திண்டுக்கல், டிச.19 திண்டுக்கல் பெருமாள் கோயில் பட்டி கிராமத்தில் கார்த்திகைத் தீபம் ஏற்றும் பிரச்சினையில் தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தீர்ப்புக்கு சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு இடைக்காலத் தடை விதித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், பெருமாள் கோயில்பட்டி கிராமத்தில் உள்ள மண்டு கருப்பசாமி கோவில் அருகே கார்த்திகை தீபம் ஏற்ற இந்து அமைப்பினர் அனுமதி கோரினர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால், பாதுகாப்பு கருதி அதிகாரிகள் அனுமதி மறுத்தனர். இதனை எதிர்த்து ஹிந்து அமைப்பினர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், “வழிபாட்டு உரிமையை சட்டம்-ஒழுங்கு காரணங்களைக் காட்டி தடுக்க முடியாது” என்று கூறி, குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் தீபம் ஏற்ற அனுமதி வழங்கினார்.
நீதிமன்றம் அனுமதி அளித்த போதிலும், அப் பகுதியில் பதற்றம் நிலவுவதாகக் கூறி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பி.என்.எஸ்.எஸ். – BNSS பிரிவு 163 (முன்பு 144 தடை உத்தரவு) பிறப்பித்தார். இதன் மூலம்: கூட்டமாக கூடுவதற்கும், தீபம் ஏற்றுவதற்கும் தடை விதிக்கப்பட்டது. ‘நீதிமன்ற உத்தரவை விட பொது அமைதியே முக்கியம்’ என்ற அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தனி நீதிபதி (ஜி.ஆர். சுவாமிநாதன்) வழங்கிய உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்தது. இதனை விசாரித்த உயர்நீதிமன்றத்தின் இரட்டை நீதிபதிகள் அமர்வு, தற்போது தனி நீதிபதி யின் உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்தது.
