நீதிபதிக்கு வக்காலத்து வாங்கும் தினமலரே, திராணியிருந்தால் பதில் சொல்!

8 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

பதிலடிப் பக்கம், மின்சாரம்

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி திரு. ஜி.ஆர். சுவாமிநாதன் ஆர்.எஸ்.எஸ்.காரராகவே இருக்கட்டும். ஆர்.எஸ்.எஸ்.காரர் நீதிபதியாக இருப்பதில் என்ன தவறு?

மார்க்ஸிஸ்டுக் கம்யூனிஸ்டுக் கட்சி கேரள மாநிலத்தில் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் தலைமையில் ஆட்சி அமைத்தபோது, அதில் அமைச்சராக இருந்த கே.ஆர்.கிருஷ்ண அய்யர், உச்சநீதிமன்ற நீதிபதி ஆகவில்லையா?

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கே.எஸ்.ஹெக்டே உயர்நீதிமன்ற நீதிபதியாகவில்லையா? நீதிபதி பி.ஆர்.கவாய் சிறு வயது முதலே குடியரசு கட்சியில் கட்சிப் பணி ஆற்றவில்லையா? என்று அடுக்கடுக்கான ஆதாரங்களை எடுத்துக் கூறி, ஆர்.எஸ்.எஸ்-சைச் சேர்ந்த திரு. ஜி.ஆர். சுவாமிநாதன் உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருப்பதில் என்ன தவறு என்று வினா தொடுத்துள்ளது தி(இ)னமலர் ஏடு. 14.11.2025 நாளிட்ட அந்த ஏடு “வரலாறு தெரியாத தி.மு.க., சட்டப் புலிகள்!” என்ற தலைப்பில் (பக்கம் 9) வரிந்து கட்டிக் கொண்டு, பூணூலை எழுதுகோலாக்கி சும்மா மாய்ந்துத் தள்ளி இருக்கிறது.

எடுத்துக்காட்டுகள் சரிதான். ஆனால் அந்த நீதிபதிகள் சார்ந்திருந்த கட்சிகளும், திரு.ஜி.ஆர். சுவாமிநாதன் சார்ந்த ஆர்.எஸ்.எஸ்.சும் ஒன்றா?

மூன்று முறை தடை செய்யப்பட்ட கட்சி ஆர்.எஸ்.எஸ். என்பதை மறைத்து திரிபுவாதம் பேசுவது சரிதானா?

காந்தியார் படுகொலை செய்யப்பட்டபோது – அக்கட்சி ஏன தடை செய்யப்பட்டது? கெஞ்சிக் கூத்தாடி வரிசையாக மன்னிப்புக் கடிதங்களை எழுதிக் கொடுத்து மன்றாடியதற்குப் பிறகு தானே அந்தத் தடை நீக்கப்பட்டது.

இரண்டாவதாக நெருக்கடி நிலை காலத்தில் ஒரு தடை!

நாங்கள் இனிமேல் அரசியலில் ஈடுபடமாட்டோம், நெருக்கடி நிலையை நாங்கள் ஆதரிக்கிறோம் என்று எத்தனைக் கடிதங்களை இந்த வீராதி வீரர்கள் எழுதினார்கள் என்பதை மறுக்க முடியுமா?

மூன்றாவதாக பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது ஒரு தடை! இவை எல்லாமே வன்முறைக் கலாச்சாரத்தை இரத்த ஓட்டமாகக் கொண்டு செயல்பட்ட காரணத்துக்காகத்தானே?

பதிலடிப் பக்கம், மின்சாரம்

ஆர்.எஸ்.எஸில் ‘ஷாகா’ என்று சொல்லி வன்முறைப் பயிற்சி தானே கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது.

பல்வேறு ஆணையங்கள் (கமிஷன்கள்) பல்வேறு மதக் கலவரங்களுக்கு ஆர்.எஸ்.எஸ். தான் காரணம் என்று அறிக்கை கொடுக்கவில்லையா?

1925ஆம் ஆண்டில் பிறப்பெடுத்த ஆர்.எஸ்.எஸ். 1927ஆம் ஆண்டிலேயே நாக்பூரில் முசுலிம்களுக்கு எதிராகக் கலவரத்தை நடத்தத் துவங்கி விட்டனரே!

மண்டைக்காடு கலவரத்தின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். எப்படியெல்லாம் இருந்தது என்பது பற்றி நீதிபதி திரு.வி.வேணுகோபால் தலைமையிலான ஆணையம் வரிவரியாகப் பிளந்து கட்டியதே!

காமராசர் கொலை முயற்சி, பாபர் மசூதி இடிப்பு என்று எழுதிக் கொண்டே போகலாமே!

வெகு தூரம் போக வேண்டாம்! தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். அவர்கள் டெல்லி சென்றிருந்தபோது, அவரிடம் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் எப்படி நடந்து கொண்டனர்!

இதோ முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். கொடுத்த பேட்டி (17.1.1983)

கேள்வி: ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்படுமா?

முதலமைச்சர் எம்.ஜி.ஆர். பதில்: நேற்று நான் டில்லியில் தமிழ்நாடு மாளிகையில் இருந்து மத்திய மந்திரிகளைப் பார்ப்பதற்காகப் புறப்பட முயன்ற நேரத்தில், முன் அறிவிப்பு இல்லாமல் இந்து மஞ்ச் என்ற பெயரில் 40, 45 வயதுக்காரர்கள், படித்தவர்கள் யோசித்து செயல்படும் தகுதி உள்ளவர்கள் என் முன்னால் நின்று கொண்டு 15 ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் சுடப்பட்டதாகச் சொன்னார்கள். என்னைப் பார்க்க வேண்டும் என்றார்கள். நான் உடனே பார்க்க முடியாது, முன் அறிவிப்பு கொடுக்க வேண்டும் என்றேன். அதற்காக ‘ஒழிக’ என்று சொன்னார்கள்.

அவர்கள் நடந்து கொண்ட முரட்டுத்தனமான செயகையைப் பார்க்கும் போது, இதுதான் ஆர்.எஸ்.எஸ். இயக்கமா? என்று நினைக்கத் தோன்றியது.

அதுதான் ஆர்.எஸ்.எஸ். இயக்கமென்றால், அது இந்த நாட்டுக்குள், தமிழ்நாட்டுப் பண்பாட்டுக்கும் ஒத்து வராதது, நேரத்தையும் முன்னதாக குறித்து வாங்கவில்லை. உண்மைக்கு மாறான தகவலையும் சொல்கிறார்கள். அவர்கள் பெரியவர்கள், அவ்வாறு மட்டமாக நடந்து கொண்டார்கள். என்னைத் தடை செய்ய முயற்சிக்கும் அளவுக்கு நடந்து கொண்டார்கள்.

அது ஆர்.எஸ்.எஸ். இயக்கமானாலும், எதுவானாலும் இப்படிப்பட்ட செயலில் அதற்குப் பெருமை தரக்கூடியல்ல. இந்து மதத்தை, இப்படியெல்லாம் காப்பாற்ற முடியாது. தமிழ்நாட்டில் இதுவரை எனக்கு இப்படிப்பட்ட அனுபவம், கீழ்த்தரமாக அவர்கள் நடந்து போல்… அனுபவம் இதுவரை நடந்ததில்லை.

இதுபோல மற்ற மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு அல்லது மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு வரவேற்பு கொடுத்தால் என்னாகும்? இரண்டுக்கும் இணைப்பாக நான் பாலத்தைப் போல இருப்பதை உடைக்க விரும்புகிறார்கள்.

எனக்கு இதைப் பார்த்த பிறகு ஆர்.எஸ்.எஸ். மீது பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டது என்று கூறியவர் அன்றைய முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர்.

இந்த இலட்சணத்தில் உள்ள ஓர் அமைப்பில் நீதி பரிபாலனம் செய்யும் பெரிய பதவியில் இருந்தால் அதில் என்ன தவறு என்று ‘தினமலர்’ வக்காலத்துப் போட்டு எழுதுகிறது.

யாரோ சிலர் செய்வதற்கு ஆர்.எஸ்.எஸ். பொறுப்பாகுமா  என்று ஓடி ஒளிவது ஒருபுறம் இருக்கட்டும்.

கொள்கை அளவில் பார்த்தாலும் ஆர்.எஸ்.எஸில், அரசமைப்புச் சட்டத்தின் மீது உறுதிமொழி எடுக்கும் நீதிபதிகள் ஆர்.எஸ்.எஸ். சிந்தனை உள்ளவர்களாக இருக்க முடியுமா?

ஆர்.எஸ்.எஸ்.சின் குருநாதரான எம்.எஸ்.கோல்வால்கர் என்ன சொல்கிறார்?

“நம்முடைய மக்களின் மூலாதாரம் எது என்பது சரித்திர மேதைகளுக்கே தெரியாது. நாம் தொடக்கம் இல்லாத அநாதிகள். பெயர் இல்லாமல் வாழ்ந்திருக்கிறோம். நாம் நல்லவர்கள், அறிவுத்திறன் கொண்டவர்கள், ஆன்மாவின் விதிகளையெல்லாம் அறிந்தவர்கள் நாம் மட்டுமே! அப்பொழுது நம்மைத் தவிர, மற்றவர்கள் எல்லாம் இரண்டு கால் பிராணிகளாக அறிவற்ற மாக்களாக வாழ்ந்து வந்தனர். எனவே, தனிமைப்படுத்தி நமக்குப் பெயர் எதையும் சூட்டிக் கொள்ளவில்லை. சில நேரங்களில் நமது மக்களை மற்றவர்களிடமிருந்து பிரித்துக் காட்ட நாம் ஆரியர்கள் – அதாவது அறிவுத் திறன் மிக்கவர்கள் என்று அழைக்கப்பட்டோம். நம்மைத் தவிர மற்றவர்கள் எல்லாம் மிலேச்சர்கள்” என்கிறார் ஆர்.எஸ்.எஸ்.சின் குருநாதர் எம்.எஸ்.கோல்வால்கர் (ஆதாரம் ‘Bunch of Thoughts’ தமிழில் ‘ஞானகங்கை’).

இந்தக் கொள்கை உடைய ஆர்.எஸ்.எஸ். அமைப்பிலிருந்து வந்தவர்கள் அரசு ஊழியர்களாகவோ, நீதிமன்றத்தினராகவோ இருந்தால் என்னாவது?

இதோடு நிற்கவில்லை. அதே குருஜி கோல்வால்கர் நமது தேசியம் (We or Our Nationhood Defined) எனும் நூலில்  என்ன கூறுகிறார்?

“இந்துஸ்தானில் உள்ள இந்து அல்லாதவர்கள் அன்பு, தியாகம் போன்றவைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். அவர்கள் தங்களை அயல்நாட்டினராகக் கருதக்கூடாது, அல்லது இந்தத் தேசத்தை முழுவதும் ஆதரித்து வாழ வேண்டும். எதையும் கேட்காமல், எந்தச் சலுகைகளையும் பெறாமல், எதற்கும் முன்னுரிமை பெறாமல், குடிமக்களின் உரிமையும் இன்றி இருத்தல் வேண்டும்” என்று கூறுகிறார்.

இந்து மதத்தைச் சாராதவர்கள் குடி உரிமையும் இன்றி வாழ வேண்டும் என்று சொல்லுகிற ஆர்.எஸ்.எஸின் சிந்தனையில் உள்ள ஒருவர் நீதி சொல்லும் இடத்தில் இருந்தால் இது எத்தகைய பாரதூர விளைவுகளை ஏற்படுத்தும்?

‘தினமலர்’ பதில் சொல்லுமா?

இதையும் கடந்து பச்சைப் பச்சையாக ஆர்.எஸ்.எஸ். தலைவராக இருந்த கே.எஸ்.சுதர்சன் சொல்லுவதைக் கேளுங்கள்! கேளுங்கள்!!

-ஆக்ரா, அக். 15 (2000)

“பூர்வீகத்தில் தாங்கள் இந்துக்கள் என்ற கருத்தை முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் ஒப்புக் கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தினாரா இல்லையா?

ஆக்ராவில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மூன்று நாள் தேசியப் பாதுகாப்பு முகாமின் நிறைவு நிகழ்ச்சியில் –

அப்போதைய ஒன்றிய உள்துறை அமைச்சர் எல்.கே. அத்வானி, உ.பி. முதல்வர் ராம்பிரகாஷ் குப்தா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

நிறைவு நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் குப்பஹள்ளி சீதாராமையா சுதர்சன் ஆற்றிய உரை இதோ!

பூர்வீகத்தில் தாங்கள் இந்துக்கள் என்ற கருத்தையும், பிற மதங்களின் கருத்தையும், பிற மதங்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்கும் தன்மையையும் முஸ்லிம்களும் கிறிஸ்தவர் களும் ஏற்று தேசிய நீரோட்டத்தில் இணைய வேண்டும்.

ராமபிரான், கிருஷ்ண பகவான் ஆகியோருடைய ரத்தம் தான் தங்களுடைய நரம்புகளில் ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை முஸ்லிம்கள் ஒப்புக் கொள்ள வேண்டும்.

அன்னிய நாட்டிலிருந்து நமது நாட்டின்மீது படையெடுத்த பாபரை எதற்காக முஸ்லிம்கள் சொந்தம் கொண்டாட வேண்டும்? பாபருடைய கல்லறைக் கருத்துகளை முஸ்லிம் நாடான ஆப்கானிஸ்தானமே புறக்கணித்துவிட்டது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

முஸ்லிம்களின் முன்னோர்களில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் அல்ல. எனவே முஸ்லிம்களின் முன்னோர்களில் பெரும்பாலோர் இந்தியர்கள்தான்.

ஈரானிலுள்ள முஸ்லிம்கள் தங்களுக்கென ‘சுபியிசத்தை’ வகுத்துக் கொண்டனர். எனவே இஸ்லாமிய புதிய அமைப்பை ஏற்படுத்துவது பற்றி இந்தியாவிலுள்ள முஸ்லிம்களும் சிந்திக்க வேண்டும்

இந்தியாவைத் துண்டாடியது மனித வரலாற்றின் மிகப் பெரிய தவறு என்று பாகிஸ்தானைச் சேர்ந்த முத்தா ஹிதா குவாமி இயக்கத்தின் தலைவர் அல்தாப் ஹாசன் தெரிவித்துள்ள கருத்தை முஸ்லிம்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

‘அனைத்து மதங்களும் சமமானதல்ல’ என்று வாடிகனிலுள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ தலைமையிடம் வெளியிட்டுள்ள அறிக்கை கண்டனத்துக்குரியது. இதுபோன்ற கருத்துகளில் நம்பிக்கை கொண்டுள்ள கிறிஸ்தவ அமைப்புகளை (கத்தோலிக்க மிஷினரிகளை)  இந்தியாவில் பணியாற்ற அனுமதிக்க வேண்டுமா என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

மதமாற்றம் கூடாது என்பதே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் கருத்து.

வாடிகனிலுள்ள கத்தோலிக்க கிறிஸ்தவத் தலைமை யிடத்தின் கருத்துக்கு பெரும்பாலான இந்திய கிறிஸ்தவர்கள் கட்டுப்பட்டுள்ளனர். இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, அயர்லாந்து ஆகியவை தங்களுக்கென சுதேசி சர்ச் கருத்துகளைக் கொண்டு செயல்பட்டு வருகின்றன.

எனவே இந்தியக் கிறிஸ்தவர்களும் கத்தோலிக்க தலைமையிடத்தின் ஏற்க முடியாத கருத்தை உதறித் தள்ளிவிட்டு, அதனுடன் உள்ள உறவைத் துண்டித்துக் கொள்ள வேண்டும். ரட்சிப்புக்கு இதர பல வழிகள் உள்ளன.”

(‘தினமணி’ 16.10.2000)

இதற்கு மேலும் என்ன வேண்டும்? பல இனங்கள், பல மொழிகள், பல மதங்கள், மதமற்றவர்கள், பல பண்பாடுகள் கொண்ட 146 கோடி மக்கள் வாழும் ஓர் உபகண்டத்தில் இந்து மதத்தவர்களுக்கு மட்டும் தான் எல்லா உரிமைகளும் உண்டு. மற்றவர்கள் குடியுரிமையும் இன்றி வாழ வேண்டும், சிறீராமபிரான், சிறீகிருஷ்ண பகவான் ஆகியோருடைய ரத்தம் தான் தங்களுடைய நரம்புகளில் ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை முஸ்லிம்கள் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் கூறுவதும், அப்படிக் கூறக்கூடிய ஆர்.எஸ்.எஸ். சிந்தனையில் உள்ளவர்கள் நீதி பரிபாலினம் செய்யும் இடத்தில் இருந்தால் அதில் என்ன தவறு இருக்கிறது என்று ‘தினமலர்’ கேட்கிறது.

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நின்று மரியாதை செய்யாத சங்கராச்சாரியாரிக்கும் சாதகமான தீர்ப்பு.

பார்ப்பனர் சாப்பிட்ட எச்சில் இலை மீது உருளுவது சரியே! என்றெல்லாம் ஒரு நீதிபதி தீர்ப்பு சொல்லுவது – பகுத்தறிவாளர்களைக் கேலி செய்வது – சம்பந்தமே இல்லாமல் ஒரு வழக்கில் பெரியார், மணியம்மைத் திருமணத்தையும் பற்றி ஒரு நீதிபதி விமர்சனம் செய்வது எல்லாம் எந்த சித்தாந்தத்தின் சாயல்? ‘தினமலர்’ கூறுமா?

நாம் கூறியவற்றுக்கெல்லாம் எப்போதும் சரியான பதிலை ‘தினமலர்’ கூறாது, கூறவும் முடியாது! தினமலரை வாங்குவோர் – படிப்போர் தான் சிந்திக்க வேண்டும்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *