வல்லம், டிச. 13- வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் நிறுவனர் நாள் விழாவிற்கு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
பல்திறன் போட்டிகள்
பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் நிறுவனத் தலைவரின் 93ஆவது பிறந்த நாள் விழா கொண்டாட்டங்களின் ஒரு நிகழ்வாக மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி மற்றும் கழிவுப் பொருட்களிலிருந்து கலைப் பொருட்கள் தயாரித்தல் போட்டி ஆகியவை நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் மாணவ, மாணவியர்கள் மிகவும் ஆர்வத்துடன் பங்கு பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
மரம் நடு விழா
நிறுவனர் நாள் விழாவை முன்னிட்டு பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் முதல்வர், துணைமுதல்வர், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட மரக்கன்றுகள் நடும் விழாவில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் கல்லூரி வளாகத்தில் நடவு செய்யப்பட்டன.
இலவச மருத்துவ முகாம்
நிறுவனர் நாள் விழாவை முன்னிட்டு 26.11.2025 முதல் 09.12.2025 வரை பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் A to Z மருத்துவமனையும் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாமில் பல்துறை மருத்துவர்கள் வாயிலாக குருதி பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை மற்றும் இசிஜி ஆகிய பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. 85 பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
நிறுவனர் நாள் கருத்தரங்கு
பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் நிறுவனத் தலைவர் அவர்களின் 93வது பிறந்த நாளை முன்னிட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கல்லூரி முதல்வர் கே.பி.வெள்ளியங்கிரி நிறுவனர் நாள் கருத்தரங்கில் தலைமையேற்று உரையாற்றும் போது தமிழர் தலைவரும், இக்கல்லூரி நிறுவனத் தலைவர் அவர்களின் தொண்டறத்துடன் கூடிய சமுதாயப் பணிகளை விரிவாக குறிப்பிட்டார். அவர் தந்தை பெரியாரின் மறைவுக்குப் பின் தமிழர்களின் வாழ்வுரிமையை காத்து நிற்கும் கேடயமாம் திராவிடர் கழகத்தை கொள்கை மாறாமல் தலைமை தாங்கி வழிநடத்தும் சுயமரியாதை வீரர்தான் தமிழர் தலைவர் என்று கூறினார்.
இக்கல்லூரியின் துணைமுதல்வர் முனைவர் க.ரோஜா விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போது நமது நிறுவனத் தலைவர் அவர்கள் நாம் அனைவரும் கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் அனுபவித்துக் கொண்டிருக்கும் 69 சதவிகித இட ஒதுக்கீட்டை இடைவிடாத முயற்சியாலும் போராட்டத்தாலும் அரசாங்கத்திடமிருந்து பெற்றுத் தந்தார் என்பதை குறிப்பிட்டார்.
மேலும் அவர் பேசுகையில் மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்ற அடிப்படையில் தமிழர்களின் வாழ்க்கை, மேம்பட சமுதாயப் பணியிலும் கல்விப் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தொண்டாற்றுபவர் நம் தமிழர் தலைவர் என்று கூறிய அவர் நமது நிறுவனத் தலைவர் தன் அயராத உழைப்பால் பெரியாரை உலக மயம் ஆக்குவதோடு உலகை பெரியார் மயமாக்குவோம் என்ற உயரிய நிந்தனையோடு அல்லும் பகலும் தளர்வில்லாமல் தொண்டாற்றி வருகின்றார் என்று குறிப்பிட்டார்.
இக் கல்லூரி முதன்மையர் ஜி.இராஜாராமன் தனது உரையில் நமது நிறுவனத்தலைவர் அவர்கள் வாழ்வியல் சிந்தனைகள் நாம் அனைவருக்கும் வாழ்க்கை கல்வியை போதித்து வருவதால் தமிழர் தலைவர் அவர்கள் அனைவராலும் ஆசிரியர் என்று பெருமையோடு அழைக்கப்படுகிறார். என்று குறிப்பிட்டார்.
இப்பாலிடெக்னிக் கணினித்துறை பேராசிரியர் ஏ.சாந்தி நம் கல்லூரி நிறுவனத் தலைவர் பற்றி அருமையான கவிதையை வாசித்தார். இக்கல்லூரியின் ஆங்கிலத் துறை பேராசிரியர் ஆர்.அய்யநாதன் தமிழர் தலைவரின் மூடநம்பிக்கை ஒழிப்பு பணிகள் பற்றி உரை நிகழ்த்தினார். இறுதியாக நன்றியுரையுடன் கருத்தரங்கு இனிதே நிறைவுற்றது.
