சென்னை, டிச.19 ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் விழாக்களை முன்னிட்டு, மகளிர் சுயஉதவிக் குழுவினரின் விற்பனை கண்காட்சியை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிதியாண்டில் சுயஉதவிக் குழுவினரின் பொருட்கள் இதுவரை ரூ.690 கோடிக்கு விற்பனையாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
உதயநிதி ஸ்டாலின்
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் மகளிர் சுய உதவிக்குழு வினரின் விற்பனை டிசம்பர் 18 தொடங்கியது. ஜனவரி 4-ஆம் தேதி வரை (18 நாட்கள்) இக்கண்காட்சி நடைபெற உள்ளது. கண்காட்சியில் 72 சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த உறுப்பினர்களின் 50 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. கண்காட்சியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் புதிய அடையாள அட் டைகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார். மதுரையில் உணவுத் திருவிழாவைச் சிறப்பாக நடத்திய மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் மற்றும் விற்பனையில் முதலிடம் பிடித்த சுயஉதவிக் குழுவினருக்குக் கேடயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பேசினார். செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது…
நடப்பு நிதியாண்டில் ரூ.600 கோடி விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப் பட்டிருந்தது. ஆனால், நிதியாண்டு முடிய இன்னும் 3 மாதங்கள் உள்ள நிலையிலேயே, இலக்கை விஞ்சி ரூ.690 கோடிக்கு விற்பனை நடைபெற்றுள்ளது. “ஒன்றிய அரசிடமிருந்து தமிழ் நாட்டிற்கு வரவேண்டிய ரூ.4 ஆயிரம் கோடி நிதி இன்னும் வரவில்லை. அதனை வலியுறுத்திக் கேட்டுக் கொண்டிருக்கிறோம்” என்று தெரிவித்தார்.
