நவலூர், டிச. 19- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் பெரியார் புரா ஊரக வளர்ச்சி மய்யம், மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை, பெரியார் மணியம்மை மருத்துவமனை, பெரியார் மருத்துவ குழுமம் பெரியார் மருந்தியல் கல்லூரி மற்றும் திருச்சி ஹர்சமித்திரா புற்று நோய் மற்றும் பல்நோக்கு மருத்துவமனை, முதலியவை இணைந்து, பெரியார் நிறுவனங்களின் நிறுவனர், வேந்தர் தமிழர் தலைவர் டாக்டர் கி.வீரமணி அவர்களின் 93ஆவது பிறந்த நாளையொட்டி மாபெரும் இலவச பொது மருத்துவம் மற்றும் புற்றுநோய் கண்டறிதல் முகாமை தஞ்சாவூர் மாவட்டம் பெரியார் புரா கிராமமான நவலூரில் நடத்தின.
அடிப்படை வசதிகள் குறைவான நகர்புறங்களில் இருந்து தொலைவில் உள்ள இந்த கிராமத்தில் வேந்தர் அவர்களின் தொண்டுள்ளம் அறிந்து நடத்தப்பட்ட இந்த மருத்துவ முகாமில் நூற்றுக்கணக்கானவர்கள் நம்பிக்கையோடு பங்கேற்று தங்கள் உடல்நிலையை பரிசோதனை செய்துகொண்டு மருத்துவ ஆலோசனை பெற்றனர். நோய் மற்றும் சத்துப் பற்றாக்குறைகளுக்கு இலவசமாக மருந்துகளை வழங்கி அவசியமானவர்களுக்கு ஊசியும் போடப்பட்டது.
மருத்துவர் கவுதமன்
பெரியார் மருத்துவ குழுமத்தின் பொறுப்பாளர் மருத்துவர் கவுதமன் பங்கேற்று தொடங்கி வைத்த இந்த மருத்துவ முகாமில் பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிறுவன பெரியார் புரா திட்ட பேராசிரியர் முனைவர் வெ.சுகுமாரன் ஒருங்கிணைத்தார். பெரியார் மருந்தியல் கல்லூரி முதல்வர் பேராசிரியர் முனைவர் இரா. செந்தாமரை, பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவர்களுடன் வருகை தந்து முகாமை முன்நின்று நடத்தினார். திருச்சி ஹர்சமித்திரா புற்றுநோய் மற்றும் பல்நோக்கு மருத்துவமனை மருத்துவர்களும் ஊழியர்களும் பெண்களுக்கு புற்றுநோய் அறிகுறிகள் குறித்த பரிசோதனை செய்து தக்க ஆலோசனை வழங்கினர். பெரியார் மணியம்மை மருத்துவமனை மருத்துவர் சித்ரா ராமசாமி மற்றும் செவிலியர்கள் மருத்துவ பணிகளை முனைப்புடன் மேற்கொண்டார்கள். பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிறுவன மின்னணுவியல் மற்றும் மின்னணு பொறியியல் துறை பேராசிரியர் அசோக்ராஜ் மற்றும் இறுதியாண்டு மாணவர்கள் ஆர்வத்துடன் மருத்துவ முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
மருத்துவ முகாம் குறித்த விபரங்களை துண்டுப் பிரசுரம் மூலம் மருத்துவ முகாமுக்கு முந்தைய நாளே உள்ளூர் குழந்தைகள் வீடு வீடாகச் கொண்டு சேர்த்தனர். பெருந்திரளாக கிராம மக்கள் இந்நிகழ்வில் பங்கேற்று தங்களது கிராமத்தின் வாழ்த்துக்களை வேந்தர் அவர்களுக்கு தெரிவிக்கச் சொன்னார்கள்.
இந்நிகழ்வுடன் நவலூர் கிரா மத்தில் ஆர்வமிக்க குழந்தைகளை ஒருங்கிணைத்து அவர்களுக்கு கதை, பாடல், பயிற்சி, வாசிப்பு அனுபவம் ஆகியவற்றை வழங்கி அவர்களுக்கு என ஒரு வாசிப்பு குழுவையும் அமைத்து அதற்கு பெரியார் புரா வாசிப்பு இலக்கம் என பெயரிட்டு பேராசிரியர் வெ.சுகுமாரன் அறிமுகம் செய்தார். குழந்தைகளின் வாசிப்பு நிகழ்ச்சி வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் அங்கு அந்த ஊர் பட்டதாரி மாணவி சவுபர்னிகா, முருகானந்தம் முன்னெடுப்பால் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டது. முகாம் ஏற்பாடுகளை உள்ளூர் பிரமுகர்கள் பழனிச்சாமி, சங்கர், முருகானந்தம் உள்ளிட்டவர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
