அனைத்து ஒடுக்கப்பட்ட சமூக மக்களையும், சிறுபான்மையினர் உள்பட இணைத்து, சமூகநீதிக்கான அறப்போரை, தொடர் போராட்டமாக நடத்துவோம்! 2026 ஆம் ஆண்டின் முக்கிய தீவிர வேலைத் திட்டம் இதுவே!

7 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி, சமூகநீதிக்கே முதலிடம், முன்னுரிமையாகும்! நீதித்துறையில், கடந்த 75 ஆண்டுகளாக சமூகநீதி வெறும் ‘கானல் நீராக’வே உள்ளது!

இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி, சமூகநீதிக்கே முதலிடம், முன்னுரிமையாகும். ஆனால், நீதித்துறையைப் பொறுத்தவரையில், கடந்த 75 ஆண்டுகளாக சமூகநீதி வெறும் ‘கானல் நீராக’வும் ஒடுக்கப்பட்ட பெரும்பான்மையினருக்கு இதுவரை உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் மறுக்கப்பட்டே வந்துள்ளது. 2026 ஆம் ஆண்டின் முக்கிய தீவிர வேலைத் திட்டமாக இதனை எடுத்துக்கொண்டு, அனைத்து ஒடுக்கப்பட்ட சமூக மக்களையும், சிறுபான்மையினர் உள்பட இணைத்து, ஒரு முக்கிய சமூக நீதிக்கான அறப்போரை, தொடர் போராட்டமாக நடத்துவோம்  என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

நாடாளுமன்றத்தின், மக்களவையில் தி.மு.க.  பொருளாளரான டி.ஆர்.பாலு அவர்கள் 11.12.2025 அன்று எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு, ஒன்றிய சமூக நலத்துறை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே  எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில், இந்திய அரசிய லமைப்புச் சட்டம் 124, 217, 224 பிரிவின்கீழ் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமிக்கப்படுவதாகவும், இதில் இட ஒதுக்கீடு முறை இல்லை எனவும் தெரிவித்துள்ளதோடு, கூடுதலாகத் தெரிவித்த தகவல்படி,

உயர்ஜாதி பிரிவினர் மட்டும்
76.45 சதவிகிதத்தினர்!

2018 முதல் 2025 நவம்பர்வரை 841 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 32 பேர் எஸ்.சி. (தாழ்த்தப்பட்டோர்) பிரிவினர், 17 பேர்  எஸ்.டி. (பழங்குடி யினர்) என்றும், ‘பொதுப் பிரிவினர்’ என்ற முகமூடி பெயரில், உயர்ஜாதி (பார்ப்பனர் மற்றும் முன்னேறிய ஜாதியினர் – Forward Community) பிரிவினர் மட்டும் 76.45 சதவிகிதத்தினர் ஆவர்.

எஸ்.சி.  பிரிவினர் 3.8 சதவிகிதம்

எஸ்.டி. பிரிவினர் 2 சதவிகிதம்

பிற்படுத்தப்பட்டோர் 12.2 சதவிகிதம் (103 பேர்)

சிறுபான்மையினர் 5.5 சதவிகிதம்

பெண்கள் (நீதிபதிகள்) 14 சதவிகிதம் என்று கூறியுள்ளார்.

நமது இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி, சமூக நீதிக்கே முதலிடம், முன்னுரிமையாகும்.

நீதித்துறையில் சமூகநீதி ‘கானல் நீராகவே’ உள்ளது!

முன்னுரிமை என்பது அச்சட்டத்தின் முகப்புரை (Preamble)யிலேயே வலியுறுத்தப்பட்டிருந்தும் கூட, நிர்வாகத் துறையில் (executive) உயர்ஜாதி, குறிப்பாக பார்ப்பனர்கள் மற்றும் முன்னேறிய ஜாதியினரின் அதிகார, ஆதிக்கச் சூழ்ச்சியில், அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகள் வெறும் ‘ஏட்டுச் சுரைக்காய்’ ஆக்கப்பட்டு, செயலற்றவைகளாக ஆக்கப்பட்டுள்ளதோடு, உச்ச நீதிமன்றத்  தீர்ப்புகள், உயர்ஜாதி நீதிபதிகளால் வியாக்கியானம் செய்யப்பட்டு, தடைக்கற்களை ஏற்படுத்தியதால், சமூகநீதி வெறும் ‘கானல் நீராக’ – நீதித்துறையைப் பொறுத்து, கடந்த 75 ஆண்டுகளாக, ஒடுக்கப்பட்ட பெரும்பான்மையினருக்கு இதுவரை உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் மறுக்கப்பட்டே வந்துள்ளது!

நீதித் துறையில் பார்ப்பன மயம் – காவி மயம் ஆக்கும் முயற்சிகளின் ஒரு முக்கிய நடவடிக்கையாக, தமிழ்நாட்டிலும் நீதித் துறையின் மூலமாக மறைமுகமாக காவி ஆட்சியை நடத்திட ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். ‍ – பா.ஜ.க. அரசு தீவிரமாக முயன்று வருவதை அண்மைக்காலச் செய்திகள் சொல்லுகின்றன.

முன்பே ஆதாரத்துடன் எடுத்துக் காட்டியுள்ளோம்!

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கெனவே அள வுக்கு மிக அதிகமாகப் பார்ப்பனர்களுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது என்பதுடன், ஒரே முறையில் நிறையப் பார்ப்பனர்கள் நீதிபதிகளாக்கப்பட்டால், அது பெரும் கவனத்திற்குரியதாகவும், எதிர்ப்புக்குரிய தாகவும் மாறும் என்பதால், நீதிபதிகள் நியமனத்திற்கான பட்டியலை இரண்டு, மூன்றாகப் பிரித்து ஒவ்வொரு முறையும் அதில் பார்ப்பனர்களை இணைக்கும் சூழ்ச்சி நடைபெற்று வருவதை முன்பே ஆதாரத்து டன் எடுத்துக் காட்டியதுடன், அதை எதிர்த்து ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியுள்ளோம். மக்கள் மன்றத்தில் எடுத்துக்காட்டி, நீதித் துறையில் சமூக நீதியின் அவசியத்தை முன்வைத்துள்ளோம். வழக்குரைஞர்களும், வழக்குரைஞர் சங்கங்களும் இதற்காகப் போராடியுள்ளனர் – போராட்டம் இன்னமும் தேவைப்படுகிறது!

ஆனாலும், இந் நிலை தொடர்ந்து வருகிறது. தற்போது  பார்ப்பனர்களை மட்டுமல்லாமல், ஆர்.எஸ்.எஸ்- பா.ஜ.க.வின் வழக்குரைஞர்களை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக்கும் வகையில் மூன்று கட்டமாகப் பட்டியல்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அந்தப் பட்டியலை எப்படியேனும் நீதிபதிகள் நியமனத்தில் இடம்பெறச் செய்துவிட பல பின்னணியுடன் நடை பெற்றுவருகின்றன என்றும் தொடர்ந்து செய்திகள் வருகின்றன.

அவசர அவசரமாக மாற்றுவது ஏன்?

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளைத் தேர்ந்தெ டுத்துப் பரிந்துரைப்பதற்கான குழுவில், மூத்த நீதிபதி கள் வரிசையில் மூன்றாவது இடத்தில் இருந்த நீதிபதி நிஷா பானு அவர்களும் இடம்பெற்றிருந்தார். ஆனால், அவர் திடீரென கேரள உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார். அங்கு அவருக்கு 8 ஆம் இடம் தான் கிடைக்கும். இங்கு மூன்றாம் இடத்தில் இருப்பவரை இன்னொரு உயர்நீதிமன்றத்திற்கு அவசர அவசரமாக மாற்றுவது ஏன்?

அவர், அந்த இட மாறுதலை ஏற்று, கேரள உயர்நீதி மன்ற நீதிபதியாக இன்னும் பொறுப்பேற்காத நிலையில், அவர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகவே தொடரு கிறார். ஆனால், அதற்கு முன்னதாகவே, மூன்றாம் இடத்தில் இருக்கும் அவருக்குப் பதிலாக, நான்காம் இடத்தில் இருக்கும் நீதிபதி திரு.எம்.எஸ்.ரமேஷ் அவர்களைப் பரிந்துரை குழுவில் சேர்த்து, அவரது ஒப்புதலுடன் மாவட்ட நீதிபதிகளிலிருந்து ஆறு பேரை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக்க பரிந்துரைப் பட்டியலை அனுப்பினார்கள்.

அந்தப் பட்டியல் குறித்து மாற்றுக் கருத்தைச் சொல்லாத தமிழ்நாடு அரசு,   கொலீஜியத்தில் இதுவரை இல்லாத நடைமுறை (மூன்றாம் இடத்தில் நீதிபதி நிஷா பானு இருக்கும்போது, நான்காமிடத்தில் உள்ள நீதிபதி திரு.எம்.எஸ்.ரமேஷ் அவர்களை பரிந்துரைக் குழுவில் இடம்பெறச் செய்தது) பின்பற்றப்பட்டு இருப்பதைச் சுட்டிக்காட்டி, அந்தப் பரிந்துரைப் பட்டியலுக்கு ஒப்புதல் அளிக்காமல், திருப்பி அனுப்பியது.

இது இந்திய நீதித்துறை வரலாற்றில் முதன் முறை என்று சொல்லப்படுகிறது.

ஆனால், அதற்குப் பின்பும், தமிழ்நாடு அரசு சுட்டிக்காட்டிய பிரச்சினை குறித்து எந்தவித பதிலையும் சொல்லாத சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் இடம்பெற்றுள்ள அதே கொலீஜியத்தைப் பயன்படுத்தி, வழக்குரைஞர்களிலிருந்து (பார்) 9 பேரை உயர்நீதிமன்ற நீதிபதிகளாகப் பரிந்துரைத்து, அடுத்த பட்டியலை அனுப்பியுள்ளது.

இதுகுறித்து நேற்றைய (12.12.2025) ‘இந்து’ ஏட்டில்,  சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி எழுதியுள்ள கட்டுரையிலும் இப்பிரச்சினையை சுட்டிக்காட்டி கேள்வி கேட்டுள்ளார்.

அவசர கொலீஜிய மாற்றம் ஏன்?

இட மாறுதலை ஏற்றுக்கொண்டு நீதிபதி நிஷா பானு அவர்கள், கேரள உயர்நீதிமன்றத்திற்குச் செல்லும் முன்பே, ஏன் இந்த அவசர  கொலீஜிய மாற்றம் என்ற கேள்வி எழுவது இயல்பானதே!

நீதிபதி திரு.எம்.எஸ்.ரமேஷ் அவர்கள், இம்மாதம் ஓய்வு பெறக்கூடியவர். அவர் ஓய்வு பெற்றுவிட்டால், அடுத்த இடத்தில் (அய்ந்தாவது) இருக்கும் நீதிபதி திரு.எஸ்.எம்.சுப்பிரமணியம், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பரிந்துரைக் குழுவில் இடம்பெறுவார். அது தங்களுக்குச் சாதகமாக இருக்காது என்பதால், அதற்கு முன்னதாகவே அவசர அவசரமாக நீதிபதிகளுக்கான பரிந்துரைப் பட்டியலை அனுப்பியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

குடியரசுத் தலைவர் மூலம்
அழுத்தம் தரும் நடவடிக்கைகள்!

அடுத்தடுத்த பட்டியல்களில் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆதரவாளர்களையும், அவர்களது வழக்குரைஞர்களையும் நீதிபதிகள் ஆக்குவதற்கான பட்டியல் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும், அப் பட்டியலை ஏற்கக் கூடியவர் அந்த இடத்தில் இடம்பெற வேண்டும் என்பதாலேயே இந்த அவசரம் காட்டப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது. நீதிபதி நிஷா பானு அவர்கள் கேரள உயர்நீதிமன்றத்திற்குச் செல்ல மறுத்துவரும் நிலையில், நேற்று (12.12.2025) குடியரசுத் தலைவர் மூலம் அழுத்தம் தரும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.

தமிழ்நாட்டில் ஜனநாயக ரீதியாக மக்கள் ஆதரவைப் பெற்று ஒரு நாளும் தங்களால் ஆட்சி நடத்த முடி யாது என்பதைப் புரிந்து கொண்டு தான், ஒரு மாநிலமே ஸநாதனத்திற்கு எதிராக உள்ளது என்று வெளிப்படையாகவே அவர்களுக்குத் தெரிகிறது. அதைத்தான் நாடாளுமன்றத்தில் அமைச்சர் அனுராக் தாக்கூரின் நேற்றைய பேச்சு நமக்குக் காட்டுகிறது.

தமிழ்நாட்டில் இன்னும் பல ‘‘சுவாமி–நாதன்களை’’ உருவாக்கச் சதி செய்கிறார்கள்!

எனவே தான், ஆளுநர் மூலமாக தமிழ்நாட்டில் ஒரு ‘‘போட்டி அரசாங்கம்’’ நடத்த முயற்சிக்கிறார்கள்; கல்வித் துறையை நாசமாக்கத் துடிக்கிறார்கள். ஆனால், அவை எதுவும் பலிக்கவில்லை என்றதும், நீதித்துறையைக் காவி மயமாக்கும் பணிகளைத் தீவிரப்படுத்துகிறார்கள். இந்தத் ‘‘தந்திர மூர்த்திகள்’’, தமிழ்நாட்டில் இன்னும் பல ‘‘சுவாமி–நாதன்களை’’ உருவாக்கச் சதி செய்கிறார்கள்.

75 நீதிபதிகள் இடம்பெற வேண்டிய சென்னை உயர்நீதிமன்றத்தில், தற்போது 55 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர். மேலும் சிலர் ஓய்வு பெறக்கூடும் என்ற சூழலில், மொத்தமாக தங்களுக்கு ஆதரவானவர்களை நீதிபதிகளாக்கவே இத்தகைய கடும் பிரயத்தனத்தில் ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. அரசு ஈடுபட்டு வருகிறது.

உயர்நீதித் துறையில் இடஒதுக்கீடு இல்லை என்று அமைச்சர் சொல்கிறார். ஆனால், உயர்நீதித் துறையில் சமூகநீதி இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றக் கொலீஜியம் முன்பே வழிகாட்டியுள்ளதே!

இது சம்பந்தமாக அகில இந்திய அளவில் இதை மட்டுமே மய்யப்படுத்தி, ஓர் அறப்போராட்டத்தினை திராவிடர் கழகம் ஒருங்கிணைத்து, முந்தைய மண்டல் குழுப் பரிந்தரை செயலாக்கம் நடந்ததைப்போல, நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.

ஒத்தக் கருத்துள்ளவர்களை ஒருங்கிணைத்து திராவிடர் கழகம் சார்பில் அறப்போராட்டம்!

இடையில், மாநில சட்டமன்றத் தேர்தல் தமிழ்நாடு உள்பட குறுக்கிடுவதால், முதல் கட்டப் பிரச்சாரம் தொடங்கி, 2026 ஆம் ஆண்டின் முக்கிய தீவிர வேலைத் திட்டமாக எடுத்துக்கொண்டு, அனைத்து ஒடுக்கப்பட்ட சமூக மக்களையும், சிறுபான்மையினர் உள்பட இணைத்து, ஒரு முக்கிய சமூக அறப்போரை, தொடர் போராட்டமாக நடத்த, ஒத்தக் கருத்துடையவர்களை ஒருங்கிணைத்து, உரிமைப் போராட்டத்தினை நடத்திட விழைவோம் என்பது உறுதி!

கி.வீரமணி

தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
13.12.2025

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *