திருவனந்தபுரம், டிச. 14– கேரள உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளது. மொத்தம் உள்ள 6 மாநகராட்சிகளில் காங்கிரஸ் கூட்டணி 3 மாநகராட்சிகளைக் கைப்பற்றியது. திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜக கூட்டணி முதல்முறையாக கைப்பற்றி உள்ளது.
கேரளாவில் 6 மாநகராட்சிகள், 87 நகராட்சிகள், 941 கிராம ஊராட்சிகள், 152 ஊராட்சி ஒன்றி யங்கள், 14 மாவட்ட ஊராட்சிகள் உள்ளன. அந்த மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக 1,200 உள்ளாட்சி அமைப்புகளும், அவற்றில் 23,612 வார்டுகளும் உள்ளன. இதில் 1,199 உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 9, 10 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. நிர்வாக காரணங்களால், மட்டனூர் நகராட்சிக்கு மட்டும் 2027 செப்டம் பரில் தேர்தல் நடத்தப்பட உள்ளது.
இந்நிலையில், நேற்று (13.12.2025) வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஆரம்பம் முதலே காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய ஜனநாயக முன்னணி(யுடிஎஃப்) அதிக உள்ளாட்சி அமைப்புகளில் முன்னிலையில் இருந்தது. ஆளும் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணிக்கு (எல்டிஎஃப்) பெரும் பின்னடைவு ஏற்பட்டது.
கேரளாவில் திருவனந்தபுரம், கொல்லம், கொச்சி, திருச்சூர், கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய 6 மாநகராட்சிகள் உள்ளன. இதில் கொச்சி, திருச்சூர், கண்ணூர் மாநகராட்சிகள் காங்கிரஸ் கூட்டணி வசமாகியுள்ளன. திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜக கூட்டணிமுதல்முறையாக கைப்பற்றியுள்ளது. கொல்லம், கோழிக்கோடு மாநகராட்சிகளில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் இழுபறி நீடிக்கிறது. மொத்தம் உள்ள 14 மாவட்ட ஊராட்சிகளில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கூட்டணிகள் தலா 7 மாவட்ட ஊராட்சிகளை கைப் பற்றியுள்ளன. 86 நகராட்சிகளில் காங்கிரஸ் கூட்டணி 54, மார்க் சிஸ்ட் கூட்டணி 28 நகராட்சிகளை கைப்பற்றின. 152 ஊராட்சி ஒன்றி யங்களில் காங்கிரஸ் கூட்டணி 79, மார்க்சிஸ்ட் கூட்டணி 63-அய் பெற்றுள்ளன.
மொத்தம் உள்ள 941 ஊராட்சி களில் காங்கிரஸ் கூட்டணி 504, மார்க்சிஸ்ட் கூட்டணி 341 ஊராட்சிகளில் வெற்றி பெற்றன. ஒரு நகராட்சி, 10 ஊராட்சி ஒன்றியங்கள், 64 ஊராட்சிகளில் இழுபறி நிலை காணப்படுகிறது. அரசியல் நோக்கர்கள் கூறும்போது, ‘‘அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கேரள சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு முன் னோட்டமாக உள்ளாட்சித் தேர்தல் கருதப்படுகிறது. இந்த தேர்தல் காங்கிரஸ் கூட்டணிக்கு ஊக்கம் தருவதாக உள்ளது.
மார்க்சிஸ்ட் கூட்டணிக்கு மிகப்பெரிய எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
