டாக்டர் மே.து.ராசுகுமார்
தமிழின் பெருமையைப் பேசுவதின் வழியாகத் தமிழ்ப் பண்பாட்டினைச் ஸநாதனச் சகதிக்குள் மூழ்கடிக்கும் முயற்சியைப் பா.ஜ.க.வினர் தொடங்கி யிருக்கின்றனர். கடந்த மூன்று ஆண்டு களாகக் காசித் தமிழ்க் கூடல் தமிழ் மொழிக்கு எத்தகைய பெருமையையும் மேன்மையையும் கொண்டுவந்ததாகத் தெரியவில்லை.
முருக மாநாடு போல, ஸநாதனிகள் பலரை அரசின் செலவில் காசிக்குச் சுற்று லாப் பயணமாக அழைத்துச் சென்றனர். வேறு ஆக்கப் பணிகள் நடைபெற்றதாகத் தெரியவில்லை.
இந்த ஆண்டு காசித் தமிழ்க் கூடலின் கருப்பொருளாகத் ‘தமிழ கற்கலாம், தமிழ் கற்போம்’ என்பது முன்னி லைப்படுத்தப்படுகிறது.
அய்ம்பது ஆசிரியர்கள், இரண்டு ஒருங்கிணைப்பாளர்கள் இணைந்து, உ.பி. மாநிலத்தில் உள்ள 50 அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சார்ந்த 1500 மாணவர்களுக்கு 15 நாள்கள் தமிழ் கற்பிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
செம்மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவனம் வழியாகத் தமிழ் கற்பிக்க ஆசிரியர்கள் பயிற்சி பெற்றிருக்கின்றனர். 15 நாள்களில் முன்பின் தெரியாத ஒரு மொழியினை முழுமையாகக் கற்றுக்கொள்ள முடியும் என்று எதிர்பார்ப்பது வியப்புதான்.
மாறாக, காசியில் அமைந்துள்ள பாரதி நினைவுத் தமிழ் சங்கத்துக்கு உரிய ஆசிரியர்களையும் பணியாளர்களையும் இதுவரை அமர்த்தவில்லை.
உ.பி. உள்ளிட்ட வட மாநிலப் பள்ளி களில் நடைமுறையில் இருந்த தமிழ்ப் படிப்புகள் உரிய ஆசிரியர்கள் இல்லாமல் நிறுத்தப்பட்டுவிட்டன.
வடமாநிலப் பல்கலைக்கழகங்களில் தமிழ்த் துறைகள் அல்லது இருக்கைகளை ஏற்படுத்த ஒன்றிய அரசு எத்தகைய முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை.
15 நாளில் தமிழாம்!
பள்ளி அல்லது கல்லூரிகளில் தமிழைப் பயிற்றுவிக்காமல், தமிழ்ப் பாடங்களை ஏற்பாடு செய்யாமல், 15 நாள்களுக்குள் தமிழைக் கற்றுத் தந்துவிடுவோம் என்ற போர்வையில் தமிழை அறிமுகப்படுத்த முனைவது எத்தகைய பயனையும் விளைவிக்கப் போவதில்லை.
15 நாள் பயிற்சிக்குப் பின்னர், தொடர்ந்து அந்த மாணவர்கள் தமிழைக் கற்க வாய்ப்புகள் வழங்காமல், பெயருக்குத் தமிழை அறிமுகப்படுத்துவது ஏமாற்று வேலையாகவே அமைகிறது.
உ.பி. அரசு, ஒன்றிய அரசின் கல்வி உள்ளிட்ட துறைகள், முழுக்க முழுக்க ஸநாதனிகளின் கூடாரமாகவே செயல்பட்டுவரும் செம்மொழித் தமி ழாய்வு நடுவண் நிறுவனம் போன்றன மட்டுமே காசித் தமிழ்க் கூடலில் பங்கெடுத்து வருகின்றன.
தமிழ்ப் பல்கலைக்கழகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை போன்ற தமிழ் மண் தொடர்பான அமைப்புகள் காசித் தமிழ்க் கூடலுக்கு அழைக்கப்பட்டதாகவோ, பங்களிப்புச் செய்ததாகவோ தெரியவில்லை.
தமிழர் பெருமை –
பிரிவினைவாதம் அல்ல
பிரிவினைவாதம் அல்ல
தமிழ்நாட்டு முதலமைச்சரை மடல் எழுதி அழைத்துள்ளதாகக் கூறும் ஒன்றிய அமைச்சர், அவருடைய வரவினை எதிர்பார்ப்பதாகக் கூறியிருக்கிறார்.
தமிழ்நாடு அரசின் பங்களிப்பு இல்லா மல், தமிழ் மொழியின் ஆய்வாளர்களை முன்னிறுத்தாமல் தமிழரின் பெருமையை முன்னெடுக்காமல் ஸநாதனிகளின் ஏற்பாட்டில் நடைபெறும் நிகழ்வுகளில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் கலந்து கொள்ளாதது வியப்பில்லைதான். பா.ஜ.க.வினர் அல்லது ஸநாதனிகளின் செயல்களுக்கு முதலமைச்சரின் பங்கேற்புத் துணை போவதாகவே அமைந்துவிடும்.
தமிழ்நாட்டிலிருந்து அழைத்துச் செல்லப்படுவோர் 15 நாள்களும் வாரணாசி, பிரயாக்ராச், அயோத்தி போன்ற வழிபாட்டு இடங்கள் வழியாகப் பயணம் செய்வர் என்பதே இந்தக் கூடல், தமிழ் மொழி மற்றும் தமிழர் தொடர்பானதல்ல என்பதையும் சமயச் சுற்றுலா என்பதையும் உறுதி செய்துவிடுகிறது.
இங்கு மற்றொன்றையும் மறந்து விடக்கூடாது. ஒன்றியத்தின் துணைக் குடியரசுத் தலைவர், பிரதமர், ஒன்றிய அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவரும் தங்களது உரைகளில் மொழிப் பிரிவினை குறித்துப் பேசியிருப்பது, அவர்களது நோக்கமே தமிழர் பெருமை பேசுவது பிரிவினையாகப் பார்க்கப்படுவதையும் காட்டிவிடுகிறது.
தமிழின் பெருமையைப் பேசு வதும் தமிழ்ப் பண்பாட்டினை முன்னி றுத்துவதும் பிரிவினைச் செயலாகவே அவர்களுடைய கண்களுக்குத் தெரிகிறது.
அதன் வழியாக ஹிந்தி அல்லது சமஸ்கி ருத மொழிகளுக்கு மேலாகத் தமிழர்களின் பெருமை பேசப்படுவதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடிய வில்லை. ‘சமஸ்கிருதம் செத்த மொழி’ என்று தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் பேசியதைக் கண்டிக்காத பா.ஜ.க. தலைவர்களே இல்லை என்று கூறிவிட முடியும். சமஸ்கிருதத்தின் பெருமையுடன், இந்திய இனங்களை ஒன்றிணைக்கும் ஆற்றலாகச் சமஸ்கிருதம் விளங்குவதாக வெளிப்படையாகவே பா.ஜ.க.வினர் புலம்பத் தொடங்கினர்.
நீசபாைச என்று சொன்ன சங்கராச்சாரியார் எதிர்த்தார்களா?
ஆனால், தமிழ் ‘நீச பாசை’ என்று காஞ்சிபுரத்தின் மிகப்பெரியவர் என்று கருதப்பட்ட சங்கராச்சாரியார் பல்லாண்டுகளுக்கு முன்னரே எழுதி யிருப்பதை மறுக்கும் மனம் பா.ஜ.க.வினர் எவருக்கும் வரவில்லை. அந்தக் கூற்றைத் திரும்பப் பெறவேண்டும் என்று எந்த ஸநாதனிகளும் அறிக்கை விடவில்லை.
மற்ற மாநிலங்களை விட்டுவிடுவோம். தமிழ்நாட்டில் உள்ள கேந்திரியா, நவோ தயா போன்ற ஒன்றிய அரசுப் பள்ளிகளில் தமிழாசிரியர்கள் இப்பொழுது வரை பணியமர்த்தப்படவில்லை.
மும்மொழித் திட்டத்தை முன்மொழி யும் ஒன்றிய அரசின் கல்விக் கொள்கை களின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாட்டில் ஹிந்தி, அதாவது சமஸ்கிருதம் கற்பிக்கப்பட வேண்டும் என்று கூறி தமிழ்நாட்டுக்குச் சேரவேண்டிய நிதி உதவிகளை நிறுத்தி வைத்திருக்கிறது ஒன்றிய அரசு.
ஆனால், தமிழ் பண்டைய மொழி என்று பெருமை பேசும் பிரதமர், வட நாட்டுப் பள்ளிகளில் மும்மொழிக் கல்வியின் ஒரு பகுதியாகத் தமிழினை அறிமுகப்படுத்த முற்படவில்லை.
சமஸ்கிருதத்துக்கு ஆயிரக்கணக்கான கோடிகளை அள்ளித் தரும் பா.ஜ.க.வின் ஒன்றிய அரசு, தமிழுக்குச் சிறப்பாக எதை யும் தந்துவிடவில்லை.
கடந்த ஆண்டு காசித் தமிழ்க் கூடலில் அப்போதைய பா.ச.க.வின் தமிழ் மாநிலத் தலைவர் அண்ணாமலை போன்றோர் மேடையில் இருந்தனர். இப்போது தமிழ்நாடு ஆளுநர், புதுச்சேரித் துணை நிலை ஆளுநர் போன்றோர் மேடையில் வீற்றிருந்தனர். பா.ஜ.க.வுடன் இணைந்து கூட்டணி அரசு அமைத்திருக்கின்ற புதுச்சேரி முதலமைச்சர்கூட அழைக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற முழக்கத்தினைப் பிரதமர் எடுத்திருக்கிறார். இதில் மட்டுமே தமிழின் பெருமை பற்றி மோடி பேசுவது ஏமாற்று என்பது புலனாகி விடுகிறது.
பிரதமர் மட்டும் இல்லாமல், பா.ஜ.க.வினர் உள்ளிட்ட அனைத்துச் ஸநாதனிகளும் ஒரே மொழி, ஒரே சமயம், ஒரே இனம், ஒரே நாடு என்பதை வலியுறுத்துவோராகவே இருப்பது புலனாகிவிடுகிறது.
தமிழ்ப் பரப்பு அவை ஏன் இல்லை?
தமிழ் மொழியின் பரவலில் உண்மை யான ஆர்வம் இருந்தால், பிற மொழி பேசுகின்ற மக்கள் தமிழைப் பயில வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், சென்னையில் செயல்பட்டு வரும் ‘இந்திப் பரப்பு அவை’ போன்று வடமாநிலங்களில் தமிழ்ப் பரப்பு அவைகளை அமைத்திருக்க முடியும். பல கட்டங்களாக இந்தியைப் பயிற்றுவித்துச் சான்றிதழ்கள் வழங்கும் இந்திப் பரப்பு அவையின் பணிகளை எடுத்துக்காட்டாகக் கொண்டு, தமிழின் பரவலுக்கும் முயற்சிகளை மேற்கொள்ள முடியும்.
மாறாக, 15 நாள்களில் தமிழ் கற்போம் என்பது நடைமுறைக்கு ஒவ்வாதது என்பது மட்டுமல்ல, தமிழ்நாட்டு மக்க ளையும் உ.பி. மக்களையும் ஒன்று சேர்ந்து ஏமாற்றுவதாகும்.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் வரவுள்ளது. இதனை மனதில் கொண்டு பா.ச.க.வினர் நடத்தும் மற்றொரு நாடகம்தான் காசித் தமிழ்க் கூடல் என்பதாகும்.
திருக்குறள் கருத்தரங்கம் எனும் ஏமாற்று வித்தை!
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது தமிழர்களின் வாக்குகளைப் பெற, டில்லித் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில், சவகர்லால் நேரு பல்கலைக்கழகத் தமிழ்த் துறையின் ஒத்துழைப்புடன் ‘திருக்குறள் கருத்தரங்கம்’ நடத்தப் போவதாக அறிவித்தார்கள். தமிழ்நாட்டில் உள்ள பெரும் ஆய்வாளர்கள் ஆய்வுக் கட்டுரைகளை வழங்கினர். தேர்தல் முடிந்தவுடன் திருக்குறள் கருத்தரங்கு நடைபெறவில்லை. இப்போது சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி மீண்டும் கருத்தரங்கம் நடத்தப்படலாம்.
இங்கு மற்றொன்றையும் தெளிவு படுத்திக்கொள்ளவேண்டும். தமிழ்நாட்டு மக்கள் காசிக்குச் சமயப் பயணம் மேற்கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்ததாகவும், வடநாட்டு மக்கள் தமிழகத்தின் தென்கோடியில் இருக்கின்ற ராமேசுவரத்துக்கு வந்துசென்றனர் என்றும் கூறப்படுகிறது.
இதனை வைத்துக்கொண்டு, தமிழ்நாட்டிற்கும் வட மாநிலங்களுக்கும் இடையே நெருங்கிய பண்பாட்டுத் தொடர்புகள் இருந்ததாகக் கற்பிக்கப்படு கிறது. உண்மையில், தமிழ் இன மக்கள் எவரும் காசிக்குச் செல்வதையோ அதை ஒரு நற்செயலாகக் கருதுவதையோ நம்பியிருக்கவில்லை.
காசி – ராமேசுவரம் ஸநாதனிகளுக்கு மட்டும்!
ஒரு வகையில் சொல்லவேண்டும் என்றால், ஸநாதனிகள் மட்டுமே காசிக்குச் செல்வதையும் அங்குள்ள ஸநாதனிகள் ராமேசுவரத்திற்கு வருவதையும் வழக்க மாகக் கொண்டிருந்தனர். உடைமைப் பிரிவினராகிய மிகச் சிலர் காசிக்குச் சென்று வந்திருக்கலாம். அதுபோல உடைமைப் பிரிவினர் சிலர் வடநாட்டிலிருந்து ராமேசுவரத்திற்கு வந்திருக்கலாம்.
இவற்றைத் தவிர தமிழ் மக்களுக்கும் காசிக்கும் வேறு தொடர்பு இருப்பதாக தெரியவில்லை.
அதுபோலவே வட மாநிலங்களில் இருக்கின்ற உழைக்கும் மக்களுக்கும் ராமேசுவரத்திற்கும் ஒரு சமயத் தொடர்பு இருந்ததாக அறியக் கிடைக்கவில்லை.
பண்பாட்டு ஒற்றுமை அல்லது பண்பாட்டு ஒருமை என்பதைக் கட்டமைப்பதற்காக ஸநாதனிகள் கூறுகின்ற இந்தப் பொய்களை நாம் நம்பவேண்டியதில்லை.
தமிழ் இனத்தின் பெருமையை மறுப்பதற்காகவே காசித் தமிழ்க் கூடல் நடத்தப்படுகிறது என்பதைத்தான் தமிழர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
நன்றி: ‘ஜனசக்தி’, 07.12.2025
