நாடாளுமன்றத்தில் ‘வந்தே மாதரம்’ பாடலின் 150-ஆவது ஆண்டு நிறைவு குறித்த விவாதத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு ‘திருப்திப்படுத்தும் அரசியலை செய்தார்’ எனக் குற்றம் சாட்டியதற்கு காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ஜெய்ராம் ரமேஷ் தனது ‘எக்ஸ்’ (X) சமூக வலைதளப் பதிவின் மூலம் கடும் பதிலடி கொடுத்துள்ளார்.
பிரதமர் மோடியின் நேரு குறித்த கருத்துக்குப் பதிலளிக்கும் விதமாக, ஜெய்ராம் ரமேஷ், திரித்துப் பேசுவதில் மாஸ்டரான பிரதமர் மோடி இதற்குப் பதிலளிப்பாரா? எனப் பல கேள்விகளை எழுப்பினார்.
1940 – மார்ச் மாதம் லாகூரில் பாகிஸ்தான் தீர்மானத்தை முன்மொழிந்த நபருடன் எந்த இந்தியத் தலைவர் கூட்டணி அமைத்தார்? அது பாஜக கொண்டாடும் ஹிந்துத்துவ தலைவர் சியாம பிரசாத் முகர்ஜிதான்.
2005 ஜூன் மாதம் கராச்சியில் ஜின்னாவை எந்த இந்தியத் தலைவர் பாராட்டினார்? அது எல்.கே. அத்வானிதான்.
2009-ஆம் ஆண்டு தனது புத்தகத்தில் ஜின்னாவைப் புகழ்ந்த இந்தியத் தலைவர் யார்? அவர் பாஜகவின் ஜஸ்வந்த் சிங்.
அத்வானியின் கராச்சிப் பதிவு ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டது போல, 2005-ஆம் ஆண்டு பாகிஸ்தானின் கராச்சிக்குச் சென்ற முன்னாள் ஒன்றிய அமைச்சர் எல்.கே. அத்வானி, பாகிஸ்தான் நிறுவனர் முகமது அலி ஜின்னாவின் கல்லறையில் பார்வையாளர் புத்தகத்தில் எழுதிய வார்த்தைகளையும் தனது பதிவில் அவர் நினைவுகூர்ந்தார்.
அத்வானி எழுதிய வாசகங்கள்: “வரலாற்றில் அழியாத முத்திரையைப் பதித்தவர்கள் பலர் உள்ளனர். ஆனால், உண்மையில் வரலாற்றை உருவாக்கியவர்கள் மிகச் சிலரே. முகமது அலி ஜின்னா அத்தகைய அரிதானவர்களில் ஒருவர். பாகிஸ்தான் அரசியலமைப்புச் சபையில் அவர் ஆற்றிய உரை ஒரு சிறப்பானது. ஒவ்வொரு குடிமகனும் தங்கள் மதத்தைப் பின்பற்ற சுதந்திரம் உள்ள ஒரு மதச்சார்பற்ற தேசத்தை அவர் வலியுறுத்தினார்.’’
ஜெய்ராம் ரமேஷின் இந்த சரியான கருத்துகள், பிரதமர் மோடி எழுப்பிய நேரு மீதான ‘திருப்திப்படுத்தும் அரசியல்’ குற்றச்சாட்டிற்குப் பதிலடியாகக் கூறிய தகவல்கள் பா.ஜ.க.வின் மூத்த தலைவர்கள் குறித்த பழைய நிகழ்வுகளை முன்வைத்து விவாதத்தைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இன்னும் சொல்லப் போனால் இந்தியா – பாகிஸ்தான் பிரிவினை தவிர்க்க முடியாதது என்று கூறியவர் சாவர்க்கர்தான்.
இந்த உண்மைகளை எல்லாம் மறைத்து – பொய்யான தகவல்களைத் தெரிவிப்பதே தனது குருதியோட்டமாகக் கொண்ட பிஜேபி நேருமீதும் அபாண்ட குற்றச்சாட்டை சுமத்துகிறது.
இந்தியாவில் ‘முஸ்லிம் லீக்’ என்ற அமைப்பு உருவானதற்கே முக்கிய காரணம், காங்கிரசில் அப்பொழுதிலிருந்த பார்ப்பனர்களே.
பிரிிட்டிஷாரிடம் அணுக்கமாக இருந்து, அவர்களுக்கு அடி பணிந்து, அடி பணிந்து… கல்வி, உத்தியோகங்களை எல்லாம் வாரிக் கொண்டவர்கள் பார்ப்பனர்கள்தான்.
அப்பொழுது காங்கிரஸ் என்பது பார்ப்பன ஆதிக்கத்திலேயே இருந்தது. காங்கிரஸ் மாநாட்டுக்குத் தலைமை வகிப்பவர்கள் எல்லாம் பெரும்பாலும் வக்கில் பார்ப்பனர்களே! மாநாட்டில் முதல் தீர்மானமே பிரிட்டிஷ் அரசின் மீதான விசுவாசம் காட்டுவதாகவே இருக்கும்.
முதல் ஆண்டு மாநாட்டுக்குத் தலைமை வகிக்கும் வக்கில் பார்ப்பனர், அடுத்து உயர்நீதிமன்ற நீதிபதி ஆகிவிடுவார்.
எல்லாம் பார்ப்பனமயமாகும் நிலையைக் கண்டுதான், சிறுபான்மையின மக்கள் தங்களின் உரிமைக்காக ‘முஸ்லிம் லீக்’ என்ற அமைப்பை ஏற்படுத்த வேண்டிய அவசியம் அவர்களுக்கு ஏற்பட்டது. இதை எல்லாம் மறைத்து விட்டு, நேருமீது அபாண்ட பழி சுமத்துகிறது பிஜேபி (ஆர்.எஸ்.எஸ்.).
ஆர்.எஸ்.எஸ். இதழான ‘ஆர்கனைசர்’ (11.1.1970) ‘காந்திக்குமுன் நேரு சுட்டுக் கொல்லப்பட்டிருக்க வேண்டும்’ என்று எழுதியதும் உண்டு.
இந்த எண்ணத்தில் உள்ளவர்கள் வேறு எதைத்தான் பேச மாட்டார்கள்?
