சென்னை, டிச.17- டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 கலந்தாய்வு நடைபெற்று வரும் நிலையில், திருத்தப்பட்ட காலியிடங்களின் பட்டியலைத் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சுப் பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வை ஜூலை 12ஆம் தேதி நடத்தியது.
இந்தத் தேர்வு மூலம் மொத்தம் 4662 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த குரூப் 4 தேர்வு முடிவுகள் அக்டோபர் 22 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதற்கான கலந்தாய்வு தற்போது நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில், சில பதவிகளுக்கு திருத்தப்பட்ட காலியிடங்களின் பட்டியலை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி:
தமிழ்நாடு தொழிலாளர் ஆய்வு நிறுவனத்தில் இளநிலை உதவியாளருடன் கூடிய தட்டச்சர் பணியிடங்கள் 2 ஆக மாற்றப்பட்டுள்ளது. நகர்ப்புற நிலவரித் துறையில் ஸ்டெனோ பணியிடங்கள் 4 எனவும், செங்கல்பட்டு முதன்மை நீதிமன்றத்தில் ஸ்டெனோ பணியிடங்கள் 4 எனவும், திருவள்ளூர் முதன்மை நீதிமன்றத்தில் ஸ்டெனோ பணியிடங்கள் 12 எனவும், நாமக்கல் முதன்மை நீதிமன்றத்தில் ஸ்டெனோ பணியிடங்கள் 2 எனவும் திருத்தப்பட்டுள்ளது.
மேலும் விவசாயத் துறையில் ஸ்டெனோ பணியிடங்கள் 17 எனவும், நகராட்சி நிர்வாகத் துறையில் டைப்பிஸ்ட் பணியிடங்கள் 5 எனவும் திருத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் டைப்பிஸ்ட் மற்றும் ஸ்டெனோ பணியிடங்கள் பூஜ்யமாக்கப்பட்டுள்ளன. மேலும், செங்கல்பட்டு முதன்மை நீதிமன்றத்தில் டைப்பிஸ்ட் பணியிடங்கள் 12 ஆக சேர்க்கப்பட்டுள்ளது.
இதுதவிர, மேற்கூறிய பதவிகள் மற்றும் வனத் துறை பதவிகளுக்கான இடஒதுக்கீடு வாரியான காலியிட பட்டியலையும் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
