17.12.1983 அன்று மதுரையில் திராவிடர் கழக மாநில மாநாடு நடைபெற்றது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இன்றைய தேவையை அன்றே கணித்து வடிக்கப்பட்டுள்ளன.
மதவெறித் தடுப்பு
‘‘ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட அமைப்புகள் ‘மதத்தைக் காப்போம்’ என்கிற பெயரில் மதவெறியைத் தூண்டி, கலவரங்களை உருவாக்க முயற்சிப்பதை அரசு இரும்புக்கரம் கொண்டு தடுத்து நிறுத்த வேண்டும்.
கல்வி நிறுவனங்களில் சீர்திருத்தம்
அரசியல் தவிர்த்தல்: கல்வி நிறுவனங்களில் ஜாதிப் பகையும், ஆடம்பர அரசியலும் புகுவதைத் தடுக்க வேண்டும். மாணவர் அமைப்புகளுக்குத் தேர்தல் நடத்துவதை அய்ந்து ஆண்டுகளுக்கு நிறுத்தி வைத்து, அதற்குப் பதிலாக நியமன முறை அல்லது பொது ஒப்புதல் முறையை அமல்படுத்த வேண்டும். ஒவ்வொரு கல்வியாண்டின் தொடக்கத்திலும் சமூக உறவுகள், சமத்துவ நெறிகள் மற்றும் சமூக நீதி குறித்து மாணவர்களிடையே தெளிவை ஏற்படுத்த முறையான கருத்தரங்குகளை நடத்த வேண்டும்.
மதம் மாறிய ஆதிதிராவிடர்கள்: மதம் மாறிய காரணத்திற்காகத் தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு இட ஒதுக்கீட்டை மறுப்பது மனித உரிமை மீறலாகும். அவர்களுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.’’ என்பன அவற்றில் சில தீர்மானங்கள் ஆகும்.
தீர்மானங்களை நிறைவேற்றிய அன்றைய திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி. வீரமணி,
‘‘மதுரை மாநகரில் மைதானத்தில் திரண்டி ருக்கும் கருஞ்சட்டைத் தொண்டர்களாகிய உங்களின் எழுச்சி, தமிழ்நாடு வரலாற்றில் புதியதொரு அத்தியாயத்தை எழுதிக்கொண்டிருக்கிறது. இந்த மாநாட்டின் நிறைவுரையாக அமையும் என் உரை, வெறும் பேச்சல்ல; இது தமிழ் மானத்தின் எழுச்சிப் பிரகடனம்!
தொண்டர்களுக்கு ஓர் அறைகூவல்
கழகத்தின் அழைப்பை ஏற்று, குடும்பம் குடும்பமாக இங்கே வெள்ளமெனத் திரண்டு வந்திருக்கும் உங்களைப் பார்க்கும்போது பெருமிதமாக இருக்கிறது. “சிறைச்சாலைக்குச் செல்லுங்கள்” என்று நான் ஒரு வார்த்தை சொன்னால், அதை மகிழ்ச்சியோடு ஏற்க நீங்கள் தயாராக இருக்கிறீர்கள் என்பதை உங்கள் முழக்கங்கள் பறைசாற்றுகின்றன.
தந்தை பெரியார் நம்மைச் சுகபோகிகளாக வளர்க்கவில்லை. இந்தச் சமுதாயத்திற்காகப் பணியாற்றுகிற ‘தன்னார்வத் தொண்டர்களாக’, இன்னும் சொல்லப்போனால் கொள்கை வழிநின்ற ‘கொத்தடிமைகளாக’ இருந்து உழைக்கவே அவர் கற்றுக்கொடுத்தார். அந்த உணர்வுதான் இன்று உங்களை இங்கே கூட்டியிருக்கிறது.
அய்யா வழியில் அஞ்சாத பயணம்
இங்கே பேசும்போது, எனக்கு வந்த மிரட்டல் கடிதங்களைப் பற்றிக் கவலையோடு பேராசிரியர் அன்பழகன் அவர்கள் குறிப்பிட்டார்கள். தந்தை பெரியார் மற்றும் அன்னை மணியம்மையார் ஆகியோருக்குப் பிறகு, இந்தக் கழகக் குடும்பத்தைச் சிதறாமல் காத்து வழிநடத்தும் பொறுப்பு நம்மிடம் உள்ளது.
எனக்கு மிரட்டல்கள் வரலாம், கொலை முயற்சிகள் கூட நடக்கலாம். அதற்காக நான் தளர்ந்துவிட மாட்டேன். குருமகா சந்நிதானம் அவர்கள் கூட இது குறித்து நலம் விசாரித்தார்கள். ஆனால், எனக்கு எதைக் குறித்தும் கவலையில்லை. உங்களைப் போன்ற இலட்சக்கணக்கான கொள்கை வீரர்களின் அன்பும், உற்சாகமுமே எனக்குப் பெரும் பலம். நான் உங்களின் ஊழியன், ஒரு சாதாரணத் தொண்டன் என்ற உரிமையிலேயே உங்களைச் சந்திக்கிறேன்.
காலின் வலி… தமிழினத்தின் தோள் வலிமை!
இந்த மாநாட்டிற்காக நீங்கள் எத்தனையோ சங்கடங்களைத் தாங்கி வந்திருக்கிறீர்கள். நம்முடைய சகோதரிகள் அவமானங்களைச் சகித்துக்கொண்டு கொள்கைக்காக இங்கே நின்றுகொண்டிருக்கிறார்கள். வழிநடைப் பயணமாக வந்து சேர்ந்திருக்கும் உங்கள் கால்களில் வலி இருக்கலாம். அந்த வலிக்குத் தைலங்களால் நாங்கள் ஒத்தடம் கொடுக்கப் போவதில்லை.
ஏனெனில், “உங்கள் கால் வலி, தமிழினத்திற்குத் தோள் வலிமையைத் தந்திருக்கிறது” என்பதுதான் மறுக்க முடியாத சரித்திர உண்மை. நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் தமிழினத்தின் மீட்சிக்காகப் பயன்படும். நம் மீது தாக்குதல் நடத்த நினைப்பவர்கள், உங்கள் காலடியில் மிதிபட்டு முள்ளாகப் போவார்கள்.
இந்த உற்சாகமும் எழுச்சியும் எதற்காக? பதவிக்காக அல்ல; புகழுக்காக அல்ல. தமிழினம் தனியே ஓர் ஆட்சியைக் காண வேண்டும், தமிழன் இழந்த மானத்தை மீட்டெடுக்க வேண்டும் என்பதற்காகவே! எதிரிகளின் மிரட்டல்களுக்கு அஞ்சாமல், பெரியார் ஊட்டிய கொள்கை நெருப்போடு நாம் தொடர்ந்து பயணிப்போம்.
தமிழின மீட்சியே நமது இறுதி இலக்கு!’’ என்று எழுச்சியுரையாற்றிய நாள் இன்று!
