விண்வெளிச் சுற்றுலா நீண்ட காலமாக கற்பனையில் மட்டுமே இருந்த நிலையில், இப்போது ஒரு மைல்கல்லை எட்டியுள்ளது. உலகின் முதல் விண்வெளி விடுதி (ஓட்டல்) 2027ஆம் ஆண்டுக்குள் சுற்றுப்பாதையில் செயல்படத் தயாராகிறது.
உலகின் முதல் விண்வெளி விடுதி
இதுவரை ஹாலிவுட் சயின்ஸ் பிக்ஷன் திரைப்படங்களில் மட்டுமே கண்ட கனவு, இப்போது நிஜமாகப் போகிறது. விண்வெளிச் சுற்றுலா (Space Tourism) உலகில் மிகப்பெரிய மைல்கல்லை எட்டியுள்ளது. 2027-ஆம் ஆண்டிற்குள் சுற்றுப்பாதையில், உலகின் முதல் வணிக விண்வெளி விடுதியான ‘வோயேஜர் ஸ்டேஷன்’ திறக்கப்பட உள்ளது. கலிஃபோர்னியாவைத் தளமாகக் கொண்ட ‘எபோவ்: ஸ்பேஸ் டெவலப்மெண்ட் கார்ப்பரேசன்’ என்ற நிறுவனம்தான் இந்த வரலாற்றுச் சாதனையை நிகழ்த்த இருக்கிறது. இந்த மாபெரும் விண்வெளி விடுதியில், பூமியில் இருக்கும் அனைத்து வசதிகளும் இடம்பெறும்.
உணவருந்தும் அதிநவீன உணவகங்கள் அனைத்துப் பானங்களும் நிறைந்த பார்கள், உடற்பயிற்சிக் கூடம் (Gym), பிரத்யேக கச்சேரி அரங்கம் மற்றும் திரைப்பட அரங்கம் என அசத்தப்போகிறது. விண்வெளியில் புவியீர்ப்பு விசை இல்லாத நிலையில், மாபெரும் விடுதிக்குள் விருந்தினர்கள் சவுகரியமாகத் தங்குவது எப்படி? இதற்காக விஞ்ஞானிகள் ஒரு புத்திசாலித்தனமான கருத்தைப் பயன்படுத்தியுள்ளனர்: இந்த மாபெரும் விடுதி ஒரு நிமிடத்திற்கு 1.5 முறை வேகத்தில் சுழலும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் சுழற்சியால் ஏற்படும் மய்ய விலக்கு விசை (Centrifugal Force), நிலவின் ஈர்ப்பு விசைக்கு (பூமியின் ஈர்ப்பில் ஆறில் ஒரு பங்கு) நிகரான ஒரு செயற்கை ஈர்ப்பு விசை (Artificial Gravity) உருவாகும்.
படிப்படியாக, செவ்வாய்கோள் அல்லது பூமியின் ஈர்ப்பு விசைக்கு நிகரான ஈர்ப்பு விசையை உருவாக்கவும் விஞ்ஞானிகள் முயற்சி செய்வார்கள். இந்தச் சுழலும் சக்கரக் கருத்தைப் பற்றி 1900-களிலேயே ரஷ்ய ஆசிரியர் கான்ஸ்டான்டின் சியோல்கோவ்ஸ்கி கற்பனை செய்தார். பின்னர் ஜெர்மானிய ராக்கெட் விஞ்ஞானி வெர்ன்ஹெர் வான் பிரவுன் இந்தக் கருத்தை பிரபலப்படுத்தினார்.
400 பேர் தங்கலாம்
வோயேஜர் ஸ்டேஷன் சுமார் 125,000 சதுர அடி பரப்பளவில், 24 சிறப்புச் சேர்க்கைகளுடன் கட்டப்படுகிறது. இங்கு ஊழியர்கள் மற்றும் விருந்தினர்கள் உட்பட 400 பேர் வரை தங்கலாம். இந்த மாபெரும் விடுதியில் தனிப்பட்ட சொகுசு அறைகள் மற்றும் பூமியின் பிரமிக்க வைக்கும் காட்சிகளைக் கொண்ட மாபெரிய ஓய்வறைகள் இருக்கும். பார்வையாளர்கள் சுழிய ஈர்ப்பு விசை கொண்ட ‘பாட்’டில் தங்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு, சிறப்பு மின்தூக்கி மூலம் வெளிப்புறத் தொகுதிகளுக்குச் செல்லலாம்.
விண்வெளியில் தங்குவது சொகுசு அனுபவம் என்பதால், இதன் செலவும் மிக அதிகம். இங்கு ஒருமுறை தங்கிச் செல்ல பல மில்லியன் டாலர்கள் வரை செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் நூற்றாண்டு கருத்தாகவே இருந்தபோதிலும், இப்போதுதான் சோதனை நிலையில் உள்ளது. கட்டுமானப் பணிகள் 2026-இல் தொடங்கி, 2027-இல் திறப்பு விழா நடத்துவதே இலக்கு. இருப்பினும், இவ்வளவு குறுகிய காலத்தில் எந்தவிதமான உடல்ரீதியான கட்டுமானமும் இல்லாமல் இந்த இலக்கை அடைவது சற்று லட்சியமானதாகவே (Ambitious) கருதப்படுகிறது.
