சென்னை, டிச. 15- தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில், பொதுமக்களிடம் இருந்து பூர்த்தி செய்த எஸ்.அய்.ஆர். படிவங்களை திரும்பப் பெறுவதற்கான அவகாசம் நேற்றுடன் (14.12.2025) நிறைவடைந்தது.
வரைவு வாக்காளர் பட்டியல் டிச.19ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. தமிழ்நாட்டில் 6.41 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இந்திய தேர்தல் ஆணைய அறிவிப்பின்படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்அய்ஆர்) கடந்த நவ.4ஆம் தேதி தொடங்கின. இப்பணிகளில் வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் (பிஎல்ஓ) 68,470 பேர் ஈடுபட்டனர். வீடு வீடாகச் சென்று எஸ்அய்ஆர் படிவங்களை விநியோகம் செய்வது, பூர்த்தி செய்த படிவங்களை அவர்களிடம் இருந்து திரும்பப் பெறுவது, அதில் உள்ள விவரங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்வது ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பணிகள் டிச.4இல் முடியும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே, இப்பணிகளில் சிக்கல்கள் எழுந்தது மற்றும் பருவமழை காரணமாக, அவகாசத்தை நீட்டிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன. அதன்படி, முதலில் டிச.11ஆம் தேதி வரையும், அதைத் தொடர்ந்து மேலும் 3 நாட்கள் என டிச.14ஆம் தேதி வரையும் அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
19ஆம் தேதி வெளியாகிறது
இந்நிலையில், படிவங்களை வாக்காளர்களிடம் வழங்கி, அவர்களிடம் இருந்து பூர்த்தி செய்து திரும்பப் பெறுவது ஆகிய பணிகள் நேற்று (14.12.2025) மாலையுடன் நிறைவடைந்தது. தமிழ்நாட்டில் பொதுமக்களிடம் வழங்கி படிவங்கள் திரும்ப பெறப்பட்டது, முகவரி கண்டறிய முடியாதது, நிரந்தரமாக வேறு இடங்களுக்கு குடியேறியது, உயிரிழந்தவர்கள் உள்ளிட்ட வகைகளில் 100 சதவீத படிவங்கள் மீதும் தீர்வு காணப்பட்டு, கணினியிலும் 100 சதவீதம் பதிவேற்றப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தற்போது, கணினியில் பதிவேற்றப்பட்ட படிவங்களை உயிரிழந்தவர்கள், நிரந்தரமாக குடியேறியவர்கள் என பகுப்பாய்வு செய்யும் பணி நடந்து வருகிறது. இதைத் தொடர்ந்து, வரும் 19ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
19.12.2025 முதல், மக்கள் தங்களது படிவங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான ஆட்சேபங்களை தெரிவிக்கலாம். வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர்களை சேர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் 2026 பிப்ரவரி மாதம் வெளியிடப்பட உள்ளது.
அவகாசம் முடிந்த பிறகும் உரிமம் பெறாத
செல்லப் பிராணிகளுக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம்
வீடு வீடாக ஆய்வு நடத்த
சென்னை மாநகராட்சி திட்டம்
சென்னை, டிச. 15- செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெறுவதற்கான அவகாசம் நேற்றுடன் (14.12.2025) நிறைவடைந்தது. இதையடுத்து, வீடு வீடாக ஆய்வு நடத்தி, உரிமம் பெறாத செல்லப்பிராணிகளின் உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி பகுதிகளில் செல்லப் பிராணிகள் வளர்ப்போர், அதை பதிவு செய்துஉரிமம் பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து மாநகராட்சி சார்பில்,திருவிக நகர், புளியந்தோப்பு, லாயிட்ஸ் காலனி, நுங்கம்பாக்கம், கண்ணம்மாபேட்டை, மீனம்பாக்கம் ஆகிய இடங்களில் உள்ள செல்லப்பிராணி சிகிச்சை மய்யங்கள், சோழிங்கநல்லூரில் உள்ள நாய் இனக் கட்டுப்பாட்டு மய்யம் ஆகிய இடங்களில் கடந்த அக்.8ஆம் தேதி முதல் செல்லப் பிராணிகளுக்கு வெறி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
அத்துடன், செல்லப்பிராணிகளுக்கு மைக்ரோசிப் பொருத்துதல், உரிமம் வழங்குதல் ஆகிய பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உரிமம் வழங்குவதற்கான காலக்கெடு டிச.14 வரை நீட்டிக்கபட்டது. அந்த அவகாசம் நேற்றுடன் (14.12.2025) நிறைவடைந்தது. இதுவரை 1,05,556 செல்லப்பிராணிகளின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு 57,626 பிராணிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 3 நாட்களாக 8 இடங்களில் சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன. நேற்று (14.12.2025) ஒரே நாளில் 2,930 செல்லப் பிராணிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. அவகாசம் முடிந்த நிலையில், இன்று (15.12.2025) முதல் வீடு வீடாக ஆய்வு நடத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
உரிமம் இன்றி செல்லப் பிராணிகளை வைத்திருந்தால்,ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கும் வகையில், ஏற்கெனவே மாநகராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.அதன்படி, உரிமம் பெறாமல் செல்லப் பிராணிகளை வைத்திருப்போருக்கு அபராதம் விதிக்க இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.
சமுதாய மாற்றம் மற்றும் வகுப்பு நல்லிணக்கத்திற்கான
‘கபீர் புரஸ்கார்’ தமிழ்நாடு அரசு விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
சென்னை, டிச. 15- சமுதாய மற்றும் வகுப்பு நல்லிணக்கத்திற்கான `கபீர் புரஸ்கார்’ விருது, ஒவ்வொரு ஆண்டும் முதலமைச்சரால் குடியரசு தின விழாவின் போது வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் வசிக்கும் அனைத்து இந்திய குடிமக்களும் ( ஆயுதப்படை வீரர்கள், காவல், தீயணைப்புத்துறை மற்றும் அரசுப் பணியாளர்கள் ஆகியோர்கள் நீங்கலாக)இவ்விருதினைப் பெறத் தகுதியுடையவராவர்.
விருதுக்கு <http://awards.tn.gov.in/> என்ற இணையதளத்தின் மூலமாக இணையதளம் வழியாகவே விண்ணப்பிக்கலாம்.மேலும், விபரங்களுக்கு: 74017 03461 என்ற எண்ணில்தொடர்பு கொள்ளலாம்.
