திருச்சி,மே 2 திருச்சி மாவட்டம், மணிகண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அப்பகுதி ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் மணிகண்டம் காவல்துறையினர் கலந்து கொண்டனர். காவல் உதவி ஆய்வாளர் ராஜகுமார் வரவேற்று பேசினார். கூட்டத்தில் உதவி ஆய்வாளர் ஜஸ்டின் திரவியராஜ் பேசுகையில், ஊரின் முக்கிய சாலைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். ஒவ்வொரு ஊராட்சி தலைவர்களும் தங்களது எல்லைக்குட்பட்ட கிராமங்களில் பகல் மற்றும் இரவில் களவு செய்யும் நபர்கள் பற்றிய விவரம் தெரிவிக்க வேண்டும். தங்களது கிராமங்களில் உள்ளவர்கள் வெளியூர்களுக்கு செல்லும் பட்சத்தில் அவர்களின் வீட்டு முகவரி பற்றிய விவரம் தெரிவிக்க வேண்டும். டவுசர் கொள்ளையர்கள் இரவு நேரத்தில் திருட்டில் ஈடுபட்டு வருவதால் தங்களது கிராம மக்களிடம் கூட்டம் போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஊராட்சி பகுதிகளில் 2 நபர்களை நியமித்து இரவு நேரத்தில் யாரேனும் சந்தேகப்படும்படியான நபர்கள் இருப்பது தெரிந்தால் அது பற்றிய தகவலையும் காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்றார். கூட்டத்தில் கள்ளிக்குடி, நாகமங்கலம், சேதுராப் பட்டி, முடிகண்டம் உள்பட மணிகண்டம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.