கதைகள், கவிதைகள், கட்டுரைகள் என வாசிப்பில் இன்பம் கொண்டு, எழுத்தில் ஆர்வம் கொண்டு, எங்கிருந்து தொடங்குவது? எப்படித் தொடங்குவது? எதையெல்லாம் எழுதுவது? என்று ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த கல்லூரி மாணவர்களின் தேடல்களுக்குப்பெரும் விடைத்தீனியாக மதுரை உலகத் தமிழ்ச்சங்கத்தில் கடந்த 12, 13, 14 தேதிகளில் நடைபெற்ற வளரும் எழுத்தாளர்களுக்கான பயிலரங்கு அமைந்தது என்பது மிகையல்ல.

முதல் நாள்
12.12.2025 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நிகழ்வு ஆரம்பமானது. ‘வாருங்கள் படைப்போம்’ குழுவின் ஒருங்கிணைப்பாளர்,எழுத்தாளர் வினிதா மோகன் அனைவரையும் வரவேற்றும்,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், வாருங்கள் படைப்போம்,வாருங்கள் படிப்போம் அமைப்புகளை அறிமுகப்படுத்தியும் உரையாற்றினார்.
அடுத்ததாகத் திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர், ஊடகவியலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்கள் சிறப்புரையாற்றினார். அவர் உரையில் 100 ஆண்டுகளுக்கு முன்னால் என்ன நிலைமை இருந்தது, இப்போது எப்படி மாறி இருக்கிறது,அதற்குக் காரணமாக இருந்த சுயமரியாதை இயக்கம்,திராவிட இயக்கத்தின் தொடர்ச்சியான பணிகள்,ஏன் எழுதவேண்டும் என்பதை எல்லாம் குறிப்பிட்டு விட்டு, குறிப்பாக நாம் இன்று எழுதுகின்ற கருத்துகளைச் சில ஆண்டுகள் கழித்து நாமே ஏன் எழுதினோம் என்று நினைத்து வருந்தும்படியானதாகக் கருத்துகள் இருந்து விடக்கூடாது. எனவே ஆழ்ந்து யோசித்துச் சமுதாய நலத்திற்காகவும் மாற்றத்திற்காகவும் சீர்திருத்தத்திற்காகவும் நாம் எழுத வேண்டும், பேச வேண்டும். முனைவர் பர்வீன் சுல்தானா பேச்சு மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாகத் தன்னம்பிக்கையை ஊட்டுவதாக இருக்கும். உலகத் தமிழ் சங்க இயக்குநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அம்மையாருக்கு நமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்” என்று குறிப்பிட்டு உரையாற்றினார்.
தொடர்ந்து வாழ்த்துரை வழங்கிய பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலச்செயலாளர் சுப. முருகானந்தம், பெரியார் அவர்கள் நாம் பேச்சாளர்களாகவோ எழுத்தாளர்களாகவோ இருப்பது முக்கியமல்ல கருத்தாளர்களாக இருக்க வேண்டும் என்று அடிக்கடி கூறுவார்கள். அதன்படியும் நாம் எல்லோரும் சமுதாய மாற்றத்திற்காகவும் சமுதாய நலனுக்காகவும் எழுதக்கூடியவர்களாக நாம் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு உரையாற்றினார்.
தொடர்ந்து செம்மலர் இதழின் ஆசிரியர் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன், ஏன் எழுத வேண்டும், எப்படி எழுத வேண்டும், யாருக்காக எழுத வேண்டும் என்ற நோக்கத்தைப் பயிற்சியாளர்கள் உணர்ந்துகொள்ளவேண்டும் எனக்குறிப்பிட்டார். நமது சமூகம் ஜாதிகளால் ஆனது. ஜாதி ஒழியவேண்டும் என்பது போன்ற சமூகக் கருத்துகளை எழுதும்போது எதிர்ப்புவரும். அதையெல்லாம் எதிர்கொள்ளவேண்டும். எழுத்து என்பது மாற்றத்திற்கான எழுத்தாக இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டு,பல்வேறு படைப்புகளை எடுத்துக்காட்டினார். சமூக உளவியல் பார்வையை ஒரு ‘ஆசிரியர் – -மாணவர்’ கதையுடன் விளக்கிய விதம் அருமையாக இருந்தது. தன்னுடைய பல்வேறு அனுபங்களைத் தொட்டுக்காட்டி உரையாற்றினார்.
மதுரையில் உள்ள உலகத்தமிழ்ச்சங்கத்தின் இயக்குநர் முனைவர் இ. சா. பர்வீன் சுல்தானா தலைமையுரையாற்றினார். ஒரு படைப்பாளரின் எழுத்து எப்பொழுது தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை ஒரு அழகான மீன் கதையுடன் அவருக்கே உரிய பாணியில் அவர் சொல்லி ‘குரலற்றவர்களின் குரலாகப் படைப்புகள் ஒலிக்க வேண்டும். ‘ என்று மாணவர்களுக்குப் புரியும்படி எடுத்து இயம்பிய விதம் பாராட்டுதலுக்குரியது. ‘ரோஜா அத்தர்’ என்ற வாசனைத் திரவியம் பற்றிய கதையின் இறுதிப் பகுதியை அவருடைய உடல்மொழியுடன் சொல்லி முடித்த போது ஒரு கதையின் இறுதிப் பகுதி வாசகரின் மனதில் எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை உணர முடிந்தது.
தேநீர் இடைவெளிக்குப் பின் முனைவர் கோ. ஒளிவண்ணன் ‘எண்ணமும் எழுத்தும்‘ என்ற தலைப்பில் வகுப்பினை எடுத்தார். ஒரு சிறுகதை எழுதுவதற்கு எப்படிக் கட்டமைப்பது,அதற்கு எப்படி நம்மைச் சுற்றி நடக்கும் சம்பவங்களைப் பார்த்துக்கொண்டே இருப்பது, எவ்வளவுக்கெவ்வளவு நாம் கவனிக்கிறோமோ அதுதான் முக்கியம், நம் ஒவ்வொருவரைச் சுற்றியும் எவ்வளவோ விசயங்கள் நடந்து கொண்டே இருக்கிறது,மற்றவர்கள் அப்படியே பார்த்துக்கடந்து போய்விடுவார்கள், ஓர் எழுத்தாளன் இன்னும் கூடுதலாகப் பார்க்கவேண்டும். ஒருவருக்கு ஒரு பிரச்சனை என்றால் அவர்கள் நிலையில் நின்று நாம் பார்க்கவேண்டும். அப்போதுதான் உண்மையான உணர்வினை நாம் எழுத்தில் கொண்டு வர முடியும் என்று குறிப்பிட்டு உரையாற்றினார். ரசிய இலக்கியத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய நவீன சிறுகதை மன்னரென அழைக்கப்படும் ஆன்டன் செக்காவ் மற்றும் ஓ ஹென்றி என்றழைக்கப்படும் வில்லியம் சிட்னி போர்ட்டர் போன்ற உலக இலக்கியவாதிகளின் கதைகளின் வாயிலாகவும் ஒரு கருப்பொருளைக் கொண்டு கதைக்கு மேலும் எப்படி சுவாரசியம் சேர்ப்பது, எப்படி சம்பவக் கோவைகளாக அமைப்பது போன்றவற்றை விவரித்தார். அவரின் உரையின் இடையில் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளித்த மாணவ, மாணவிகளுக்குப் புத்தகங்களைப் பரிசாக அளித்தார்.
மதிய உணவு இடைவெளிக்குப் பின் எழுத்தாளர் சாம்ராஜ் உரையாற்றினார். ‘கதைக்கள விவரிப்பு வாசகர்களைக் கதை மாந்தர்களாகவே மாற்றி விட வேண்டும். ‘ என்றும் ‘எழுத்தாளர் விதைக்கின்ற விதைகள் வாசகனின் மனதில் விருட்சமாக ஆட்கொள்ள வேண்டும். ‘ என்று கூறி மாணவர்களுக்குப் பயிற்சியும் அளித்தார். தமிழில் இருக்கும் பல்வேறு எழுத்தாளர்களைப் பற்றியும் அவர்கள் எழுதியிருக்கும் கதைகளையும் குறிப்பிட்டார். மாணவ, மாணவிகளிடம் பசியினை அடிப்படையாகக்கொண்டு ஒரு 2 பக்கம் எழுதுங்கள் என்று குறிப்பிட்டார். பின்பு அதில் மிக நன்றாக எழுதிய பயிற்சியாளர்களுக்குப் புத்தகங்களைப் பரிசாக அளித்தார்.
மாலை தேநீருக்குப் பின் அனைத்து மாணவ, மாணவிகளும் வளாகத்தின் ஓரிடத்தில் அமர்ந்து கொள்ள, ‘ரசனை’ என்னும் தலைப்பில் இயக்குநர் பேரா முனைவர் பர்வீன் சுல்தானா உரையாற்றினார். பசுமையான வெளிப்புற வளாகத்தில் இயற்கையுடன் அமர்ந்து மாணவ, மாணவிகளிடம் பல்வேறு கேள்விகள் கேட்டு, வரலாற்றையும், படைப்புகளைப் பற்றியும் பதில்கள் சொல்லும் நிகழ்வாகவும் இது அமைந்தது. எழுத்தாளர்கள் ச. பிரின்சு என்னாரெசு பெரியார், முனைவர் கோ. ஒளிவண்ணன் ஆகியோரும் இந்த அமர்வில் அமர்ந்து மாணவ, மாணவிகளின் கேள்விகளுக்குப் பதிலும் விளக்கமும் அளித்தனர். மாணவ, மாணவிகள் மிக உற்சாகமாகக் கலந்து கொண்டு, பயிற்றுநர்களிடம் பல்வேறு அய்யங்களுக்கு விடை கேட்டு தெளிவு பெற்றனர். இரவு உணவுக்குப் பின்னும் அமர்ந்து வெகு நேரம் உரையாடி விட்டு உறங்கச்சென்றனர்.
300க்கும் மேற்பட்டவர்கள் பதிவு செய்து காத்திருந்தாலும் 100 பேர் மட்டுமே கல்லூரிகளின் ஒப்புதலோடு தேர்வு செய்யப்பட்டனர். அதில் 50 விழுக்காடு பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது; பெண் அடிமைத்தன கருத்துகள் இந்தத் தலைமுறை இருபால் பிள்ளைகளிடமும் இல்லாமல் இருந்தது மகிழத்தக்கது. காலத்தின் கட்டாயமாக இத்தகு வகுப்புகள் வேண்டும் என்பதும் நன்கு புலப்பட்டது.
இரண்டாம் நாள்
‘என் படைப்பும் என் அனுபவமும்’ என்ற தலைப்பில் எழுத்தாளர் கரன் கார்க்கி இரண்டாம் நாள் முதல் அமர்வைத் தொடங்கி வைத்தார். “ஒரு மனிதனை உண்மையான மனிதனாக்குபவை புத்தகங்களே என்று சொல்வேன். நமக்கு என்ன வரும் என்று அனுபவங்களில் இருந்து நாம் தான் கண்டுபிடிக்க வேண்டும். நானே எழுதி பிறகு சரியில்லை என்று என்னுடைய 50 கவிதைகளைப் கிழித்துப் போட்டேன். பின்பு எனக்கு நானே சவால் விட்டு எழுதத் தொடங்கி இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன். இந்தச் சமூகத்திற்கு நீ உன் எழுத்து மூலம் என்ன சொல்கிறாய் என்பது தான் மிக முக்கியம்” என்று தன் அனுபவத்தைப் பகிர்ந்தார்.
அவர் விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்த எழுத்தாளர் மலர்வதி, புத்தகங்கள் மட்டுமல்ல தன்னுடைய சொந்த வாழ்க்கையில் தன்னைச் சுற்றி நடக்கும் அவலங்களே தன்னை எழுதத் தூண்டியது என்றார். நான் ஒரு பெண், என் பிரச்சனைகளை நான் எழுதுகிறேன், எழுத்து எனதாக இருக்க வேண்டும், ஒட்டுமொத்த துப்புரவுத் தொழிலாளர்களின் வலிகளை என் வழியாக நான் பேசியதுதான் தூப்புக்காரி என்ற நூல் என்றார். பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான சமூகத்தின் பார்வை எப்படி இருக்கிறது என்பதையும் அப்பட்டமாக வெளிப்படுத்தினார். தன்னுடைய வெளிப்படையான துணிச்சலான உரையால் மாணவர்களை ஒன்ற வைத்தார்.
மின்சாரக் கம்பிகள் மீது மைனாக்கள் கூடு கட்டும். . . ஒவ்வொரு அலையின் பின்னால் ஒரு கடலுண்டு. . . நனையாத காலுக்கெல்லாம் கடலோடு உறவில்லை. . . என்பன போன்ற வரிகளை எடுத்துக்காட்டி “ஒரு குவளை ஹைக்கூ” என்ற தலைப்பில் மதிய உணவுக்குப் பின் மூன்றாவது அமர்வாக எழுத்தாளர் பேரா பிரதீப் குமார் ஹைக்கூ எழுதுவதற்கான ஏராளமான குறிப்புகளை வழங்கினார். . . தன் வகுப்பு முடிந்ததும் மாணவர்களை எழுதிக் கொடுக்கச் சொல்லி அதைப் படித்துப் பரிசுகளும் வழங்கிச் சென்றார். முறையான தேநீர் இடைவெளி சரியான நேரத்திற்கு உணவு என்று சிறந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
மதியம் நான்காவது அமர்வாக “நவீன உலகில் மொழிபெயர்ப்புக் கலை” என்ற தலைப்பில் முனைவர் ரெஜினா சந்திரா உரையாற்றினார். “மொழிபெயர்ப்புச் செய்ய மொழிபெயர்ப்பு நூல்கள் நிறைய வாசிக்க வேண்டும், சில சொற்களுக்கு- பழமொழிகளுக்கு அதன் சரியான பொருள் புரியும் படியான சொற்களைப் பயன்படுத்த வேண்டும், மற்ற மொழியில் எழுதும் போது அதற்கான இலக்கணம் சரியாக இருக்க வேண்டும், உணர்வுகளை முழுமையாக அந்த மொழியிலும் கடத்த வேண்டும், மொத்தத்தில் எந்த நூலை மொழிபெயர்க்கிறோமோ அதற்கு நேர்மையாக நாம் இருக்க வேண்டும் ” என்றார்.
அதே தலைப்பில் எழுத்தாளர் பத்மா அமர்நாத் இணைந்து பேசினார். “நாம் ஒரு படைப்பை நம் மொழியில் வாசிக்கும் போது கண்ணீர் வந்தால் நாம் மொழிபெயர்ப்புச் செய்யும்போது அதை வாசிப்பவர்களுக்கும் கண்ணீர் வரவேண்டும். நாம் மற்ற நாட்டு கலாச்சாரத்தையும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். நாம் பயன்படுத்தும் சொற்களுக்கு ஏற்ற சரியான- பொருள் மாறுபாடு ஆகாத சொற்களை நாம் பயன்படுத்த வேண்டும், ஒவ்வொரு நாட்டிலும் எந்த மாதிரியான சிந்தனைகள் இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று படிப்படியாகப் பல அனுபவக் குறிப்புகளை மாணவர்களுக்குக் கொடுத்தார். இந்தக் காலகட்டங்களில் மொழிபெயர்ப்பின் மிகுந்த அவசியத்தை விளக்கிச் சொன்ன முனைவர் கோ. ஒளிவண்ணன், இத்துறை இன்றைக்குப் பணம் ஈட்டும் துறையாக மாறி வருவதையும் வாய்ப்புகள் விரிந்து இருப்பதையும் மாணவர்களுக்கு அறியப்படுத்தினார். இரண்டு நாள் நிகழ்வுகளையும் வாருங்கள் படிப்போம் குழுவின் ஒருங்கிணைப்பாளர் எழுத்தாளர் கலைபாலா தொகுத்தளித்தார்.
மாலை 5 மணியளவில் வாருங்கள் படிப்போம் குழு சார்பில் மலர் ஒன்று வெளியிடப்பட்டது. ஆறு ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட வாருங்கள் படிப்போம்,வாருங்கள் படைப்போம், ஹாய் வாங்க கதை கேட்போம் என்ற குழுக்களின் செயல்பாடுகளைப் பற்றியும் மொத்தத்தில் இதுவரை நடைபெற்ற 700க்கும் மேற்பட்ட புத்தகத் திறனாய்வு மற்றும் படைப்பாளர்களுடனான கலந்துரையாடல் பற்றிய தகவல்களை எல்லாம் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
அரங்கத்தில் வகுப்புகள் நிறைவு பெற்றாலும் அந்தி நேர திறந்த வெளி வகுப்புகளாய் இரவு உணவு வரை ஒவ்வொரு நாளும் நீடித்துக் கொண்டே இருந்தது. மேடைத் தயக்கம் என்பதாக ஏதுன்றி தன் தனித்திறமைகளைப் பாடலாகவும் பேச்சாகவும் மாணவர்கள் வெளிப்படுத்தி மகிழ்ந்தனர். தேனீக்களைப் போலவே சுறுசுறுப்பாகத் தமக்கு வேண்டிய செய்திகளைச் சேகரிப்பதிலே முனைப்பு காட்டினர்.

மூன்றாம் நாள்
மூன்றாம் நாள் முதல் அமர்வாக “சிறுகதை உத்திகள்” எனும் தலைப்பில் பேராசிரியர் சி. ஆர். மஞ்சுளா உரையாற்றினார். உண்மையின் பக்கத்தில் நின்று பேசும் புனைவு மொழியால் ஒரு சிறுகதை வெற்றி பெறுகிறது என்று சிறுகதை உத்திகளைச் சிறப்பாகப் பாடம் எடுத்தார்!
ஊடகம் என்றால் அதில் உண்மை இருக்க வேண்டும் பொய்யைத் துறக்க வேண்டும் என்று கூறி இயக்குநர் ராசி. அழகப்பன் தன் வகுப்பைத் தொடங்கினார். இராமாயணம் குறித்துக் கேள்வி எழுப்பிய அவர் சீதை ராமனுக்குச் சொல்ல வேண்டிய தர்மங்கள் நிறைய இருக்கிறது என்று கட்டுடைத்தார். சிலப்பதிகாரத்தில் கண்ணகி செய்கை சரியா என்ற கேள்விக்குப் பொள்ளாச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவி உஷா நந்தினி, ‘தன்னை வேண்டாம் என்று உதறி விட்டுப் போன ஒருவனை ஏன் மீண்டும் கண்ணகி ஏற்றுக் கொள்ள வேண்டும்?’ என்ற அழுத்தமான கேள்வியை வைத்தார். ஒருவரை தண்டிக்க ஏன் ஒட்டுமொத்த மதுரையை எரிக்க வேண்டும் என்றும் மாணவர்கள் குரல் ஒலித்தது. தொடர்ந்து பேசிய இயக்குநர் சுயமரியாதை, பெண் விடுதலை குறித்த பார்வையை அரங்கில் விதைத்தார். அரிசி என்ற தலைப்பில் மூன்று நிமிடங்கள் கொடுத்துக் கவிதைகள் எழுதச் சொன்னதும் அற்புதமான கவிதைகள் எழுதி மாணவர்கள் வரிசை கட்டி நின்று அவரிடம் புத்தகம் பெற்றுச் சென்றனர்.
உணவு இடைவேளைக்குப் பின்னான மூன்றாவது அமர்வில், மனிதர்களைப் புரிந்து கொள்ள, சூழலைப் புரிந்து கொள்ள, சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வாசிப்பு முக்கியப் பங்காற்றும் என்றும் மாக்சிம் கார்க்கியின் வாழ்வை உதாரணம் காட்டியும், புத்தகம் வாசிப்பது எப்படி என்ற தலைப்பில் முனைவர் வா. நேரு தம் உரையைத் தொடங்கினார். வாசிப்பு எப்படி என்றால்,ஒரு முழுப் புத்தகத்தில் என்ன இருக்கிறது என்பதைப் சொல்கிற சில வரிகளை நாம் கண்டறிய வேண்டும் என்றார். உங்களுக்கு ஆர்வம் தராத எந்தப் புத்தகத்தையும் முழுவதுமாகப் படிக்க வேண்டும் என்றில்லை என்று தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்வியல் சிந்தனைகள் நூலில் எழுதியிருப்பார். ஆகவே எடுத்தால் படித்து முடிக்க வேண்டும் என்றில்லை. அதேபோல் படித்தால் அதை யாரிடமாவது சொல்ல வேண்டும் என்பதும் முக்கியமானது. எந்த நூல்களை வாசிக்க வேண்டும் என்பதில் தெளிவு வேண்டும், கடையனுக்கும் கடைத்தேற்றம் எனும் நூல் காந்தியை மாற்றியது. புத்தரைப் பற்றிய புத்தகம் அம்பேத்கரை உருவாக்கியது. ஆகவே தேர்ந்தெடுக்கும் புத்தகம் முக்கியமானது என்று வாசிப்பின் கூறுகளைச் செவ்வனே எடுத்துக்காட்டி உரையாற்றினார்.
இறுதியில் எழுத்தாளர் அ. முத்துகிருஷ்ணன் தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு நிறைவுரையாற்றினார். எழுத விழையும் போது அது தொடர்பான தீவிரமான வெறித்தனமான வாசிப்பு இருக்க வேண்டும் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்தார். மாணவ மாணவிகளைக் கேள்வி கேட்கச்செய்து அதற்குப் பதில் அளித்தார். ஒரு எழுத்தாளன் எழுதும்போது அந்த எழுத்திற்கு பொறுப்பு ஏற்கும் துணிச்சல் வேண்டும் என்றார். பங்கேற்றவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கினார். மூன்றாம் நாள் நிகழ்வுகளைக் கவிஞர்,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் துணைத் தலைவர் ம. கவிதா தொகுத்தளித்து இறுதியில் நன்றியுரையும் ஆற்றினார்.
இந்நிகழ்வில்,திராவிடர் கழகத் தலைமைச்செயற்குழு உறுப்பினர் மதுரை வே. செல்வம், மதுரை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் அ. முருகானந்தம், செயலாளர் இரா. லீ. சுரேஷ் மற்றும் பல தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மாணவர்கள் தங்கள் அனுபவங்களை எழுதிக் கொடுத்தனர். பெரியாரியத் தோழர் மதுரை சரவணன் ஒளிப்பதிவு செய்தார். இறுதியாகக் குழுப்படம் எடுக்கப்பட்டது. தங்கள் கனவுகளுக்குக் கால் முளைத்த மகிழ்வுடன் மாணவர்கள் புறப்பட்டுச் சென்றனர்!
நேர ஒழுங்கு, கட்டுப்பாடு, அரங்கத்தோடு ஒருமித்த நிலை, மாநிலம் முழுவதும் வெவ்வேறு கல்லூரிகளிலிருந்து வந்தாலும் தங்களுக்குள் அவர்கள் காட்டிய இணக்கமான சூழ்நிலை, குழப்பங்களுக்கான தெளிவான பதில்கள், பரந்த வாசிப்பு, கேள்வி கேட்பதிலும் விடை சொல்வதிலும் முந்திக் கொள்ளும் நிலை, ஒருங்கிணைப்பாளர்களோடு ஒன்றிணைந்த தன்மை என்று மாணவர்களின் மூன்று நாள் செயல்பாடுகள் இளையோர் மீதான நம் நம்பிக்கையை வலுப்படுத்தியது.
இந்த நிகழ்விற்கு திருவாளர்கள் துறையூர் மாதவன், பிஎஸ்என்ஏ கல்லூரி ரகுராம்,இதயம் முத்தண்ணாச்சி,எஸ்விஎம்எச்எஸ்எஸ் பள்ளி தங்க மூர்த்தி,கருவூர் மருத்துவர் ரமேஷ்,,வாருங்கள் படைப்போம் குழுவினைச்சார்ந்த எல். குமரன்,மீனா கிருஷணமூர்த்தி, அழகன் கருப்பண்ணன்,அபி சங்கரி,சென்னை இலக்கியச் சங்கம் அமைப்பு,பகுத்தறிவாளர் கழகம் மற்றும் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தைச் சார்ந்த அய்யா வேல். சோ.நெடு மாறன், மதுரை ராமச்சந்திரன், ஞான.வள்ளுவன், இசையின்பன், குடியாத்தம் தேன்மொழி, குடந்தை பேரா. சேதுராமன், திருப்பத்தூர் வி.ஜி.இளங்கோ, திருப்பத்தூர் எம்.கே.எஸ். குடும்பம் (வெண்ணிலா), மதுரை புலவர்
நா.நா.ஆறுமுகம், ஆசிரியர் தி.லதா முருகானந்தம், சொர்ணம் நேரு, ரா.பழனிவேல்ராசன், கவிஞர் சிறீராம், வழக்குரைஞர் ஆசைத்தம்பி, செல்லக்கிருட்டிணன், ஒசூர் அ. செ. செல்வம், பேரா. கரந்தை ந.எழிலரசன் உள்ளிட்டோர் இந்த நிகழ்வு நடைபெற பலவகையிலும் உறுதுணையாக இருந்தனர்.
தொடர்ந்து பல ஊர்களிலும் எழுத்தாளர் பயிற்சிப் பட்டறையின் ஒருங்கிணைக்கப்படவிருப்பதாகப் பொறுப்பார்கள் தெரிவித்தனர்.
நிகழ்வுகள் தொகுப்பு:
திருப்பத்தூர் கவிஞர் ம. கவிதா, துணைத்தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்
எழுத்தாளர் வினிதா மோகன், ஒருங்கிணைப்பாளர்,
வாருங்கள் படைப்போம் அமைப்பு
