பெரியாருக்கும் முந்தைய பெரியாராம் பாரதியார்! சொல்கிறார் பார்ப்பனப் பத்திரிகையாளர்!

7 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

இப்படி எல்லாம் யார் தான் பேச முடியும் – பார்ப்பனர் குல சிகாமணி கி.வைத்தியநாதன்களைத் தவிர? (ஆசிரியர் ‘தினமணி’) .

மாலன் (நாராயணன்) அய்யர்வாள் எழுதிய ஒரு நூல் வெளியீட்டு விழாவில் தான் இப்படிப் பேசி இருக்கிறார் (தினமணி, 13.12.2025, பக். 2).

அப்பொழுதுகூட பெரியார் என்று பேச அவர் நாக்கு சுளுக்கி வி(ழு)டுகிறது – ஈ.வெ.ரா. பெரியாராம்!

காஞ்சிமட சங்கராச்சாரியார்களை சந்திரசேகரன் என்றும, சுப்பிரமணியன் என்றும் சொல்ல எவ்வளவு நேரம் பிடிக்கும்? பாரதியாரை சுப்பிரமணியன் என்று எழுத, பேச இயலாதா?

தந்தை பெரியார் தம் கொள்கை எதிரியானவரை ராஜ கோபாலன் என்றா எழுதுகிறோம் – பேசுகின்றோம்? ராஜாஜி என்று தானே குறிப்பிடுகின்றோம்.

அதுதான் நமக்கும் பார்ப்பனர்களுக்கும் உள்ள பண்பாட்டு இடைவெளி!

அது இருக்கட்டும்; தந்தை பெரியாருக்கும், அண்ணல் அம்பேத்கருக்கும் முந்தைய பெரியார் பாரதியாராம்!

38ஆம் வயதில் மரணமடைந்தவர் பாரதி; அதனால் வயதை வைத்து பெரியார் என்று பாரதியாரைக் குறிப்பிடவில்லை திருவாளர் வைத்தியநாத அய்யர்வாள்!

பெரியார் என்றால் இந்த நாட்டில் ஒருவரை மட்டும் தானே குறிக்கிறது! அதனை மட்டந்தட்டும் மட்டரகமான புத்திதான் இதற்குள் அடக்கும்!

ஆசிரியர் என்று சொன்னால் ‘விடுதலை’ ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களைத்தான் குறிக்கும் என்பது கைப்பிள்ளைக்கும் தெரிந்த செய்தி!

பதிலடிப் பக்கம், மின்சாரம்

துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியைத்தான் ஆசிரியர் என்று இனிமேல் குறிப்பிட வேண்டும் என்றவர் இதே வைத்தியநாதய்யர் – எதிலும் பார்ப்பனப் பார்வை.

என்ன காரணம் சொல்லுகிறார்? சமூக சீர்திருத்தக் கருத்துகளை தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கருக்கு  முன்பாகவே பாரதியார் எழுதினாராம்! அதற்காகத்தான் பெரியாருக்கும் முந்தைய பெரியார் பாரதியார் என்று பேசினாராம்.

சமூக சீர்திருத்தக் கருத்துகளை ஒவ்வொரு காலகட்டத்திலும் சிலர் பேசி இருக்கிறார்கள். அவர்களைக் குறிப்பிடும் பொழுதெல்லாம் பெரியார் என்று அடைமொழி கொடுத்து எழுதியிருக்கிறதா இந்தக் கூட்டம்?

பெரியார் இராமலிங்க அடிகள் என்றோ, பெரியார் நாராயணகுரு என்றோ, பெரியார் அம்பேத்கர் என்றோ குறிப்பிட்டதுண்டா?

ஈ.வெ.ரா. பெரியார் எனறோ, பெரியாருக்கு முந்தையப் பெரியார் பாரதியார் என்றோ, பார்ப்பனர்கள் சொல்லிக் கொண்டோ, எழுதிக் கொண்டோ இருக்கும் பொழுதுதான், தந்தை பெரியார் மறைந்து 52 ஆண்டுகள் ஆன நிலையிலும், பிறப்பின் அடிப்படையில் பேதம் பேசும் பார்ப்பனர்களை அன்றாடம் அச்சுறுத்திக் கொண்டே இருக்கிறார் – வயிற்றைக் கலக்கிக் கொண்டே இருக்கிறார் என்பது வெளிப்படை!

‘மயக்க’ நிலையில் அவ்வப்பொழுது பார்ப்பனர்களைக் கேலி செய்தும், சில சீர்திருத்தக் கருத்துகளையும் பாரதியார் பாடியிருக்கிறார் என்பது உண்மைதான்!

பதிலடிப் பக்கம், மின்சாரம்

அதைவிட ஆரியப் பார்ப்பனர்களையும், பிறவியால் பேசும் வேதங்களையும், சாஸ்திரங்களையும், புராணங்களையும் பாடிக் குவித்ததுதான் அனந்தம் அனந்தம்!

அதற்கான எடுத்துக்காட்டுகளை எழுத ஆரம்பித்தால் ஏடுகள் தாங்காது.

“ஆதி சிவன் பெற்று விட்டான் – என்னை

ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்

வேதியன் கண்டு மகிழ்ந்தே – நிறை

மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான்” என்று எழுதுகிறார் பாரதியார்.

தமிழை ஆதிசிவன் பெற்றானாம்; அகத்தியன் என்ற புராணக் கற்பனை பாத்திரம் தான் தமிழுக்கு இலக்கணம் செய்தானாம் – எத்தகைய பித்தலாட்டம்! (அகத்தியன் குடத்தில் பிறந்தவன் என்பது புராணம்).

இதில் பார்ப்பனப் பாரதி என்ற அடையாளம் தெரியவில்லையா?

வேதமறிந்தவன் பார்ப்பான் – பல

வித்தை தெரிந்தவன் பார்ப்பான்

நீதிநிலை தவறாமல் – தண்ட

நியமங்கள் செய்பவன் நாய்க்கன்

பண்டங்கள் விற்பவன் செட்டி – பிறர்

பட்டினி தீர்ப்பவன் செட்டி

தொண்டர் என்று ஓர்வகுப்பில்லை – தொழில்

சோம்பரைப் போல் இழிவில்லை

நாலுவகுப்பும் இங்கு ஒன்றே – இந்த

நான்கினில் ஒன்று குறைந்தால்

வேலை தவறிச் சிதைந்தே – செத்து

வீழ்ந்திடும் மானிட சாதி!

– இதைப் பாடியவனும் பாரதிதானே.

படிப்பு – பார்ப்பானுக்கு, உடல் உழைப்பு மற்றவனுக்கு என்ற குலத் தொழில்தானே இதில் குடிகொண்டு இருக்கிறது. இப்போது ஆர்.எஸ்.எஸ். வகையறாக்கள் வெறிக் கூச்சல் போடும் ஹிந்துத்துவாவுக்கு முன்னோடி தான் இந்த பாரதி!

இந்தியா – இந்து – ஹிந்து ஒரே சொல்லின் திரிபுகள். இந்தியாவில் பிறந்தவன் – இந்திய ஜாதி அல்லது ஹிந்து ஜாதி என்பவரும் பாரதியே!

***

“சதுர் வேதங்கள் மெய்யான சாஸ்திரங்கள்

எனுமிவற்றால் இவ்வுண்மை விளங்க

கூறும் துப்பான மதத்தினையே ஹிந்து

மதமெனப் புவியோர் சொல்லுவாரே!

நான்கு வேதங்களும், மனுசாஸ்திரங்களும் பிறப்பில் பேதம் பேசும் வருண – ஜாதிப் புத்திதானே!

பெண்களைப் பற்றி என்ன பாடுகிறார் பாரதி.

“கண்கள் இரண்டிருந்தும்

காணும் திறமையற்ற

பெண்களின் கூட்டமடி கிளியே

என்றும்,

‘நெட்டை மரங் களென நின்று

புலம்பும் பெட்டைப் புலம்பல்

பிறர்க்குத் துணையாமோ” என்றும் பாடுகிறாரே பாரதி – அது என்ன பெட்டைப் புலம்பல்?

தந்தை பெரியாரின் பெண்ணுரிமைப் புரட்சி எங்கே – பாரதியின் பெட்டைப் புலம்பல் எங்கே? தந்தை பெரியாரின் பெண் ஏன் அடிமையானாள்? என்ற நூல் உலகின் பல மொழிகளில் பரவி சிந்தனைக் கிளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதே!

யாரை யாருடன் ஒப்பிடுவது என்ற விவஸ்தை வேண்டாமா?

இவர்தான் தந்தை பெரியாருக்கும், அண்ணல் அம்பேத்கருக்கும் முன்னதாகவே சீர்திருத்தத்திற்காகப் பாடுபட்ட பெரியாராம்.

“மனிதன் தின்னும் அநியாயங்களில் மாம்ஸ போஜனமே மிகவும் இழிவான அநியாயம்” என்று கூறுபவனும் பாரதியே!

பாரதி போற்றும் வேதங்களில் கூறப்படும் யாகங்களில் குதிரைகளையும், பசுக்களையும் போட்டுப் பொசுக்கி வயிறு முட்ட உண்டது பற்றி ஒரு வரி எங்காவது குறிப்பிட்டதுண்டா?

“மாகாளி பராசக்தி உருசிய நாட்டினில்

கடைக்கண் வைத்தாள்! அங்கே

ஆகா என்றெழுந்தது பார் யுகப்புரட்சி!” என்று எழுதுகிறார். ருசியப் புரட்சியின் வரலாற்றை அறிந்தவர்கள், புரட்சியாளர்களின் தியாக சீலங்கனை உணர்ந்தவர்கள் பாரதியின் இந்த சின்னப் புத்தியைக் கண்டு வாயால் சிரிக்க மாட்டார்கள். (அது லெனின் நடத்திய 1917, சோசலிசப் புரட்சி பற்றியதல்ல. 1905ஆம் ஆண்டு நடந்ததைப் பற்றிதான் பாரதி எழுதினார் என்பது கவனிக்கத்தக்கது.)

பாரதியின் பாடல்களைவிட, உரைநடைகளில் வெளிப்படுத்திய கருத்துகள் பச்சைப் பார்ப்பனத்தனமே!

அதைவிட மிகப் பெரிய பார்ப்பனத் தனம் என்ன தெரியுமா?

“பகவன் என்ற பிராமணனுக்கும், ஆதி என்ற பறைச்சிக்கும் அவ்வை, திருவள்ளுவர், கபிலர், புராணக்  குழந்தைகள் பிறந்து உபய குலத்துக்கும், நீங்காத கீர்த்தி ஏற்படுத்தியதை இக்காலத்திலும் பறையர் மறந்து போகவில்லை” என்கிறார் பாரதியார். (‘பாரதி மரபும் – திரிபும்’ என்ற கட்டுரை (தொகுதி 4)) இதற்குப் பிறகும் வைத்தியநாத அய்யர்வாள் பாரதியாரை பெரியார், அம்பேத்கருக்கு முந்யைத பெரியார் என்று சொல்லுவதற்குக் கூச்சப்பட வேண்டாமா? என்ன செய்வது – பூணூல் ரத்தப் பாசம் என்பது சாதாரணமானதா?

தினமணி ஆசிரியர் குறிப்பிடும் ஒரு சில சீர்திருத்தங்கள் கூட வெறும் ஏட்டுச் சுரைக்காயே!

ஆனால் சமூக ஏற்றத்தாழ்வுகளை ஒழித்துக் கட்ட களத்தில் இறங்கிப் போராடியவர்கள் தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும்!

அண்டை மாநிலமான கேரளாவில் வைக்கத்தில் தீண்டாமை ஒழிப்புக்காகக் களம் இறங்கிப் போராடி சிறைவாசம் கண்டவர் தந்தை பெரியார்.

அதுவும் திருவாங்கூர் சிறைச்சாலையில் தந்தை பெரியார் அனுபவித்த கொடுமை சாதாரணமானதா?

கே.பி.கேசவ மேனன் தனது சுய வாழ்க்கை வரலாற்று நூலில் குறிப்பிட்டுள்ளதைப் படிக்கும்போது மனித இதயங் கொண்டோர் இரத்தக் கண்ணீர் வடிக்காமல் இருக்க முடியாது.

“கால்களில் விலங்குச் சங்கிலி, தலையிலே கைதிகள் அணியும் ஒரு குல்லாய், முழங்காலுக்குக் கீழே தொங்குகின்ற ஒரு வேட்டி, கழுத்திலே கைதி எண் குறிக்கப்பட்ட ஒரு மரப்பட்டை, இவற்றோடு ஈ.வெ.ராமசாமி கொலைக்காரர்களோடும் கொள்ளைக்காரர்களோடும் வேலை செய்து கொண்டிருக்கின்றார். தண்டனை அடைந்த ஒரு சாதாரணக் கைதி எவ்வளவு ஒரு நாளைக்கு வேலை செய்வானோ, அதுபோல இரு மடங்கு வேலை செய்கிறார்.

ஒரு ‘ஜாதி இந்து’ என்று சொல்லக்கூடிய நிலையிலே உள்ள ஒருவர் கேரளத்தில் உள்ள தீண்டத்தகாத மக்களுக்கு உரிமை வாங்கிக் கொடுப்பதற்காக செய்த தியாகம் நமக்குப் புதுவாழ்வு தந்திருக்கிறது. இந்தப் பெரிய உன்னத இலட்சியத்திற்காக அவர் அனைத்தையும் இழக்கத் தயாராக இருக்கிறார்.

ஈ.வெ.ரா. அவர்களுக்கு இருக்கக் கூடிய நாட்டுப் பற்று, உற்சாகம், அனுபவம், பெருந்தன்மை, பெரும் பக்குவம் இவைகளெல்லாம் உடைய இன்னொருவரை இந்த நாட்டிலே இந்த அளவுக்கு காண முடியுமா? இந்த மாநிலத்தில் மக்கள் அனுபவிக்கிற கொடுமையை நீக்க வேண்டும் என்பதற்காக தான் எவ்வளவுக் கஷ்ட நஷ்டங்களை வேண்டுமானாலும் ஏற்கலாம் என்று சொல்லி, ஒரு தலைவர் வந்தாரே – அதைப் பார்த்து இந்த மாநில மக்களாக இருக்கிற யாருக்குமே வெட்கம் ஏற்படவில்லையா? கேரளத்தின் முதிர்ந்த அனுபவமிக்க தலைவர்கள் தங்கள் சாய்வு நாற்காலியைத் தூக்கி எறிந்து விட்டு தங்கள் பங்கைச் செலுத்த இப்போதாவது வரவேண்டாமா?

(கே.பி.கேசவ மேனன் ‘மலையாளத்தில் தன் வரலாறு’ , பக். 108).

இந்தத் தலைவர் எங்கே? பிரிட்டீஷார் எங்கே தன்னைக் கைது செய்து விடுவார்களோ என்று அஞ்சி நடுங்கி, புதுச்சேரியில் தஞ்சமடைந்து, அதன் பின்னர் சென்னை பிரிட்டீஷ் கவர்னருக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து ‘சரண்டர்’ ஆன பாரதி எங்கே?

பார்ப்பனப் பாசம் கண்ணை மறைக்கிறதா? இன்றைக்குப் பெரியார் உலக மயமாகிக் கொண்டு இருக்கிறார். கதிரவனைப் பார்த்து கரையான்கள் சீண்ட வேண்டாம்!

எப்படிப்பட்டவர் பெரியார்?

“சிறீமான் நாயக்கர் செல்வமெனும் களியாட்டில் அயர்ந்திருக்க உண்டாட்டில் திளைத்தவர் – ஈரோட்டு வேந்தரென விளங்கியவர்” என்று படம் பிடித்தார் திரு.வி.க. (24.5.1924 நவசக்தியில் திரு.வி.க. எழுதியது)

இத்தகைய செல்வச் சீமான் கால்களில் விலங்கு – கொலைகாரர்களோடும் கொள்ளைக்காரர்களோடும் அவர்களை விட இரண்டு மடங்கு வேலை செய்தவர் பெரியார். அவரோடு யாரை ஒப்பிடுவது? மகத் குளத்தில் தாழ்த்தப்பட்டவர்களை அழைத்துக்கொண்டு இறங்கிப் போராடிய அண்ணல் அம்பேத்கர் எங்கே? இந்த அம்பி எங்கே?

அந்தோ பாவம்! பூணூல் பாசத்தால் புத்தியும் பாழ்படுகிறதே!

தந்தை பெரியாருக்கு ‘பெரியார்’ என்று பெண்கள் மாநாடு கூட்டி அளித்த பட்டம்! பாரதிக்கு அந்தப் பட்டத்தைக் கொடுக்க முயலுகிறார் வைத்தியநாதய்யர் என்ற ஒரு தனி மனிதர் – இன உணர்வாளர்!

சிரிப்புதான் வருகுதய்யா!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *