ஆத்தூரில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பேட்டி
ஆத்தூர், டிச.18 – மோடி தலைமையில் அமைந்த பா.ஜ.க. ஆட்சிக்கு காந்தி பெயரே உறுத்திக் கொண்டிருந்தது; மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் பெயரை ‘விக்சித்பாரத் ஜி ராம் ஜி’ என்று மாற்றியிருக்கிறார்கள் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
நேற்று (17.12.2025) சேலம் ஆத்தூருக்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்பேட்டியின் விவரம் வருமாறு:
மகாத்மா காந்தியின் பெயர்
‘யுபிஏ’ கூட்டணி என்ற காங்கிரஸ் தலைமையில் அமைந்த திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் இடதுசாரிகள் கட்சிகள் எல்லாம் இணைந்து பல ஆண்டுகளுக்கு முன்னால், மன்மோகன்சிங் அவர்கள் பிரதமராக இருந்தபோது, கிராமப்புற ஏழை, எளிய மக்களுக்கு, விவசாயத் துறையில் ஆண்டு முழுவதும் வேலை கிடையாது என்பதால், மற்ற எஞ்சிய, மீதி காலங்களில், அவர்கள் வறுமையில் வாடுவதைப் போக்குவதற்காக ‘‘ மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்’’ என்ற திட்டத்தினை குறைந்தபட்சம் நூறு நாள்களுக்கு வேலை வாய்ப்பு அளித்து, நாளொன்றுக்கு நூறு ரூபாய் கிடைக்கக்கூடிய அளவிற்கு ஒரு நல்ல திட்டத்தைக் கொண்டு வந்தார்.
அந்தத் திட்டத்தை உருவாக்கும்போதே, அய்க்கிய முற்போக்குக் கூட்டணி சார்பாக, நூறு சதவிகிதம், அத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு மாநில அரசுகளுக்குத்தான் வாய்ப்பு. ஏனென்றால், ஒன்றியத்தில் ஓர் ஆட்சி இருந்தாலும், மக்களுக்கும், அவ்வரசுக்கும் நேரிடையான தொடர்பு கிடையாது.
ஆகவே, அந்தத் திட்டத்தினை நேரடியாகக் கண்காணிக்கவேண்டும் என்றால், அது ஒன்றிய நெடுஞ்சாலைத் துறையாக இருந்தாலும், அல்லது விவசாயத் துறையாக இருந்தாலும் மாநிலத்தின்மூலம்தான் அதனைச் செய்ய முடியும் என்ற நிலை இருந்த போதிலும், அத்திட்டங்களுக்கு 100 சதவிகித பங்களிப்பு என்பது ஒன்றிய அரசுக்குத்தான் உண்டு. அத்திட்டத்திற்கு ஒன்றிய அரசுதான் பணம் கொடுக்கும்.
ஒன்றியத்தில் காங்கிரஸ் ஆட்சி மாறி, ஆர்.எஸ்.எஸ்.சினுடைய ஆட்சியாக இருக்கக்கூடிய பா.ஜ.க. மோடி தலைமையில் அமைந்த ஆட்சிக்கு, ‘மகாத்மா காந்தி’ என்ற பெயரே, அவர்களுக்கு உறுத்திக் கொண்டிருந்தது. வேறு வழியில்லாமல், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல், ‘அந்தத் திட்டத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக, படிப்படியாக நிறுத்த வேண்டும், ஒழிக்கவேண்டும், ரத்து செய்யவேண்டும்’ என்பதற்காகத்தான், அந்தத் திட்டங்களுக்கு 100 சதவிகிதத்திற்குப் பதிலாக 80 சதவிகித நிதியைக் கொடுக்க ஆரம்பித்தார்கள்.
அதுமட்டுமல்ல, இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்ற மாநில அரசுகளுக்குத் தரவேண்டிய நிதியையும் பாக்கி வைத்துவிட்டார்கள். அந்தத் திட்டத்திற்கான செலவை முதலிலேயே செய்துவிட்டது மாநில அரசு. அந்த நிதியைத் தருவதற்கே, தாமதித்து, தாமதித்துக் கொடுத்து, தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் அதற்காகவே போராடவேண்டிய ஒரு சூழ்நிலை வந்தது.
பா.ஜ.க.விற்கு பெரும்பான்மை இல்லை
‘‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட’’த்தின் பெயரை ‘‘விக்சித் பாரத் ஜி ராம் ஜி’’ என்று மாற்றியிருக்கிறார்கள்.
இது ஒரு பக்கத்தில் இருந்தாலும்கூட, ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஒன்றிய ஆட்சியினர் நினைப்பதையெல்லாம் நிறைவேற்றிவிடவேண்டும் என்று நினைக்கிறார்கள். ஏனென்றால், ஒன்றிய பா.ஜ.க. மோடி அரசுக்கு, அறுதிப் பெரும்பான்மை இல்லை. அதன் காரணமாகத்தான், பீகாரில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது, எல்லாவிதமான முறைகளையும் கையாண்டு, அங்கே வெற்றி பெற்றுவிட்டார்கள்.
ஆனாலும், ஒன்றிய பா.ஜ.க. ஆட்சிக்கு, முழுப் பெரும்பான்மை வரவில்லை. கூட்டணிக் கட்சிகளை நம்பித்தான் இருக்கிறார்கள்.
தேசிய ஜனநாயக முன்னணிக்குத்தான் பெரும் பான்மை இருக்கிறதே தவிர, பா.ஜ.க.விற்குப் பெரும்பான்மை இல்லை.
இதற்கிடையில், மோடிக்கும், ஆர்.எஸ்.எஸ்.சுக்கும் உள்ளே ஒரு பனிப் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. 75 வயது என்ற ஓர் அளவுகோலை வைத்திருக்கிறார்கள். அதனால், என்ன நடக்கும் என்று தெரியாது.
ஒற்றை ஆட்சி
அவர்களுடைய நோக்கம் என்னவென்றால், ஒற்றை ஆட்சியை நிறுவவேண்டும்; கூட்டணி ஆட்சி என்பதற்கு விடை கொடுக்கவேண்டும். அதற்காக பல திட்டங்களை ஒவ்வொரு நாளும் அறிவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
நாடாளுமன்றத்தை ஒரு ‘சடங்காகவே’ நடத்துகிறார்கள். அங்கே விவாதங்கள் நடத்துவதற்கு அவர்கள் தயாராக இல்லை. அவர்கள் அறிவித்துள்ள திட்டங்களை, மசோதாக்களை நிறைவேற்றுகிறார்கள். அதில் ஒன்றுதான் ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட’த்தின் பெயரை மாற்றியிருக்கிறார்கள்.
இன்னும் ஒன்றே ஒன்றைத்தான் அவர்கள் செய்யவில்லை. இந்தியன் கரன்சியில் இருக்கும் காந்தியாரின் படத்தை எடுக்கவில்லை.
எப்பொழுதுமே ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார்கள். அதற்கு அடையாளமாகத்தான், 125 நாள்களாக அத்திட்டத்தை நீட்டிக்கிறோம் என்று சொன்னார்கள். இதைக் கேட்டவுடன் பாமர மக்கள் ‘‘பரவாயில்லையே, 100 நாள்களை, 125 நாள்களாக நீட்டியிருக்கிறார்களே’’ என்று நினைப்பார்கள்.
ஆனால், அது அப்படியில்லை. அந்தத் திட்டத்திற்கு ‘உத்தரவாத திட்டம்’ என்று பெயர். அந்த உத்தரவாதப்படி வேலை கொடுப்பார்களா என்ற உத்தரவாதமே இப்பொழுது இல்லை. முன்பு கொடுத்த 80 சதவிகித நிதியையும் 60 சதவிகிதமாகக் குறைத்திருக்கிறார்கள்.
இன்னொரு பக்கம் பார்த்தீர்களேயானால், மும்மொழித் திட்டத்தை ஏற்றால்தான், நிதி தருவோம் என்று ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி.
யூனியன் அரசு பட்டியல்; மாநில அரசு பட்டியல்; ஒத்திசைவுப் பட்டியல் என்ற மூன்று பட்டியல்கள்தான் உண்டு.
ஆனால், அதை நடைமுறைப்படுத்தாமல், எல்லாமே ஒன்றிய அரசுதான், ஒற்றை அரசுதான். இங்கே கூட்டணி அரசு, கூட்டாட்சியே இருக்கக்கூடாது என்று நினைக்கிறார்கள்.
பல்கலைக் கழகங்களைக்கூட, நாங்கள் சொல்வதுபோன்றுதான் நடக்கவேண்டும் என்று சொல்கிறார்கள்.
பல்கலைக் கழகங்கள் என்பவை சுதந்திரமானவை. ஒவ்வொரு பல்கலைக் கழகத்திற்கும், மாநிலத்தில்கூட, தனித்தனியே அவரவர்களுக்கு அமைப்புகள் உண்டு; கல்வித் திட்டங்கள் உண்டு. அவையெல்லாவற்றையும் எடுத்துவிட்டு, ஒரே அளவிற்கு, இதுதான் பாசிசம், ஒற்றை ஆட்சி என்று சொல்லுகிறார்கள்.
எனவே, மாநில அரசுகளையே இல்லாமல் ஆக்குவதுதான் ஆர்.எஸ்.எஸ்.சினுடைய கொள்கையாகும்.
ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மதம், ஒரே கலாச்சாரம் என்பதுதான் அவர்களுடைய திட்டங்களாகும். அதை நடைமுறைக்குக் கொண்டு வரவேண்டும் என்பதற்காக வேகமாக அதனைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஆத்தூரில் தமிழர் தலைவரின் உரை கேட்கத் திரண்டிருந்தோர்
ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கம்
அதற்கு வசதியாக, எஸ்.அய்.ஆர். என்று சொல்லக்கூடிய அளவிற்கு, அரசியலமைப்புச் சட்டத்தில் இல்லாத ஒன்றை, தேர்தல் ஆணையத்தையே வளைத்துக் கொண்டார்கள்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் என்ற பெயரால், எதிர்க்கட்சிகள் ஆளுகின்ற மாநிலங்களைக் குறி வைத்து செயல்பட்டு வருகிறார்கள். தமிழ்நாட்டில்கூட, ஏறத்தாழ ஒரு கோடி வாக்காளர்களுக்கு நீக்கப்பட்டு இருக்கிறார்கள் என்ற செய்தி இன்றைக்கு வெளிவந்திருக்கிறது.
அதற்காகத்தான், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்தை தி.மு.க. கூட்டணி கட்சிகள் எதிர்த்தன. இதுகுறித்து நீதிமன்றத்திலும் வழக்கு நிலுவையில் இருக்கின்றது. ஆனால், அதைப்பற்றி அவர்கள் கவலைப்படாமல், ‘‘எங்களுக்குத்தான் அதிகாரம் இருக்கிறது’’ என்று சொல்கிறார்கள்.
இவற்றையெல்லாம் மக்களிடம் விளக்கிச் சொல்வதற்காகத்தான், ‘‘இதுதான் ஆர்.எஸ்.எஸ். – பி.ஜே.பி. ஆட்சி; இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி’’ என்ற தலைப்பில், தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரத்தை நடத்திக்கொண்டிருக்கின்றோம். இன்று மாலையில், ஆத்தூரில் முதல் கூட்டம் நடைபெறுகிறது. அக்கூட்டம் முடிந்ததும், ராசிபுரத்தில் நடைபெறுகின்ற கூட்டத்திற்குச் செல்லவிருக்கின்றேன்.
இதுதான், இன்றைய தேவை! மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது எங்களுடைய வேலை!
நிச்சயமாக, இவற்றையெல்லாம் தாண்டி தி.மு.க. கூட்டணி 2026 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று, மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வரும்.



வானளாவிய அதிகாரம்
செய்தியாளர்: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த (எஸ்.அய்.ஆர்.) திட்டத்தில், இறந்தவர்களும், இடம்பெயர்ந்தவர்களும்தான் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதை எப்படி நாம் தவறு என்று எடுத்துக் கொள்ள முடியும். தவறு என்று சொன்னால், தி.மு.க. எப்படி அந்தப் பணிகளில் ஈடுபட்டிருக்கும்?
தமிழர் தலைவர்: தமிழ்நாட்டிலேயே ஒரு செய்தி வெளிவந்திருக்கிறதே, மாவட்ட ஆட்சியரிடம் சென்று ஒருவர், ‘‘அய்யா, நான் உயிரோடு இருக்கிறேன். வாக்காளர் பட்டியலில் நான் இறந்துவிட்டதாக என்னுடைய பெயர் நீக்கப்பட்டு இருக்கிறதே’’ என்று கேட்டிருக்கிறார்.
ஆகவேதான், இந்த அமைப்பு முறையில், தேர்தல் ஆணையம் செய்திருப்பது இன்னும் தெளிவாகவில்லை. இது தொடர்பான வழக்கில், பீகாரில், 65 லட்சம் வாக்காளர்களை எந்த அடிப்படையில் நீக்கினீர்கள் என்று உச்சநீதிமன்றம் கேட்டவுடன், 30 லட்சமாகக் குறைக்கிறோம் என்று சொன்னார்கள்.
புதுவையில், ஒரு லட்சம் வாக்காளர்கள் நீக்கம்; தமிழ்நாட்டில் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கம் என்று செய்திகள் எல்லாம் வருகின்றன.
செய்தியாளர்: தேர்தல் ஆணையம், வெளிப்படைத் தன்மையாகத்தான் நாங்கள் இருக்கிறோம் என்று சொல்கிறது. அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சிகளிடம், நீக்கிய வாக்காளர்களின் விவரங்களை அளித்து, இதில் ஏதாவது தவறு இருந்தால், சரி செய்துகொள்ளலாம் என்று கொடுத்திருக்கிறார்களே?
தமிழர் தலைவர்: எவ்வளவு நாள்கள் சரி செய்வார்கள். அதை சரி செய்வார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? ஆகவேதான், சடங்குக்குப் போன்று ஏதோ ஒன்றைச் சரி செய்வார்களே தவிர, நிச்சயமாக முழுமையாக சரி செய்ய மாட்டார்கள்.
என்றாலும், தமிழ்நாடு இப்பிரச்சினையில் எச்சரிக்கையாக இருக்கிறது. தேர்தல் ஆணையத்தையே ஒன்றிய அரசு தன்னுடைய பைக்குள் வைத்திருக்கிறது.
‘‘எங்களுக்கு வானளாவிய அதிகாரம் இருக்கிறது. எங்களை யாரும் கேள்வி கேட்க முடியாது’’ என்று உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு சொல்கிறது.
இதனால் கோபமடைந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், நாங்கள் கேட்கின்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள் என்று சொன்னார்கள்.
எனவே, இவற்றையெல்லாம் மக்களுக்கு விளக்கிச் சொல்வதற்காகத்தான் திராவிடர் கழகம் தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரக் கூட்டங்களை நடத்துகின்றது.
இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கூறினார்.
