சென்னை, டிச.14 தலைநகர் சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் பிரதான அய்ந்து ஏரிகளிலும் தற்போது நீர் இருப்பு திருப்திகரமாக உள்ளதாக நீர்வளத்துறை தெரிவித்துள்ளது. மொத்த கொள்ளளவில் சுமார் 95.02 சதவீதம் அளவிற்கு நீர் நிரம்பி உள்ளதால், சென்னை மாநகர மக்களின் குடிநீர்த் தேவை உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏரி நீர் இருப்பு நிலவரம்: செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம் மற்றும் கண்ணன்கோட்டை ஆகிய அய்ந்து ஏரிகளின் மொத்த நீர் கொள்ளளவு 11.757 டி.எம்.சி. (TMC) ஆகும். இன்றைய நிலவரப்படி (டிசம்பர் 14, 2025), இந்த ஏரிகளில் 11.172 டி.எம்.சி. அளவிற்கு நீர் இருப்பு உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 95.02 சதவீதம் ஆகும்.
முக்கிய ஏரிகள் முழு கொள்ளளவில்: குறிப்பாக, சென்னைக்கு அதிகப்படியான நீரை வழங்கும் முக்கிய ஏரிகளான செம்பரம்பாக்கம், புழல் மற்றும் பூண்டி ஆகிய மூன்று ஏரிகளும் 100 சதவீதம் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகின்றன.
