திருப்பரங்குன்றத்தில் இருப்பது தீபத்தூண் அல்ல; ‘சர்வே தூண்’ என்று ஆர்டிஅய் கேள்விக்கு இந்திய நில அளவைத்துறை பதில் அளித்துள்ளது. மதுரை அருகே திருப்பரங்குன்றம் மலையில் உச்சிப்பிள்ளையார் ேகாயில் அருகே தீபம் ஏற்றப்படும் தூணுக்குப் பதில், மலை உச்சியில் சிக்கந்தர் தர்கா அருகே உள்ள நில அளவைக்கான ‘சர்வே தூணில்’ தீபம் ஏற்ற பாஜக மற்றும் இந்து அமைப்பினரும் கோரி வருகின்றனர்.
ஆனால், இது ‘சர்வே கல் தூண்’ என பல்வேறு தொல்லியல் ஆதாரங்களும் தொடர்ந்து காட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சிக்கந்தர் தர்கா அருகேயுள்ள தூண் குறித்து திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த அப்துல் ஜப்பார் கடந்த 2022 ஜனவரியில் ஆர்டிஅய் மூலம் கேட்டிருந்தார்.
இதற்கு அதே ஆண்டு மார்ச் மாதம் இந்திய நில அளவைத்துறை அளித்துள்ள பதிலில், ‘‘திருப்பரங்குன்றம் மலையில் உள்ளது – ‘சர்வே கல்’ தான். 1808-1809, 1871ஆம் ஆண்டுகளில் திருப்பரங்குன்றம் மலையில் சர்வே கற்கள் நிறுவப்பட்டன. அரசு ஆவணங்களின்படி திருப்பரங்குன்றம் மலையில் 2 சர்வே கற்கள் உள்ளன’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பதில் கடிதம் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக உலா வருகிறது.
ஒன்றிய பிஜேபி ஆட்சியின் இந்திய நில அளவைத் துறைதான் இந்தத் தகவலைக் கூறியுள்ளது என்பது கவனிக்கத்தக்கதாகும்.
பிஜேபியைப் பொறுத்தவரை தனது ஆட்சியில் மக்களுக்கு வளர்ச்சிக் கண்ணோட்டத்தில் என்னென்ன செய்யப்பட்டன என்று ெசால்லுவதற்கு ஏதும் இல்லாத நிலையில், இது போன்று மத சம்பந்தப்பட்ட –இல்லாததையும், பொல்லாதையும் எடுத்துச் சொல்லி மக்களைத் திசை திருப்புவதுதான் அதன் பிழைப்பாகும்.
‘‘ஓசையுள்ள கல்லை நீர் உடைத்து
இரண்டாய் செய்துமே வாசலில் பதித்த
கல்லை மழுங்கவே மிதிக்கிறீர்
பூசைக்கு வைத்த கல்லில்
பூவும் நீரும் சாத்துறீர்
ஈசனுக்கு உகந்தகல் எந்தக் கல்லு
சொல்லுமே’’ – என்பது சிவவாக்கியர் எழுதிய பாடலாகும். ஒரு கல்லை உடைத்து ஒரு பகுதியை வாசலில் வைப்பதும், அதை மிதிப்பதும் இன்னொரு பகுதி கல்லை கடவுள் என்று சொல்லி பூவை வைத்துப் பூசை செய்வதும் எத்தகையது? என்று கேட்பது கருப்புச் சட்டைக்காரர்கள் அல்லர். கடவுள் நம்பிக்கையுள்ள சித்தர்தான்!
உண்மையில் இவர்களுக்குக் கடவுள் நம்பிக்கை இருக்குமாயின் இன்னொரு மதத்துக்காரரின் கடவுளை – வழிபாட்டுத்தலங்களை அடித்து நொறுக்குவார்களா?
மதம் யானைக்குப் பிடித்தாலும் சரி, மனிதனுக்குப் பிடித்தாலும் சரி அது ஆபத்தான ஒன்றாகும் என்பதை நடப்பில் எளிதாகவே பார்க்க முடிகிறது.
1970 செப்டம்பரில் சென்னை தியாகராயர் நகரில் ஒரு மோசடி நடந்தது. மண்ணைப் பிளந்து கொண்டு ஒரு பிள்ளையார் வெளியே வந்தார் என்பதுதான் அந்தக் கதை! அது சுயம்புக் கடவுள் என்று கதை கட்டி விட்டனர். அன்றைய காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி அதற்கு ஆதரவும் தெரிவித்தார்.
அந்தப் பகுதியில் பொதுக் கூட்டம் போட்டுப் பேசுவதாக தந்தை பெரியார் அறிவித்தார். அந்த நிலையில்,
அப்பொழுது முதலமைச்சராக இருந்த கலைஞர் அவர்கள் விசாரணைக்கு உத்தரவிட்டார். செல்வராஜ் என்ற போலீஸ் கான்ஸ்டபிள்தான் குழிதோண்டி, அதில் பருத்திக் கொட்டையைக் கொட்டி, அதற்கு மேல் ஒரு பிள்ளையார் சிலையை வைத்து, மண் போட்டு மூடினார். ஒரு ஓட்டை வழியாகத் தண்ணீரை உள்ளே செலுத்தியபோது பருத்திக் கொட்டை உப்பி, பிள்ளையார் சிலை வெளியே தள்ளப்பட்டது. இதற்குப் பின்னணியில் இருந்தது அப்பகுதி மாநகராட்சி உறுப்பினரான கே.எம்.பாலசுப்பிரமணியம் என்ற பார்ப்பனர் என்பது வெளிச்சத்துக்கு வந்தது. உண்டியலும் பறி முதல் செய்யப்பட்டது. ரூபாய் 71க்கு அந்த சிலையை வாங்கியுள்ளார் போலீஸ் கான்ஸ்டபிள்; விற்றவர் மருதப்பிள்ளை என்ற சிற்பி.
இந்தச் சூழ்ச்சியின் பின்னணி என்ன தெரியுமா? அந்தப் பகுதியில் மசூதி ஒன்று கட்டப்படத் திட்டமிட்டு இருந்ததுதான்.அதை முறியடிக்கவேதான் அந்தச் சூழ்ச்சி!
இது போன்ற தில்லுமுல்லுகள் எல்லாம் பார்ப்பன மதவாதச் சக்திகளால் அவ்வப்போது, அரங்கேற்றப்படுவதுண்டு.
இப்பொழுது தர்கா அருகே உள்ள சர்வே கல் ஒன்றை தீபத் தூணாக்கி மதக் கலவரத்தைத் துண்டத் திட்டமிட்டுள்ளனர்! பொது மக்களே உஷார்! உஷார்!!
