சென்னை, டிச.14 இந்திய ரயில்வேயில் நிலவும் போதிய பணியாளர்கள் பற்றாக்குறையை சமாளிக்க, 5,058 மேனாள் ராணுவ வீரர்களை ‘பாயின்ட்ஸ்மேன்’ பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க ரயில்வே வாரியம் எடுத்துள்ள முடிவுக்கு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், முறையான ஊழியர்கள் நியமிக்கப்படும் வரை, இது தற்காலிக நடவடிக்கையாக இருக்கும் என்றும், மேனாள் ராணுவ வீரர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நியமனங்கள் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் முன்னாள் ராணுவ வீரர்கள் நல வாரியங்கள் மூலம் மேற்கொள்ளப்படும்.
இந்த ஒப்பந்தம் 2026 டிசம்பர் 31 வரை செல்லுபடியாகும். காலியிடங்களின் நிலைமையைப் பொறுத்து இது நீட்டிக்கப்படலாம்.
பாயின்ட்ஸ்மேன் பணி
ரயில் பாதையில் உள்ள சுவிட்சுகளை கையால் இயக்கி, ரயில்கள் பாதுகாப்பாக யார்டுகள் மற்றும் சந்திப்புகள் வழியாக செல்வதற்கு உதவுவது பாயின்ட்ஸ்மேன் பணியாகும். விபத்து இல்லாமல் ரயில்கள் சீராக இயங்குவதற்கு இவர்கள் ஸ்டேஷன் மாஸ்டருக்கு உறுதுணையாக இருப்பார்கள்.
பயிற்சி
தேர்வு செய்யப்படும் விண்ணப்ப தாரர்கள், களப்பணியில் நியமிக்கப் படுவதற்கு முன், முழுமையான ஆரம்பப் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். பயிற்சியை வெற்றிகரமாக முடிப்பவர்கள் மட்டுமே களப்பணியில் அமர்த்தப்படுவார்கள்.
கடும் எதிர்ப்பு
அனைத்து இந்திய ரயில்வே தொழிலாளர் கூட்டமைப்பின் தலைவர் கண்ணையா இந்த முடிவுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
“ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமிப்பதை தொழிற் சங்கங்கள் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம். குறுகிய கால ஒப்பந்தத்தில் இருப்பவர்களை முக்கியமான பாதுகாப்பு அமைப்புகளை இயக்க அனுமதிப்பது பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஆகும். அவர்களுக்கு நீண்ட கால பொறுப்போ அல்லது கணக்கு கேட்கும் நிலையோ இல்லை. ஒப்பந்தம் முடிந்ததும், சிக்னல்கள் மற்றும் பிற முக்கியமான பாதுகாப்பு அமைப்புகள் பற்றிய முழு தகவல்களுடன் அவர்கள் வேலையை விட்டு வெளியேறிவிடுவார்கள். எனவே இந்த முடிவு ஆபத்தானது,” என்று அவர் தெரிவித்தார்.
பாதுகாப்பு அம்சங்கள்
“முக்கியமான பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் அமைப்புகளின் பராமரிப்பு மற்றும் இயக்கத்திற்கு ஒப்பந்தப் பணியாளர்களை நியமிப்பதையும், அவர்களுக்கு அந்த வேலைகளில் அனுபவம் அளிப்பதையும் முன்னுரிமையாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். குறுகிய காலத்தில் இது குறைந்தபட்சமாகக் குறைக்கப்பட வேண்டும், நீண்ட காலத்தில் முற்றிலும் சுழியமாக மாற்றப்பட வேண்டும்,” என்று அவர் ரயில்வே வாரியத்திற்கு அளித்த அறிக்கையில் வலியுறுத்தினார்.
பாதுகாப்பு ஆணையரின் இந்த எச்சரிக்கைக்கு எதிராக, இப்போது ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை முக்கியமான பாதுகாப்புப் பணியில் நியமிக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது கேள்விக்குறியை ஏற்படுத்தியுள்ளது.
