மிக மோசமான பெயர் மாற்றம்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை
உருத்தெரியாதபடி சிதைக்கும் முயற்சி கைவிடப்பட வேண்டும்!
மக்களவையில் டிசம்பர் 16ஆம் நாளன்று தாக்கல் செய்யப்பட்ட மசோதாவின் மூலம் 100 நாள் வேலைத் திட்டத்தின் பெயர் தேவையின்றி மாற்றப்பட்டுள்ளது. “மகாத்மா காந்தி” பெயர் நீக்கப்பட்டு ‘விக்ஸித் பாரத் கேரண்டி ஃபார் ரோஜ்கார் அண்ட் ஜீவிகா மிஷன் (கிராமின்)’ என்று மாற்றப்பட்டு ‘VB – G RAM G’ என்று சிதைக்கப்பட்டுள்ளது. இது கைவிடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்த ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்கள் உள்ளன. இந்தப் பெயர் மாற்றம் இந்தத் திட்டத்தின் அடிப்படை லட்சியத்தின் அவமதிப்பே ஆகும். மாநிலங்களின் வளர்ச்சியைத் தடுக்க பா.ஜ.க. தலைமையில் இயங்கும் ஒன்றிய அரசின் மற்றொரு முயற்சி இது. பா.ஜ.க. அரசை வழிநடத்தி வரும் அதன் கொள்கை எஜமானான ஆர்.எஸ்.எஸ்சுக்கு காந்தியாருடன் நிலவிய கருத்து வேற்றுமையே இந்தப் பெயர் மாற்றத்துக்கு ஒரே காரணம் என்பதே உண்மை.
இருபது ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள இந்த திட்டத்திற்குக் காந்தியின் ஜனநாயகப் பரவலாக்கத்தை முன்னிறுத்தும் கிராம சுயராஜ்யக் கொள்கையை நினைவூட்டும் வகையில்தான் அவரது பெயர் சூட்டப்பட்டது. இதை முற்றிலுமாக முடிவுக்கு கொண்டு வரவே பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ். அரசு உறுதியாக உள்ளது. இந்த புதிய மசோதாவின் மூலம், முடிவெடுக்கும் முழு அதிகாரத்தை தன் வசமே வைத்துக்கொள்ளும் ஒன்றிய அரசு இத்திசையில் ஆக்கப்பூர்வமான பங்களிப்பு எதையும் வழங்கப் போவதில்லை.
ஒன்றிய பா.ஜ.க. அரசை ஆதரிப்பவர்கள் ஆண்டுக்கு 125 நாட்களாக வேலைவாய்ப்புத் திட்டம் உயருவதால் கிராமப்புற குடும்பங்கள் பெருமளவுக்கு பயனடையும் என்று சுட்டிக் காட்டுகிறார்கள். ஆனால் தரவுகளின்படி தெரியவருவது என்னவென்றால் 2020-2021 கோவிட்19 (கரோனா) காலக் கட்டத்தில் மட்டும்தான் 9.5 சதவிகித ஊரகக் குடும்பங்கள் (ஏறத்தாழ 72 லட்சம் குடும்பங்கள்) 100 நாட்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் 7 சதவிகித கிராமப்புற குடும்பங்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு முழுமையாகக் கிடைத்துள்ளது.
இதுவரை ஒன்றிய அரசு இத்திட்டத்தைச் செயல்படுத்துவ தற்கான செலவை முழுதாக ஏற்றுக்கொண்ட நிலை மாறி, மாநில அரசுகளின் பங்கும் 60:40 என்ற விகிதத்தில் இருக்கும் நிலை இந்த மாற்றத்தால் ஏற்படும். 100 சதவிகிதம் தாங்கள் தரும் நிலையிலிருந்து ஒன்றிய அரசு நழுவி 40 சதவிகித பணத்தை மாநில அரசுகள் தரவேண்டும் என்கிறது இந்த புதிய சட்ட முன்வரைவு. முந்தைய திட்டத்தின் பயனாகக் கிராமப்புற பணியாளர்களின் ஊதியம் கணிசமாக உயர்ந்திருந்தது. அது இந்த மாற்றத்தால் பாதிக்கப்படக்கூடும்.
மாநில அரசுகளின் நிதி நிலைமை ஏற்ெகனவே மோசமாக உள்ளது. ஜி.எஸ்.டி. வரி சீரமைப்புக் காரணமாக அதன் தாக்கமும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்தான் மாநில அரசுகளின்மீது 40% நிதிச் சுமையை ஒன்றிய அரசு திணிக்கிறது.
இந்தப் புதிய திட்டத்திற்கு பல மாநில அரசுகள் ஒத்துழைப்பு தர மறுக்கக்கூடும். இந்த மாற்றமே ஓர் சாதுரியமான அரசியல் விளையாட்டாகவே பார்க்கப்படும்.
அடித்தட்டில் வசிப்போரின் தேவையைக் (demand) கருத்தில் கொண்டு தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் அடிப்படை நோக்கம்தான் அத்திட்டத்தின் உயிர். அது இந்தப் புதிய மசோதாவில் மாற்றப்பட்டுள்ளது. ஒன்றிய அரசால் எந்த நிலையிலும்குறைக்கப்படவும், நிறுத்தப்படவும் வாய்ப்புள்ள விநியோகத்தை அடிப்படைக் கொண்ட கட்டமைப்பாகும்.
ஊரக வேலைவாய்ப்புகளில் ஒன்றிய அரசே தன்னிச்சையாக முடிவெடுக்க இது வழிவகுத்துத் தரும். மாநில அரசுகளின் நிதிச்சுமை நிச்சயம் அதிகரிக்கும். செயல்பாட்டிற்காக நேரிடும் அதிகப்படியான செலவை மாநில அரசுகளே சமாளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
தமிழ்நாடு அரசும், கேரள அரசும் இந்தப் புதிய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மாநில அரசுகளை கடுமையாக பாதிக்கும் மாற்றம் இது என்பது அவர்களின் வாதம். விதைப்பு, அறுவடை போன்ற விவசாயப் பணிகள் நடைபெறும்போது, இத்திட்டப் பணிகள் இடையூறாக இருக்கக் கூடாது என்பது மாநிலங்களில் ஒப்புதலுடன் வெளிப்படையாகச் சேர்க்கப்படலாம் என்பதுதான் இந்த மசோதாவின் மற்றொரு அம்சமாகும்.
100 நாள் வேலைத் திட்டத்தின்மூலம் வேலை உறுதி செய்யப்பட்டதால், விவசாயக் கூலி வேலைகளுக்கு ஆட்கள் கிடைக்கவில்லை என்பது நிலச்சுவான்தாரர்களால் தொடர்ந்து சொல்லப்படும் குற்றச்சாட்டு ஆகும். இச்சட்டம் காந்தியின் உணர்வுகளுக்கு ஏற்ப அமைந்துள்ளதாகவும், அது நல்ல அரசாட்சிக்கும், ராமராஜ்யத்தின் இலக்கை அடையவும் உதவும் எனஉணர்ச்சிப் பூர்வமாகப்பேசினார் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சர் சிவராஜ் சிங் சவுஹான். ஆனால் ‘அடி மட்டத்தில் ஜனநாயகம் பரவலாக்கப்படாமல், இது செயல்பாட்டுக்கு உதவாது’ என்ற புரிதல் இச்சட்ட மசோதாவால் ஊக்குவிக்கப்படவோ, வளர்க்கப்படவோ இல்லை.
நன்றி: ‘தி இந்து’ (ஆங்கிலம்)
தலையங்கம் – 18.12.2025)
மொழியாக்கம்: எம்.ஆர். மனோகர் & சமா.
