்தைக்கு எண்ணெய்க் குளியல், உணவு ஊட்டல் போன்ற பணிகள் செய்வார்கள். “உடுத்துத் தொடங்கல்” என்ற பெண் குழந்தைக்கு சடங்கு நடக்கும் வரையிலும், ஆண் குழந்தைக்கு உபநயனம் நடக்கும் வரையிலும் அந்த ஏழைப் பெண் அங்கிருப்பார்.
கணவன் இறந்த பின் அவரின் மனைவி ஈரப் புடவையுடன் தான் இரவில் படுக்க வேண்டும். பெண் குழந்தைக்கு “உடுத்துத் தொடங்கல்” பெண் குழந்தைக்கு ஒரு மரப்பெட்டி மட்டும் ஒரே சொத்தாக வழங்கப்படும். திருமணத்தின்பொழுது அதை ஊர்வலமாகக் கணவன் வீட்டிற்கு எடுத்துச் செல்லும் ஒரு சடங்கு. பெண் கணவனுக்குத் திருமணத்தின் பொழுது வரதட்சனை கொடுக்க வேண்டும். உடுத்துத் தொடங்கல் சடங்கு முடிந்த பின் பிற ஜாதியினர் தொட்டு விட்டால் தீட்டாகி விட்டது என்பதால் குளித்து விட்டுத்தான் இல்லத்தின் உள் நுழைய முடியும். உடுத்துத் தொடங்கல் சடங்கிற்குப் பின் அந்தப் பெண் தனியாக (அவருக்கென்று ஒதுக்கப்பட்ட அறையில்தான் இருக்க முடியும். ஏறக்குறைய “தனிமைச் சிறை”தான். அந்தர் ஜனம் குழந்தை பூப்படைந்த பின் அவரது அனைத்து சுதந்திரங்களுக்கும் தடை செய்யப்பட்டுவிடும். (Ref: “யாத்திரை காட்டிலும், நாட்டிலும் by இந்திரா மேனன், ஆங்கிலப் பேராசிரியை, கமலா நேரு கல்லூரி, டில்லி)
நம்பூதிரிப் பார்ப்பனர் ‘இல்லங்’களில் அடைபட்டுக் கிடந்த அந்தர் ஜனங்கள் கல்வி கற்கும் உரிமை கிடையாது. கல்வியறிவின்மை, கடுமையான குடும்பக் கட்டுப்பாடுகள், தனிமை, சுதந்திரமின்மை ஆகிய கொடுமைகளுக்கு ஆளான அந்தர் ஜனங்கள் “கூண்டில் சிக்கிய எலிகளாக’த் தவித்தனர். அவர்கள் விடுதலை பல நூற்றாண்டுகள் தடைப்பட்ட, தடுக்கப்பட்ட ஒரு சமூக ஏற்பாடாகவே இருந்தது. இவர்கள் பட்ட கொடுமைகளுக்கு முடிவும் இந்த நூற்றாண்டில்தான் வந்தது. “பார்வதி நென்மேனி மங்கலம்” என்ற அந்தர் ஜனம், “அந்தர் ஜனம் சமாஜம்” என்ற ஒரு சமூக அமைப்பை நிறுவினார். “நாடா வாரா பாத் நல்லூர் இல்லம்” என்ற இருங்ஞாலக்குடாவில் பிறந்தவர் அவர். கேரளாவின் அந்தர் ஜனங்கள் வாழ்வில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய புரட்சி மங்கை அவர்.
அந்தர் ஜனம் மறைக்குடையை கொண்டு போகும் பழக்கத்தை மாற்ற வேண்டும் என்ற போராட்டத்தைத் துவக்கினார். பெண்களின் (அந்தர் ஜனங்களின்) கற்பின் அடையாளமாகக் கருதப்பட்ட இந்தப் பழக்கத்தை எதிர்த்துதான் இவரின் முதல் போராட்டம் அமைந்தது. நம்பூதிரிப் பார்ப்பனர் குடும்பங்களில் முதல்முதலாக ஒரு விதவை அந்தர் ஜனத்திற்கு திருமணம் செய்து வைத்தவர் இவர். பார்வதி நென்மேனி மங்கலம் என்ற புரட்சிப் பெண் பற்றவைத்த புரட்சித் தீ கொழுந்துவிட்டு எரிந்து நம்பூதிரிப் பார்ப்பனப் பெண்களின் வாழ்வில் பெரும் மாற்றத்தை நிகழ்த்தியது.
– தொடருவேன்…
