இப்போது சொல்லுங்கள், கடவுள் பெரிதா? அறிவு பெரிதா? – அறிவுதான் பெரிது!
வல்லம், மே. 3- பெரியார் பிஞ்சு பழகு முகாம் முதல் நாளில் கவிஞர் கலி.பூங்குன்றன், ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் வகுப்புகளோடு சேர்த்து பிஞ்சுகளின் அறிமுக நிகழ்ச்சியும், சிரிப்பும், கலகலப்புமாக நடைபெற்றது.
மின்சாரமும்! விடுதலை மின்சாரமும்!
பெரியார் பிஞ்சு பழகு முகாம் 1993ஆம் ஆண்டு பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் 50 குழந்தைகளுடன் 10 நாள் முகாமாகத் தொடங்கப்பட்டது. இடையில் தவிர்க்க முடியாத காரணங்களால் நின்றுபோனது. பின்னர் 2010ஆம் ஆண்டு முதல் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்ட பிஞ்சுகள் பின்னர் இதே பல்கலைக் கழகத்தில் பயின்று உலகில் பல்வேறு பகுதிகளில் சிறப்பான வாய்ப்புகளைப் பெற்றவர்களாக இருக்கின்றனர். அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் அதே பல்கலைக்கழகத்தில் நேற்று (2.5.2023) பழகு முகாம் தொடங்கப்பட்டது.
தொடக்க விழாவில் ஒரு சுவையான நிகழ்ச்சி, வகுப்புப் பட்டியலில் இல்லாத, பிஞ்சுகள் எதிர்பாராத ஒரு திடீர் வகுப்பு நடைபெற்றது. அதாவது தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, மின்சாரம் நின்று போனது. உடனடியாக நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மின்சாரம் பற்றிய கேள்வி, பதில் வகுப்பாக; அனைவரும் பங்கேற்கும் படியாக அதை மாற்றிக் கொண்டார். பிஞ்சுகள் மிகுந்த உற்சாகத்துடன் மின்சாரம் என்னென்ன வகை? எதில் எதில் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது? அதைக் கண்டுபிடித்தது யார்? அதை மேம்படுத்தியது யார்? என்பன போன்ற கேள்விகளும், அதற்கான பதில்களுமாக வகுப்பு நேரம் போனது தெரியாமல் கடந்தது. கவின்மலர், இனியவன் தமிழ், சிறீசரண், சீனிவாசன், தண்மதி, அறிவுக்கரசு, ஆனந்தபிரபாகரன், வெற்றி சித்தார்த் தன், அகரா, கயல்விழி, வெ.யாழினி ஆகியோர் அதிகம் பங்கேற்று கலக்கினர். அதில் உச்சபட்சமாக ‘விடுதலை’யின் மின்சாரமும் ஒரு கேள்வியாக வந்து, அதற்கு சாதாரண மின்சாரம் தொட்டத்தால்தான் ஷாக் அடிக்கும்! இந்த மின்சாரம் படித்தாலே போதும் ஷாக் அடிக்கும் என்று போனது அந்த வகுப்பு. பிறகு மின்சாரம் வந்துவிட, அடடே.. என்று எண்ண வைத்தது.
கடவுள் பெரிதா? அறிவு பெரிதா?
தொடர்ந்து கவிஞர் தாத்தாவின் வகுப்பு தொடங்கியது. தொடக்கமே மிகவும் சுவையான ஒரு கேள்வியோடு கவிஞர் வகுப்பைத் தொடங்கினார். ‘நாம் இருக்கும் இந்த அரங்கத்திற்கு என்ன பெயர்?’ என்று கேட்டு, ’அய்ன்ஸ்டீன் அரங்கம் என்று ஏன் பெயர் வைத்திருக்கிறார்கள்?’ என்ற கேள்வியை கேட்ட தோடு, ’பதில் இப்போது சொல்ல வேண்டியதில்லை. நான் கேட்கும் போது சொன்னால் போதும்’ என்று பதிலுக்குத் தடை போட்டுவிட்டார். தொடர்ந்து, அம்மை நோய்கள் பற்றியும், கடந்த காலத்தில் அதுகுறித்த வரலாற்றுச் செய்திகளையும், தற்காலத்தில் மருத்துவ அறிவியல் காரணமாக மாறிய சூழலையும் சுட்டிக்காட்டி, ‘ நோய் என்பது கடவுள் மனித னுக்குக் கொடுத்த தண்டனை. அதை நீக்குவதற்கு நீ யார்?’ என்றிருந்த அச்சுறுத்தல்களையும் நினைவூட்டி, ‘கடவுள் பெரிதா? அறிவு பெரிதா?’ என்று கேட்டு, ‘அறிவுதான் பெரிது’ என்று ஒருமித்த பதிலைப் பெற்றார்.
அனைவரையும் ஈர்த்த தமிழ்ப்பெயர்கள்!
தேநீர் இடைவெளிக்குப் பிறகு, பிஞ்சுகளின் அறிமுக வகுப்பு தொடங்கியது.1993 இல் பழகுமுகாம் முதன்முதலில் தொடங்கப்பட்டபோது கலந்துகொண்ட அந்நாள் பழகுமுகாம் பங்கேற்பாளரும், இந்நாள் ஒருங்கிணைப்பாளருமான ச.பிரின்சு என்னாரெசு பெரியார் இந்த வகுப்பை ஒருங்கி ணைத்தார். இது மூலம் பல பிஞ்சுகளுக்கு தங்களின் பெயர் குறித்த நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டது. நல்ல தமிழில் பெயர் வைத்திருந்தவர்கள், தாங்களாகவே தங்களின் பெயருக்கான பொருளை மேடையில் விளக்கினர். சமஸ்கிருதத்தில் பெயர் உள்ளவர்கள் சிலரைத்தவிர மற்றவர்களால் தெரியவில்லை என்றுதான் சொல்ல முடிந்தது. பெற்றோர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள் என்று அவர்களுக்கு அறிவுறுத்தப் பட்டது.
ஒரே பெயரில் நான்கைந்து பேர்கள் இருந்ததால் அனை வரையும் மேடைக்கு வரவழைத்து, அவர்களை அறிமுகம் செய்துவைத்தார். இதில் பாதி பேர்தான் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். அவ்வளவுதான் நேரம் கிடைத்தது. இதில் ’அகரா’ ‘புவி ஆற்றல்’ என்ற பெயர்கள் குறிப்பிடத்தகுந்த தமிழ்ப்பெயர்கள்! மதிய உணவுக்குப் பிறகு சிறுவர்கள், சிறுமிகள் தனித்தனியாக நீச்சல் பயிற்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டு திரும்பிய பின்னர், பல்நோக்கு உள்விளை யாட்டரங்கிற்கு அழைத்து வரப்பட்டனர்.
அங்கே குப்பையிலிருந்து கலைப்பொருட்களை செய்யக் கற்றுக் கொள்ளும் வகுப்பு நடைபெற்றது. இதில் பழைய நாளிதழ்களைப் பயன்படுத்தி, கூடை செய்வது கற்றுக் கொடுக்கப்பட்டது. இந்த வகுப்பை ஒருங்கிணைத்த பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தில் மென்பொருளியியல் துறையின் ஆசிரியர் பர்வீன் பேகம் செய்முறையைக் கற்றுக்கொடுத்தார். மாலை பிஞ்சுகளுக்கு சிற்றுண்டியும், தேநீரும் வழங்கப்பட்டு சிறிது நேர விளையாட்டுகளுக்குப் பிறகு மீண்டும் அய்ன்ஸ்டீன் அரங்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு மீதி பாதி பிஞ்சுகளை அறிமுகம் செய்துவைக்கும் நிகழ்வை பிரின்சு, உடுமலை இருவரும் செய்து வைத்தனர்.
அதனால்தான் பெரியார் பகுத்தறிவோடு வாழச்சொன்னார்!
தொடர்ந்து கவிஞர் வகுப்பு நடைபெற்றது. தொடக்கத்தில் பிஞ்சுகளுக்கு மிகவும் பிடித்த கடி ஜோக்ஸ் சொல்லி அவர்களை உற்சாகப்படுத்தி பின்னர், ’பெரியார் என்று சொன்னால் என்ன நினைவுக்கு வருகிறது?’ என்று கேட்டார். ’பெண்விடுதலை’, ’மூடநம்பிக்கை ஒழிப்பு’ என்று அங் கொன்றும் இங்கொன்றுமாக பதில் வந்தது. பிற்கு கவிஞரே, ‘பெரியார் என்றால், கடவுள் இல்லை’ என்று சொன்னவர் என்றுதான் பலருக்கு நினைவுக்கு வருகிறது’ என்று தன் கேள்விக்கு தானே பதில் சொல்லிவிட்டு, கடவுள் மறுப்பு வாசகத்தைச் சொல்ல இயக்கத் தோழர்கள் பிள்ளைகள் கோரசாக அவருடனேயே சொல்லி அசத்தினர். பின்னர் கடவுள் மறுப்பு தத்துவ வரிகளை கொஞ்சமாக விளக்கிச் சொன்னார்.
தொடர்ந்து, ‘கடவுளை வைத்து பிழைப்பு நடத்துகின்றனர்’ என்றார். பிஞ்சுகள் வகுப்பில் நன்றாக கவனம் செய்கின்றனர் என்பதற்கு எடுத்துக்காட்டாக, ஆனந்த பிரபாகரன் என்ற சிறுவன், ’பெண் கடவுளுக்கு ஆண் பூசாரி தாலி கட்டுகிறார்’ வகுப்பின் கருத்துக்கேற்ப தனக்குத் தெரிந்த ஒரு தகவலைச் சொல்லி என கைதட்டல் பெற்றார். ஏன் கறுப்புச் சட்டை என்று ஒரு பெரியார் பிஞ்சு கேட்ட கேள்விக்கு கவிஞர் நிதானமாக பதில் சொல்லிவிட்டு, இதனால்தான் பெரியார் மூடநம்பிக்கைகள் கூடாது, பகுத்தறிவோடு வாழுங்கள் என்று சொன்னார்.’ என்று சொல்லி வகுப்பை நிறைவு செய்தார்.
கவிஞர் வகுப்பு தொடங்குவதற்கு முன்னதாக விஷ்ணு பாலாஜி, ஆரா ஆகியோருக்கு பிறந்த நாள் கொண்டாடப் பட்டது. கவிஞர் அறிவுமதி எழுதிய ‘நீண்ட நீண்ட காலம்’ என்ற பாடல் இசைக்கப்பட்டு இருவருக்கு கவிஞர் இனிப்பு ஊட்டிவிட்டார். இரண்டு பிஞ்சுகளும் கவிஞருக்கு இனிப்பை ஊட்டிவிட்டு, பிறந்தநாள் நாள் கொண்டாட்டத்தை பழகு முகாம் நினைவுகளில் ஒன்றாக மாற்றிவிட்டனர். இறுதியாக பெரியார் திரைப்படம் பாதி திரையிடப்பட்டது. இரவு உணவுக்குப்பிறகு படுக்கச்சென்றனர். வழக்கமாக முதல் நாளில் நான்கைந்து பிஞ்சுகள் அம்மா நினைவு, அப்பா நினைவு என்று கண்ணீர் சிந்தும். இந்த முகாம் அந்த வரலாற்றையும் உடைத்திருக்கிறது. ஒரேயொரு சிறுவன் மட்டும் அழுதான். அவனும் விரைவிலேயே சமாதானமாகி தூங்கச்சென்று விட்டான்.