| த |
ிருப்பெரும்புதூரில் இயங்கி வரும் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குநர் பதவி கடந்த சில ஆண்டுகளாகவே காலியாக உள்ளது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் என்பதால் இந்த நிறுவனத்தின் தலைமைப் பதவியை எப்படியேனும் ஆர்.எஸ்.எஸ் சிந்தனை படைத்த வலதுசாரி ஒருவருக்கு வழங்கி விட வேண்டும் என்று தொடர்ச்சியாக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
2024 ஆம் ஆண்டு மே மாதம் இத்தகையதொரு முயற்சி நடைபெற்று, ‘விடுதலை’ நாளிதழ் அதனை அம்பலப்படுத்தியதைத் தொடர்ந்து அப்போது நடைபெற்ற இயக்குநர் தேர்வுக்கான நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டன. பின்னர் பல்வேறு அரசியல் கட்சிகளும் இது குறித்து எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து முழுமையாக அந்த நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட்டன.
மீண்டும் 2025 ஜூலை முதல் இயக்குநர் நியமனத் திற்கான பணிகள் தொடங்கின. அதுவும் வெளிப்படைத்தன்மையின்றி ரகசியமாக நடத்தப்பட்டு வருவதாகத் தெரிகிறது. வழக்கமாக இத்தகைய நேர்காணல்கள், நிறுவனம் அமைந்திருக் கும் திருப்பெரும்புதூரிலோ அல்லது தலைநகர் புதுடில்லியிலோ நடைபெறுவது வழக்கம். இந்த முறை நேர்காணல் கருநாடக மாநிலம் பெங்களூருவில் நடத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது சந்தேகங்களை எழுப்பி உள்ளது.
இதற்காக அமைக்கப்பட்ட மூன்று பேர் அடங்கிய தேர்வு குழு உறுப்பினர்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ் சார்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டு இருப்பவர் ஆர்,எஸ்.எஸ்.சுடனும், அதன் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பி.யுடனும் நீண்ட காலத் தொடர்பு கொண்டவர். ஏ.பி.வி.பி.யின் முன்னாள் தேசியத் துணைத் தலைவராகவும், ஆர்,எஸ்,எஸ்-சின் மகாநகர் தலைவராகவும் பணியாற்றியுள்ளவர்.
உறுப்பினர்களில் ஒருவரான சாஹில் அகர்வால் என்பவர் ஆர்.எஸ்.எஸ் தீவிரப் பிரச்சாரகராக அறியப்படுபவர். கல்விப்புலத்தில் பெரும் அனுபவமற்ற இளைஞர்.
மற்றொருவர் டில்லியைச் சேர்ந்த இயற்பியல் பேராசிரியரான ராஜேந்திர சிங் தாஹா என்பவரும் ஆர் எஸ் எஸ் தொடர்பு கொண்டவரே!
ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு இணையான தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பில் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதற்கான குழுவில் இளைஞர் மேம்பாட்டுத் துறை சார்ந்த அனுபவம் இல்லாதவர்களே நியமிக்கப்பட்டுள்ளனர்.
இப்பதவிக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் பலரும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தீவிர உறுப்பினர்களாகவோ ஆதரவாளர்களாகவோ இருக்கும்படி பார்த்துக் கொண்டுள்ளார்கள் என்று குற்றம் சாட்டப்படுகிறது.
தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ்-இன் செயல்பாடுகளை அதிகப்படுத்துவதற்கான பல்வேறு முயற்சிகளை ஒன்றிய பா.ஜ.க அரசு மேற்கொண்டு வரும் சூழலில், இளைஞர்களைப் பெருமளவில் தொடர்பு கொண்டு பயிற்சி அளிப்பதற்கு உரிய அமைப்பான ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்திற்கு ஒதுக்கப்படும் நிதியின் மூலம் ஆர் எஸ் எஸ் காவிச் சிந்தனைகளை வளர்ப்பதற்கும், அந்த நிறுவனத்தை ஆர்.எஸ்.எஸ்.சின் பயிற்சி மய்யமாக மாற்றுவதற்கும் இந்த சூழ்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதோ என்ற கடுமையான சந்தேகம் எழுந்துள்ளது.
ஆர் எஸ் எஸ் கார்டு ஹோல்டரை எப்படியேனும் இந்த நிறுவனத்தின் தலைமைப் பொறுப்புக்கு நியமித்து விடுவதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த முயற்சி உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும் என்பதுடன், துறை சார்ந்த அனுபவம் படைத்த கல்வியாளர்கள், பொது நிர்வாகத் துறையில் அனுபவம் கொண்ட மூத்த அதிகாரிகள், சான்றோர்கள் கொண்ட குழு அமைக்கப்பட வேண்டும்.
இத்தகைய குழு அமைப்பது முதல் நேர்காணல்கள் நடத்தி முடிவுகளை அறிவிப்பது வரை முழுவதும் வெளிப்படையான நடவடிக்கைகள் அவசியமாகும். நாடாளுமன்றம் நடந்துவரும் இச் சூழலில், இதற்கான குரலை அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து எழுப்ப வேண்டும்.
