இது வெறும் காகிதம் அல்ல, ஆயுதம்!
அதைப் பயன்படுத்தி அனைவரும் வளர வேண்டும்!
சென்னை, மே 2- “ஓபிசி வாய்ஸ்” மாத இதழ் வெளியீட்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்.
“ஓ.பி.சி வாய்ஸ்” மாத இதழ் வெளியீடு!
எம்பவர் (Empower) அறக்கட்டளை சார்பாக, சென்னை இராயப்பேட்டையில் உள்ள இந்திய அலுவலர்கள் சங்கக் கட்டடத்தில், 1.5.2023 அன்று மாலை 6.30 மணி அளவில், AIOB சார்பில், “ஓபிசி வாய்ஸ்” மாத இதழ் வெளியீட்டு விழா, அமைப்பின் தலைவர் கோ. கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் எஸ்.நடராஜன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன், சட்டமன்ற உறுப்பினர் எழிலன் நாகநாதன், மூத்த பத்திரிகையாளர் கோவி.லெனின், யூனியன் வங்கியின் சென்னை மண்டல பொது மேலாளர் ஆர்.விஸ்வேஸ்வரன், கூட்டமைப்பின் துணைத் தலைவர் வி.என்.புருசோத்தமன் (நெய்வேலி – என்எல்சி ஓபிசி சங்கம்) ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
சமூக நீதியை வென்றெடுக்க வேண்டும்!
முன்னதாக “ஓ.பி.சி. வாய்ஸ்” மாத இதழை திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வெளியிட, யூனியன் வங்கியின் சென்னை மண்டல பொது மேலாளர் விஸ்வேஸ்வரன் முதல் இதழை பெற்றுக் கொண்டார். இதழினை வெளியிட்டுப் பேசிய ஆசிரியர் அவர்கள், ‘இது Voice of voiceless’ என்று கவித்துவமாக இதழை உருவகப்படுத்தினார். மேலும் அவர், ‘தேவையான நேரத்தில் தேவையான ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது’ என்றும் பாராட்டி னார். தொடர்ந்து, இதழை நடத்துவதில் உள்ள சிக்கல்களைப் பற்றிக் குறிப்பிட்டார். இதைப் பற்றி தந்தை பெரியார், ‘ஒருவருக்கு யானையை பரிசாக கொடுத்தது போல, பத்திரிகை நடத்துவது அவ்வளவு சிரமம்’ என்று நகைச்சுவை ததும்ப சொன்னதை சுட்டிக்காட்டி, யானையைக் கட்டி தீனி போடுவதைப் போல ஒரு பத்திரிகை நடத்துவது என்பதை உடனடி யாகப் புரிய வைத்தார். ‘ஆனாலும் இங்கே, 1000 பிரதிகள் அச்சடிக்க முடிவு செய்து, நீங்கள் கொடுத்த ஆதரவினால் 2500 பிரதிகள் அச்சடிக்கப்பட்டுள்ளதைக் காணும் போது, இந்த இதழ் உங்கள் ஆதரவுடன் நிச்சயம் வெற்றி பெறும் என்பதை வெளியீட்டு விழாவிலேயே நீங்கள் காட்டியிருக்கிறீர்கள்’ என்று பார்வையாளர்களாக இருப்பவர்களையும் பாராட்டி னார்.
தொடர்ந்து அவர் பேசும்போது, ‘இது வெறும் காகிதம் அல்ல, ஆயுதம்! இதைப் பயன்படுத்தி அனைவரும் வளர வேண்டும்! என்றும், ‘அந்த ஆயுதத்தை பயன்படுத்தி இந்த அமைப்பு இந்தியா முழுமைக்கும் சமூக நீதியை வென்றெடுக்கவேண்டும்’ என்றும் வாழ்த்தி விடை பெற்றுக் கொண்டார்.
கலந்துகொண்டு சிறப்பித்தவர்கள்!
நிகழ்வில் தென்சென்னை கழக மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, மு.சண் முகப்பிரியன், கொடுங்கையூர் கோ.தங்கமணி, தங்க.தனலட்சுமி, வழக்குரைஞர்கள் ஆ.வீரமர்த்தினி, த.கனிமொழி, சோ.சுரேஷ், திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், ஆவடி மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல், கமலேஷ் மற்றும் யூனியன் வங்கி அதிகாரிகள், அலுவலர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித் தனர்.
கூட்டமைப்பின் துணைப் பொதுச் செயலாளர் எம்.பாக்யராஜ் நன்றி கூறினார்.