‘ஆகமத்தின் பெயரால் அநீதி’

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

உயர்நீதிமன்ற மேனாள்
நீதியரசர் அரி பரந்தாமன்

தஞ்சாவூரில் நடைபெற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் – கலைஞர்கள் சங்கத்தின் 16ஆவது மாநில மாநாட்டில்,  ‘ஆகமத்தின் பெயரால் அநீதி’ என்னும் தலைப்பில் உயர்நீதிமன்ற மேனாள் நீதியரசர் அரி பரந்தாமன் ஆற்றிய உரையின் பகுதிகள்.

  1. வீதி உரிமைப் போராட்டமும்
    சமூக நீதி வரலாறும்

சமூக நீதிப் போராட்டங்கள் வீதி உரிமைக் காகவே நீண்ட காலம் முன்பு தொடங்கின. 1960-களில் அருப்புக்கோட்டையில் ஒரு திருமண  ஊர்வ லத்தை தங்கள் தெருவில் நடத்த காவல் துறை உத்தரவு பெற்றும், அப்போதைய நிர்வாகத்தின் ஒத்துழையாமை காரணமாக அதை அமல்படுத்த முடியவில்லை. இந்தப் பின்னணியில்தான் வீதி உரிமைக்காக 1920களில் நடைபெற்ற வைக்கம் போராட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. வைக்கம் போராட்டம் தீண்டாமைக் கொடுமை உச்சத்தில் இருந்த கேரளப் பகுதியில் (வைக்கம், அம்பலப்புழை, சுசீந்தி ரம்) 604 நாட்கள் நடைபெற்றது. தந்தை பெரியார், காந்தியார் (பத்து நாட்கள் ஆதரவளித்தார்), நாராயண குரு ஆகிய மூன்று ஆளுமைகளின் ஆதரவுடன் நடந்த இப்போராட்டத்தின் கோரிக்கைகள் எளியவை: கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில், குறிப்பிட்ட ஒரு சாராருக்கு (ஈழவர், புலையர், தீயர்) தடை; ஆனால், ஆடு, மாடு, நாய் போன்ற உயிரினங்கள் செல்லலாம்; ஏன் இந்த கொடுமை? இதற்கு முன்பாக, நாடார் சமூகத்தின் மிகப்பெரிய போராளியாக அய்யா வைகுண்டர் இருந்தார். 1800 முதல் 1850-க்கு இடைப்பட்ட காலத்தில், நாடார் சமூகப் பெண்கள் தோள்சீலை அணியக்கூடாது எனத் தடை விதித்திருந்தனர்.

இந்த அநீதிகளே இந்து மதத்தி லிருந்து கிறித்தவ மதத்துக்கு மாற மக்களைத் தூண்டியது. அரசமைப்புச் சட்டம் அமலான பிறகும் நிலைமை முழுமையாக மாறவில்லை.  தஞ்சையில் தோழர் என். வெங்கடாசலத்தின் கிராமத்தில், பட்டியலின இளைஞர் செருப்பணிந்து சைக்கிளில் சென்றதற்காக ஆதிக்க ஜாதியினர் தாக்கியிருக்கின்றனர். தோழர் வெங்கடாசலம், அவ ரைச் செருப்பணிய வைத்து, சைக்கிளில் அழைத்துச் சென்று சவால் விடுத்த நிகழ்வு, 1970- களில்கூட தெருவில் நடப்பதற்கான உரிமை போராட வேண்டிய ஒன்றாகவே இருந்ததைக் காட்டுகிறது. இன்றும் கூட அத்தகைய கொடுமை நீடிக்கிறது. அரச மைப்புச் சட்டத்தின் 15-ஆவது பிரிவும், தீண்டாமைக் கொடுமைக்கு எதிரான சட்டமும் இருந்தும் இந்த நிலை தொடர்கிறது.

  1. கோவில் நுழைவுப் போராட்டமும்
    சட்ட வரலாறும்

மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள் சென்றதற்காகவும், திருச்சுழியில் உள்ள கோயிலுக்குள் சென்றதற்காகவும் மக்கள் தண்டிக்கப்பட்டி ருக்கிறார்கள். குறிப்பாக, திருச்சுழியில் குற்றவியல் நீதிமன்றத்தின் நடவடிக்கையைத் தவிர்க்க, பத்து நாடார்கள் ‘தீட்டு கழிப்பதற்காக’ அர்ச்சகருக்கு இரண்டு லட்சம் ரூபாய் கொடுத்த சம்பவம் நடந்துள்ளது. 1893-இல் சிகாகோ சென்ற சுவாமி விவேகானந்த ருக்கு நிதி உதவி செய்த இராமநாதபுரம் ராஜா பாஸ்கர சேதுபதி, தன் கட்டுப்பாட்டில் இருந்த கமுதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்குள் நாடார்கள் நுழைய அனுமதிக்கவில்லை.

அதற்காகவே அக்கோயிலின் மேற்கு வாசல் அடைக்கப்பட்டு சுவர் எழுப்பப் பட்டது. பாஸ்கர சேதுபதி, மதுரை சிவில் கோர்ட்டுக்குச் சென்று நாடார்கள் உள்ளே வரக்கூடாது என உத்தரவு பெற்றார். அந்தத் தீர்ப்பில் நீதிமன்றம் ‘தீட்டுக் கழிப்பதற்காக’ 500 ரூபாய் கொடுக்கவும் உத்தர விட்டது. உயர்நீதிமன்றம், லண்டன் பிரிவி கவுன்சில் என எல்லா இடத்திலும் இத்தீர்ப்பு உறுதிப்படுத்தப் பட்டது (1899). நாடார்களை ஏன் அனுமதிப்பதில்லை என்று நீதி மன்றத்தில் கேட்டபோது, “அவர்கள் கள் இறக்கும் தொழில் செய்கிறார்கள்; அதனால் உள்ளே அனும திக்காத பழக்கம் (Custom, Usage, Practice) இங்கே இருக்கிறது” என்று கூறினார்கள். மேலும், அந்தத் தீர்ப்பில் மனுதர்மத்தின்படி சூத்திரர்களுக்கும் கீழே நாடார்கள், மீனவர்கள், குறவர்கள், தொம்பர்கள் போன்ற பிரிவினர் இருப்பதாகக் குறிப்பிடப் பட்டுள்ளது. சிவகாசி படுகொலை: மிக முக்கியமாக, 6.6.1899-இல் சிவகாசியில் கோயிலுக்குள் செல்ல முயன்ற 27 நாடார்கள் கொல்லப்பட்டார்கள்; 700 வீடுகள் தீக்கிரை யாக்கப்பட்டன; 7 பேர் தூக்கிலிடப்பட்டனர். இத்தகைய பெரும் கொடுமைகள்; அதை எதிர்த்த நீண்ட போராட்டங்களுக்குப் பின்னர்தான், 1939 மற்றும் 1947 ஆம் ஆண்டு கோயில் நுழைவுச் சட்டங்கள் வந்தன. இவை இரண்டும் அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 25(2)(பி)-யின் கீழ் வருகின்றன. காந்திக்கே தடை : 1927-இல் காந்தியார் கன்னியாகுமரி கோவிலுக்குள் ‘வைசியர்’ என்பதாலும், கடல்  கடந்து சென்றவர் என்பதாலும் அனுமதிக்கப் படவில்லை. 1934-இல் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பட்டியலினத்தவரும், நாடார்களும் அனும திக்கப்படாததால், தானும் நுழைய மறுத்தார் காந்தியார்.

1936 திருவிதாங்கூர் பிரகடனத்துக்குப் பின்னரே அவர் 1937-இல் கன்னியாகுமரிக்குள் சென்றார். சிறீ வெங்கடரமண தேவர் வழக்கு: 1947 சட்டம் வந்த பிறகும், கோயில் நுழைவு தொடர்பாகப் பல வழக்குகள் உச்சநீதிமன்றம் வரை நடந்தன. அதில்,  கவுட சரஸ்வத பிராமணர்கள் நிர்வகித்த கோயில் தொடர்பாக நடந்த சிறீவெங்கட ரமண தேவர் வழக்கில்,  அய்ந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, “அரசமைப்புச் சட்டப் பிரிவு 26(பி) (தங்கள் மத விவகாரங்களை நிர்வ கிக்கும் உரிமை) ஆனது, பிரிவு 25(2)(பி)-க்குக் கீழ்ப்பட்டதுதான்” என்று வழங்கிய தீர்ப்பு மிக முக்கியமானதாகும். இன்றும், வேங்கைவயல் சம்பவம், விழுப்புரம் மேல்பாதி போன்ற இடங்களில் தீண்டாமைச் சுவர்கள் தகர்க் கப்பட்ட பிறகும், முத்தாலம்மன் கோயிலில் நுழைய  நீதிமன்றம் அனுமதி அளித்தாலும் பொங்கல் வைக்க அனுமதிக்க மறுப்பது எனப் பிரச்சினைகள் தொடர்கின்றன. விசிக நாடாளுமன்ற உறுப்பினர் ரவி குமார், விழுப்புரத்தில் மட்டும் 300 கோயில்களில் அனுமதி மறுக்கப்படுவதாகச் சொல்கிறார். அமைச் சர் சேகர்பாபு தமிழ்நாடு முழுவதும் 53 கோயில்களில் அனுமதி இல்லை என்கிறார். அரசமைப்புச் சட்டம்
17-ஆவது பிரிவு இருந்தபோதிலும், வேறு பல வடி வங்களில் இந்தப் பிரச்சனைகள் தொடர்கின்றன.

  1. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் சட்டம்: தொடரும் சவால்கள்

1970 சட்ட திருத்தம் (கலைஞர் ஆட்சியில்): வாரிசு ரிமை (Hereditary appointment) நியமனத்தை மட்டுமே தடை செய்தது. இது உச்சநீதிமன்றத்தில் (சேஷம்மாள் வழக்கு) எதிர்க்கப்பட்டு, ஆகமத்தின் படியான ஜாதிக்குள்தான் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்கிற நடைமுறைக்கு (custom, practice or usage) எவ்வித பாதிப்பும் இல்லை என்று ஆகம விதிகள் காப்பாற்றப்பட்டன. 2006 அவசரச் சட்டம் (கலைஞர் காலத்தில்): “தகுதி இருந்தால் அனைத்து சாதியினரும் அர்ச்சகரா கலாம்” என அரசாணை எண் 118-அய் வெளியிட்டு, பயிற்சி நிலையங்களும் உருவாக்கப்பட்டது. சட்ட மன்றம் கூடாததால் அவசரச் சட்டம் இயற்றப்பட்டது. இதுவும் உடனடியாக உச்சநீதிமன்றத்தில் (பராசரன் ஆஜராகி) தடை பெறப்பட்டது. அவசரச் சட்டத்தின் ஆயுட்காலம் முடிந்து அது காலாவதியானது. அதன் விளைவாக, இதுவரை அதற்கான சட்டம் போடப்பட வில்லை. 2022-ஆம் ஆண்டு தீர்ப்பு: தற்போது முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் ஆட்சிக் காலத்தில் பார்ப்பனரல்லாதோர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டதை எதிர்த்து 25  வழக்குகள் தொடரப்பட்டன. இதை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பண்டாரி தலைமை யிலான அமர்வு, கோயில்களை ‘ஆகமக் கோயில்கள்’, ‘ஆகமம் இல்லாத கோயில்கள்’ என இரண்டாகப் பிரித்து தீர்ப்பளித்தது. ஆகமம் இல்லாத கோவிலில் யாரை வேண்டுமானாலும் நியமிக்கலாம் என்றும், ஆகமக் கோவிலில் அவ்வாறு செய்யக்கூடாது என்றும் தீர்ப்பளித்தது. நீதிபதி ராஜுவின் முக்கியத்துவம்: ஆகமக் கோயில்களை வரையறுக்கும் குழுவுக்கு நீதிபதி ராஜூவை அரசு பரிந்துரைத்தபோது, ஸநாதனிகள் அதை ஏற்க மறுத்தனர். ஏனெனில், கேரளாவில் நடந்த ஆதித்யன் வழக்கில், பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரை அர்ச்சகராக நியமித்ததை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில், “இதுவரை பழக்கம் இல்லை என்ற காரணத்தைச் சொல்லி (custom, usage) மறுக்க முடியாது; படித்திருந்தால் தகுதி உண்டு” என்று முதன்முதலாகத் தீர்ப்பளித்தவர் நீதியரசர் ராஜூதான். அவரைப் போன்றவர்களை நிராகரித்து, சனாதன வாதிகளின் ஆதிக்கம் நிறைந்த ஓர் ஆய்வுக் குழுவை அமைக்கும் நிலை உருவாகியுள்ளது.

1950-இல் அரசமைப்புச் சட்டம் நிறைவேற்றப் பட்ட போது, ஆர்.எஸ்.எஸ். இதழான ஆர்கனைசர்-இல் நீதிபதி சங்கர சுப்பு அய்யர், “டாக்டர் அம்பேத்கர் மனுவின் நாட்கள் முடிவடைந்துவிட்டன’’ என்று கூறியுள்ளபோதிலும்,  ஒவ்வொரு நாளும் நாம் மேற் கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளும் மனுஸ்மிருதியில் கூறப்பட்டுள்ள நியதிகளுக்கு உட்பட்டுத் தான் நடந்துகொண்டிருக்கின்றன. பெண்கள் குறித்தும், தலித்துகள் குறித்தும் அதில் என்ன கூறப் பட்டிருக்கிறது என்பது தொலைதூரக் கிராமங்களில் வாழும் ஒருவருக்குக்கூட நன்கு தெரியும்,” என்று எழுதினார். இப்படிச் சொன்னவர்களின் சிந்தனையே இன்று ஆட்சியிலும் இருப்பதால், இத்தகைய அநீதிகள் தீவிரமாகத் தொடர்கின்றன. 1947-இல் கோயில் நுழைவு வெற்றியைப் பெற்றதைப்போல, இன்று அனைவருக்கும் அர்ச்சகராவதற்கான உரிமையைப் பெற ஒரு புதிய சட்டமே அவசரத் தேவையாகும்.

 தொகுப்பு : ச.வீரமணி

நன்றி: ‘தீக்கதிர்’ – 13.12.2025

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *