சென்னை, டிச.19 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயரில் மகாத்மா காந்தி பெயரை நீக்கிய ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைமையில் இண்டியா கூட் டணி கட்சி தலைவர்கள் பங் கேற்ற ஆர்ப்பாட்டம் சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகம் அருகில் நேற்று (18.12.2025) நடை பெற்றது.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பட்டத்தில் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பின்னர் ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியதாவது:
மாநிலங்களுக்கு நிதிச்சுமை: இந்தியாவில் மனிதர்கள் உள்ளவரை மகாத்மா காந்தி பெயரை அழிக்க முடியாது. காந்தியை படு கொலை செய்த பிறகும் இன்னும் அவர்களது வெறி அடங்கவில்லை. இந்தியாவில் எத்தனையோ மக்கள் இந்த திட்டத்தில் பயன் பெற்றனர்.
புரட்சிகரமான இந்தத் திட்டத்தை மோடி, அமித்ஷா மற்றும் ஆர்எஸ்எஸ்.காரர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பாஜக ஆளாத மாநிலங்களில் நிதிச் சுமையை ஏற்படுத்த வேண்டும்.
பாஜக ஆளும் மாநிலங்களில் கூடுதலாக நிதி கொடுக்க வேண்டும் என பாஜக ஆட்சி நடத்தி வருகிறது. எனவே, முதலமைச்சர் தலைமையில் அனைத்து கிராமங்களிலும், மகாத்மா காந்தி வேலை உறுதித் திட்ட பயனாளிகளுடன் அணி திரண்டு போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
ஆசிரியர் கி.வீரமணி
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பேசும்போது, ‘‘சட்ட விரோதமாகவும், சமூக நீதிக்கு எதிராகவும் செயல்படும் ஓர் ஆட்சியாக ஆர்எஸ்எஸ் வழிநடத்தும் பாஜக ஆட்சி உள்ளது. இது திட்டத்தின் அடிப்படை நோக்கத்தையே சிதைக்கும் செயலாகும்’’என்றார். திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசும்போது, ‘‘இந்த சட்டத்தை பிரதமர் திரும்பப்பெறும் வரை இண்டியா கூட்டணியின் போராட்டம் ஓயாது’’ என்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலை வர்கள் கிருஷ்ணசாமி, கே.வீ.தங்கபாலு, மதிமுக வெளியீட்டு பிரிவு செயலாளர் வந்தியத்தேவன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநில தலைவர் அபூபக்கர், சி.பி.அய். மாநில துணைச் செயலாளர் பெரியசாமி, ஆம் ஆத்மி மாநில செயலாளர் வசீகரன், மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் கண்ணன், மக்கள் நீதிமய்ய பொறுப்பாளர் அரவிந்தராஜ், மனிதநேய மக்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் சமது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
