உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘‘பீகாரை ஜெயித்துவிட்டோம்,
அடுத்த டார்கெட் தமிழ்நாடுதான்” என்று சொல்கிறார்!
நீங்கள் இல்லை, உங்கள் சங்கிப் படையையே அழைத்துக்கொண்டு வந்தாலும், உங்களால் இங்கு ஒன்றும் செய்ய முடியாது, இது தமிழ்நாடு!
திருவண்ணாமலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுச்சி உரை!
திருவண்ணாமலை, டிச.15 உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘‘பீகாரை ஜெயித்துவிட்டோம், அடுத்த டார்கெட் தமிழ்நாடுதான்” என்று சொல்கிறார்! அமித்ஷா அவர்களே! நீங்கள் இல்லை, உங்கள் சங்கிப் படையையே அழைத்துக்கொண்டு வந்தாலும், உங்களால் இங்கு ஒன்றும் செய்ய முடியாது. இது தமிழ்நாடு! இது தமிழ்நாடு! அன்புடன் வந்தால், அரவணைப்போம்… ஆணவத்துடன் வந்தால் அடிபணிய மாட்டோம்; எதிர்த்து நிற்போம்! உங்களை ஜெயித்துக் காண்பிப்போம் என்றும் குறிப்பிட்டார்.
இக்கூட்டத்தில் தி.மு. கழகத் தலைவர் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை வருமாறு:–
‘திரவிடியன் ஸ்டாக்ஸ்’ எல்லோருக்கும்…
முதலில் உங்களைப் பற்றிச் சொல்கிறேன். மாஸாக – கெத்தாக இங்கு வந்திருக்கும் ‘திரவிடியன் ஸ்டாக்ஸ்’ எல்லோருக்கும் என்னுடைய முதல் வணக்கம்!
அமைச்சர் வேலு அவர்களிடம் ஒரு வேலையைச் சொல்லிவிட்டால், அதைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டிய அவசியமே இல்லை. அப்படி இந்தக் கூட்டத்தைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கக் கூடிய வேலு அவர்களுக்கு என்னதான் தம்பி உதயநிதி நன்றி சொல்லியிருந்தாலும், தலைமைக் கழகத்தின் சார்பில், தலைவர் என்ற முறையில் நானும், நன்றி கூற விரும்பு கிறேன்.
உங்களுடைய எனர்ஜி
எனக்கும் ‘டிரான்ஸ்பர்’ ஆகியிருக்கிறது!
எதிரில் இருக்கும் உங்களைப் பார்க்கும்போது, ஒரு அய்ம்பது ஆண்டுகள் டைம்–டிராவல் செய்து பின்னால் சென்றது போன்று, எனக்கு இருக்கிறது! உங்களைப் போன்ற இளைஞனாக – கிராமம் கிராமமாக தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்து, இந்த இளைஞரணியை வளர்த்தெடுத்த ஞாபகங்கள் எல்லாம் வருகிறது! எத்தனை ஞாபகங்கள்? இரவு பகல் பார்க்காமல், தூக்கம் இல்லாமல், கிராமங்கள்தோறும் கொடி ஏற்றம், திண்ணைப் பிரச்சாரம், நாடகம், பொதுக்கூட்டம் எனக் கழக நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறோம். அப்படி உழைத்து, வளர்த்த திராவிட முன்னேற்றக் கழகம், 75 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறோம். அப்படிப்பட்ட கழகத்திற்கு, புது இரத்தமாக வந்திருக்கும் உங்களைப் பார்க்கும்போது – புது மகிழ்ச்சியும், நம்பிக்கையும் பிறக்கிறது! அதுமட்டுமல்ல, உங்களுடைய எனர்ஜி எனக்கும் ‘டிரான்ஸ்பர்’ ஆகியிருக்கிறது!
இந்த மாபெரும் இயக்கத்தைப் பேரறிஞர் அண்ணா அவர்கள் தொடங்கியபோது, அவருக்கு வயது 40, தலைவர் கலைஞருக்கு 25 வயதுதான். பேராசிரியர், நாவலர் உள்ளிட்ட பலரும் அவரோடு இருந்தார்கள். அவர்கள் எல்லாம் எப்படி ஃபயராக இருந்தார்கள் என்பதற்கு, ஓர் எடுத்துக்காட்டு சொல்கிறேன்…

புரட்சிக்கவிஞரிடமிருந்து வாழ்த்துப் பா!
1942 இல் தலைவர் கலைஞர் அவர்கள், தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம் என்ற அமைப்பை உருவாக்கினார். தொடக்க விழாவிற்கு, புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களிடமிருந்து, ஒரு வாழ்த்துப்பா வந்தது. அந்த வாழ்த்துப்பாவில் புரட்சிக்கவிஞர் எழுதிய வரிகள்தான் “கிளம்பிற்றுக் காண் தமிழ்ச் சிங்கக்கூட்டம்! கிழித்தெறியத் தேடுதுகாண் பகைக்கூட்டத்தை!” இந்த வரிகளைக் கேட்கும்போதே, அந்த இளைஞர்கள் எப்படி ஃபயராக இருந்திருப்பார்கள் என்று உங்களுக்குப் புரியும்! அந்த ஃபயர்பிராண்ட்தான், நம்முடைய தி.மு.க.!
‘எடுத்தோம் – கவிழ்த்தோம்’ என்று
இங்கு எதையும் செய்துவிடவில்லை!
எது எதெல்லாம் இந்த தமிழ்ச்சமுதாயத்தைப் பின்னுக்கு இழுக்குமோ – எது எதெல்லாம் தமிழ்நாட்டை இருட்டிற்குள் தள்ளுமோ அவை எல்லாவற்றையும் எதிர்த்து, தோற்கடித்து, புது வரலாறு படைத்தோம்! சும்மா ‘எடுத்தோம் – கவிழ்த்தோம்’ என்று இங்கு எதையும் செய்துவிடவில்லை. தெருத்தெருவாக – வீடு வீடாகச் சென்று பேசி, டீக்கடையையும் – சலூனையுமே, அரசியல் மேடைகளாக மாற்றி, மக்களை ‘எஜுகேட்’ செய்தோம். உலக வரலாற்றையெல்லாம் சொல்லி, நாம் ஏன் இன்னும் பின்தங்கிய நிலையில் இருக்கிறோம் என்று எடுத்துச் சொல்லி, மக்களுக்குள் நல்ல மாற்றத்திற்கான விதையை,சிந்தனையாக விதைத்தார்கள்!
கலைஞர் அவர்கள் சிந்தித்து, எண்ணி உருவாக்கியதுதான், இந்த இளைஞரணி!
அண்ணா பேசுகிறார்… கலைஞர் பேசுகிறார்… நாவலர் பேசுகிறார்… பேராசிரியர் பேசுகிறார் என்று சொன்னால், மக்களும் குடும்பம் குடும்பமாக வந்து அவர்கள் பேசுவதைக் கேட்டார்கள்.
அவர்கள் பேச்சில் சொன்னதையெல்லாம், மக்கள் அவரவர்களின் ஊரில் எடுத்துச் சொன்னார்கள். திராவிட இன உணர்வை வளர்த்தார்கள். தமிழை நசுக்க வந்த ஹிந்தி ஆதிக்கத்தை விரட்டினார்கள்! அதனால்தான், “ஏ.. தாழ்ந்த தமிழகமே!” – என்று கவலைப்பட்ட காலத்தை மாற்றி, இப்போது, ‘‘திரும்பிப் பாருங்கள் தமிழ்நாட்டை”–என்று சொல்லும் காலத்திற்கு வந்திருக்கிறோம்! அவர்களது ஜெனரேஷன் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்ததும், அவர்களின் உழைப்பையும் – தியாகத்தையும் – கொள்கை உணர்வையும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று தலைவர் கலைஞர் அவர்கள் சிந்தித்து, எண்ணி உருவாக்கியதுதான், இந்த இளைஞரணி!
நம்முடைய இலட்சியப் பயணம் தொடரும்: கலைஞர்
1980 ஜூலை 20 ஆம் தேதி, மதுரை ஜான்சிராணி பூங்காவில், இளைஞரணியைத் தொடங்கினோம்! அந்தக் கூட்டத்தில் பேசிய தலைவர் கலைஞர் அவர்கள் சொன்னார்கள்;
சோதனைகள் – வேதனைகள் – தோல்விகள் – அடக்குமுறைகள் – சிறைச்சாலைகள் – சித்திரவதைகள் எல்லாம் படைகூட்டி வந்தாலும், இந்தக் கழகம் அசைந்து விடாமல் – தொலைந்துவிடாமல் – மறைந்துவிடாமல் ஒளிவிட்டுக் கொண்டிருக்கும் அடித்தளம் நம்முடைய அமைப்புமுறை! அதனுடன் நம்முடைய இலட்சியப் பயணம் சேர்ந்து தொடரும்” என்று முழங்கினார்.
இளைஞரணியை அறிவித்துவிட்டோம் என்று அமைதியாக இருந்துவிடவில்லை. இதற்கான கட்டமைப்பைப் பலப்படுத்த வேண்டும் என்று, முதலில் அய்வர் குழுவையும், அடுத்து எழுவர் குழுவையும் தலைமைக் கழகம் நியமித்தது. அந்தக் குழுவில் நான், நாடாளுமன்றத்தில் கர்ஜித்துக் கொண்டிருக்கும் திருச்சி சிவா – வாலாஜா அசேன் – பரிதி இளம்வழுதி – தாரை மணியன் – ஜெயம் ஜூலியஸ் – பஞ்சவர்ணம் ஆகியோர் இருந்தோம்!
ஊர் ஊருக்கு மன்றங்களை அமைத்தோம்!
நாங்களும் தமிழ்நாடு முழுவதும் ஊர் ஊராக, கிராமம் கிராமமாக, தெருத் தெருவாகச் சென்றோம்! இளை ஞர்களைச் சந்தித்தோம்! கழகத்தின் கொள்கைகளை எடுத்துச் சொன்னோம்! தந்தை பெரியார் மன்றம் – அறிஞர் அண்ணா மன்றம் – சிட்டிபாபு மன்றம் – எம்.ஆர்.ராதா மன்றம் – சத்தியவாணி முத்து மன்றம்– கலைஞர் படிப்பகம் – அஞ்சுகம் படிப்பகம் – டாக்டர் நடேசனார் படிப்பகம் – டி.எம்.நாயர் வாசகர் வட்டம் – சர். பிட்டி தியாகராயர் வாசகர் வட்டம் என்று ஊர் ஊருக்கு மன்றங்களை அமைத்து கொள்கைகளைக் கூர்படுத்தியதோடு, மக்களையும் சந்தித்து கழகத்தை வளர்த்தோம்! கழகத்தின் இலட்சியப் பயணத்திற்குத் துணை நின்ற இளைஞர் அணி!
சரி, உதயநிதி இவ்வளவும் செய்கிறார்… அப்படி என்றால், அடுத்து நீங்கள் என்ன செய்ய வேண்டும்? அதைப் பற்றிக் கூட உதயநிதி இங்கே சொன்னார்.
இளைஞர்களுக்கு விழிப்புணர்வையும் – தெளிவையும் ஏற்படுத்துங்கள்!
நம்முடைய லெகசியை, மக்களிடம் கொண்டு சென்று சேர்க்க வேண்டும்! தி.மு. கழகத்தை வளர்க்கும் பணியில் கொள்கையை விதைக்கும் பணியில் ஈடுபட வேண்டும்! காலையில் ‘முரசொலி’ படித்த பிறகு, அதில் வெளியாகியிருக்கும் கட்டுரைகள், கருத்துகள், தலையங்கங்கள், திராவிட இயக்கப் பார்வைகள் என்று எல்லாவற்றையும் உங்களால் முடிந்த அளவிற்கு எல்லோரிடமும் கொண்டு செல்லுங்கள்! அவை எல்லாவற்றையும் சுருக்கமாக இன்றைய இளைஞர்களுக்குப் புரியும் வகையில், கிரியேட்டிவாக மாற்றி உங்களுக்கு என்று ஒரு ஸ்டைலில் பேசி, எழுதிக் கொண்டு செல்லுங்கள்! அவர்களுக்கு விழிப்பு ணர்வையும் – தெளிவையும் ஏற்படுத்தி தமிழ்நாட்டை உயர்த்தும் கழகத்தின் பாதையில் அவர்களைக் கொண்டுவர வேண்டும்!
2026 தேர்தலில், மக்கள் முன்னால் இருக்கும் கேள்வி என்னவென்றால், “இன்னும் அய்ம்பது ஆண்டுகள் முன்னோக்கி நடைபோடப் போகிறோமா? இல்லை, ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கி இழுக்க முயற்சி செய்பவர்களுக்கு அடிபணியப் போகிறோமா?” அந்தக் கேள்விக்கு மக்கள் அளிக்கப் போகும் விடை: “திராவிட மாடல் ஆட்சி 2.0” அதற்கு நீங்கள் எல்லோரும் கடுமையாக உழைக்க வேண்டும்!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் எதிர்காலத்தில்தான், தமிழ்நாட்டின் எதிர்காலம்!
ஏன் என்றால், திராவிட முன்னேற்றக் கழகத்தின் எதிர்காலத்தில்தான், தமிழ்நாட்டின் எதிர்காலம், தமிழினத்தின் எதிர்காலம் அடங்கியிருக்கிறது! அந்த எதிர்காலம், வளம் நிறைந்ததாக, ஒளி நிறைந்ததாக தமிழ்நாடு நம்பர் ஒன் என்று சிங்கநடை போடுவதாக அமைய வேண்டும்!
நீங்கள்தான் திராவிட மாடல் 2.0 அடித்தளமாக, இருக்க வேண்டும்! இருப்பீர்களா? இப்போது சொல்லுங்கள். நமது மிஷன் 2026 என்ன? “திராவிட மாடல் 2.0”
சத்தமாகச் சொல்லுங்கள்… திராவிட மாடல் 2.0 அந்த வெற்றிக்கான பயணத்தை, இன்றைக்கே தொடங்குங்கள்!
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை யாற்றினார்.
