புதுடில்லி, டிச.18- ஓபிசி கிரீமிலேயேர் உச்சவரம்பை ரூ. 8 லட்சத்தில் இருந்து உயர்த்த திமுக எம்.பி வில்சன் மாநிலங்களவையில் வலியுறுத்தி உள்ளார். சமூக, பொருளாதார மற்றும் கல்வி நிலையில் மேம்பட்டு இருக்கும், ஓ.பி.சி. வகுப்பினர், ‘கிரீமிலேயர்’ என்று வகைப்படுத்தப்படுகின்றனர். அவர்கள், கல்வி, அரசு வேலைவாய்ப்புகளில் சில இடஒதுக்கீடுகளை பெற முடியாது.
இவர்களுக்கான வருமான உச்ச வரம்பை, ரூ. 8 லட்சத்தில் இருந்து உயர்த்த வில்சன் மாநிலங்களவையில் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “2017க்கு பிறகு பிற்படுத்தப்பட்டோருக்கான கிரீமிலேயேர் உச்ச வரம்பை ஒன்றிய அரசு உயர்த்தவே இல்லை. ரூ.8 லட்சமாக கிரீமிலேயேர் உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்ட போது தங்கம் கிராம் ரூ.3,000 ஆக இருந்தது.
இன்று தங்கம் ஒரு கிராம் ரூ.12,000; ஆனால், ஓபிசி கிரீமிலேயேர் உச்சவரம்பு அதே ரூ.8 லட்சமாக உள்ளது. 3 முறை கிரீமிலேயர் உச்சவரம்பை திருத்தி அமைக்காமல் ஒன்றிய பாஜக அரசு தவறவிட்டுள்ளது. ஓபிசி ஆணையம் பரிந்துரைத்தும் இன்றுவரை ஒன்றிய அரசு கிரீமிலேயர் உச்சவரம்பை உயர்த்தவில்லை. பாஜக அரசு கிரீமிலேயர் உச்சவரம்பை உயர்த்தாததால் நாடு முழுக்க ஓபிசி மக்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். மத்திய பல்கலை.களில் உள்ள 2537 பேராசிரியர் பணியிடங்களில் வெறும் 423 பேர் மட்டுமே ஓபிசி பிரிவினர். 16.67 சதவீதம் ஓபிசி பிரிவினர் மட்டுமே மத்திய பல்கலை.களில் பேராசிரியர்களாக உள்ளனர்.
அரசியலமைப்புச் சட்டம் உறுதி அளித்த 27 சதவீத ஓபிசி இட ஒதுக்கீடு என்ன ஆயிற்று?. ஆர்டிஅய்-யில் பெறப் பட்ட தகவலின்படி நாட்டில் உள்ள 21 அய்அய்டி, 13 அய்அய்எம்களில் வெறும் 11.2 சதவீதம் மட்டுமே ஓபிசி பிரிவினர். ஆர்டிஅய் தகவலின்படி 13 அய்அய்டிகளில் வெறும் 9.6 சதவீதம் ஆசிரியர்கள் மட்டுமே ஓபிசி பிரிவினர். குறைந்தது 2 அய்அய்டி, 3 அய்அய்எம்களில் 90 சதவீதம் ஆசிரியர்கள் உயர் வகுப்பினர். 8 அய்அய்டி, 7 அய்அய்எம்களில் 80 சதவீதம் ஆசிரியர்கள் உயர் வகுப்பைச் சேர்ந்தவர்கள். ஒன்றிய அரசின் ‘க்ரூப் ஏ’ பணிகளில் வெறும் 18 சதவீதம் மட்டுமே ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள்”இவ்வாறு புள்ளி விவரங்களை பட்டியலிட்டு பேசினார்.
