ஆளுநரின் மாளிகைகளுக்கு ‘ராஜ் பவன்’ என்று பெயர். பிரிட்டிஷ் பேரரசு இந்தியாவை அடிமைப்படுத்தி ஆண்ட போது, அவர்களின் பிரதிநிதிகளாக ஆளுநர்கள் (கவர்னர்கள்) மாநிலங்களை ஆண்டனர். இந்தக் ஆளுநர்களின் மாளிகைகளுக்கு ராஜ் பவன் என்று பெயர் வைத்திருந்தனர். சென்னை கிண்டியிலும் இப்படியொரு ராஜ் பவன் இருக்கிறது. 1300 ஏக்கர் பரப்பளவில் மாட மாளிகையில், படை பட்டாளங்களுடன் ஆங்கிலேய ஆளுநர்கள் அன்றைய சென்னை ராஜதானியை ஆண்டனர்.
நாடு விடுதலை பெற்று, மக்களாட்சி மலர்ந்த பிறகும், ஒன்றிய அரசு ஆளுநர் பதவியை அகற்றவில்லை. ராஜ் பவனை மக்களுக்குப் பயன்படும் வகையில் மாற்றவும் இல்லை. ஒன்றிய அரசின் முகவர்களாக நியமிக்கப்படும் ஆளுநர்கள், அதே மாட மாளிகையில் படை பட்டாளங்களுடன் கொலு வீற்றிருக்கின்றனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மாநில அரசுகளுக்கும் முதலமைச்சர்களுக்கும் குடைச்சல் கொடுப்பதையே வேலையாக கொண்டுள்ளனர்.
காலனிய மனப்பான்மையை அகற்ற வேண்டும் என மூச்சுக்கு முன்னூறு முறை சொல்லிக் கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ், பாஜக வழிவந்தவர் தான் தற்போதைய ஆளுநர் ஆர்.என்.ரவி. காலனிய சின்னமான ராஜ் பவன் வேண்டாம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்கள், அமைச்சர்கள் போன்றவர்களுக்கு அலுவலகங்கள், வீடுகள் ஒதுக்கப்படுவது போன்ற தனக்கும் ஒதுக்கினால் போதும் என்று சொல்லுவார் என்று கனவிலும் நினைக்க வேண்டாம்.
ராஜ் பவனை ஆர்.எஸ்.எஸ், பாஜக அலுவலகமாக மாற்றியதுடன், பிரிட்டிஷ் பேரரசின் ஆளுநர்களைப் போல் செயல்படலாம் என்ற கனவில் எதை எதையோ செய்து கொண்டிருக்கிறார். சங்கிகளின் சதி ஆலோசனைக் கூடமாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ராஜ் பவன்கள் நாடு முழுவதும் இப்படிச் செயல்பட்டால் மக்கள் எப்படி மதிப்பார்கள்?
காலனிய மனப்பான்மையை அகற்ற வேண்டும் என அரற்றிக் கொண்டே இருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவியின் குரு.. அதாங்க விஸ்வகுரு மோடிஜி, ராஜ் பவன் பெயரை ‘லோக் பவன்’ என திடீரென மாற்றி இருக்கிறார். காலனிய மனப்பான்மையில் மாற்றம் செய்கிறார்கலாம். கிண்டி ராஜ்பவனில் பூட்டுப் போட்டு பூட்டியிருக்கும் ஒன்றாவது கேட்டில், ராஜ்பவன் என்பதை அகற்றிவிட்டு, ‘லோக் பவன்’ என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. கேட் அப்படியேதான் பூட்டியிருக்கிறது. இரும்புத் தடுப்புகள் (பேரிகேட்), காவல்துறை பாதுகாப்பு எல்லாம் அப்படியேதான் இருக்கின்றன.
அறிவிப்புப் பலகையை மாற்றி விட்டால், காலனிய மனப்பான்மை மாறிவிடுமா?
ஆளுநர்களின் மூலம் பிரிட்டிஷ் பேரரசு ஆண்டது. மக்களை, மாநிலங்களை அடக்கி ஒடுக்கியது. செல்வ வளங்களை சுரண்டியது. அந்தக் கட்டமைப்பை அப்படியே வைத்துக்கொண்டு, ஆளுநர்களையும் ஆட்டம் போட அனுமதித்துவிட்டு, காலனிய மனப்பான்மையை மாற்றுகிறோம் என்பது யாரை ஏமாற்ற?
இன்னும் ஒருபடி மேலே போய், தமிழ்நாடு ஆளுநரின் இணையதளத்தில் ‘லோக் பவன்’ என்று ஆங்கிலத்திலும் ‘மக்கள் மாளிகை’ என தமிழில் இருக்கிறது. இங்குள்ள பத்திரிகைகளும் கிண்டி ராஜ் பவன், மக்கள் மாளிகையாக மாறிவிட்டது என்று எழுதி புளகாங்கிதம் அடைகின்றன. இப்படி எழுதினால் கிண்டி ராஜ் பவனில் அல்ல.. அல்ல.. லோக் பவனில் கோலோச்சும் ஆர்.என்.ரவியும் அவருடைய எஜமானர்களும் மகிழ்வார்கள். ஆனால், தமிழர்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள்.
