குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள குமார கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை காவடி எடுத்துச் சென்று நேர்த்திக் கழிப்பார்களாம். நேற்று தக்கலை காவல்துறையினர் காவடி எடுத்துள்ளனர்.
யானை மீது ஒரு பால்குடமும் கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டதாம். அது மட்டுமின்றி காவல் நிலையத்தில் வைத்து சாமி சிலைக்கு அபிஷேகம் செய்வதற்குக் கொண்டு செல்லும் பசும்பாலை கலசங்களிலும் நிரப்பினர்.
இந்த நிகழ்ச்சியில் பத்மநாதபுரம் நீதிபதிகள் ராமச்சந்திரன், மாரியப்பன், கோகிலா, நரேந்திர குமார், தக்கலை காவல் துறை துணை கண்காணிப்பாளர் பார்த்திபன் ஆகியோர் கலசங்களில் பால் ஊற்றி நிறைத்தனர். காவல்துறை ஆய்வாளர்கள் பாரதிராஜா மற்றும் காவல் துறையினரும் கலந்து கொண்டனர்.
இதே போல தக்கலை பொதுப் பணித்துறை நீர் ஆதாரப்பிரிவு அலுவலகத்தில் இருந்து மூன்று புஷ்பக காவடிக்கு ஒரு பால்குடமும் கோயிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. திருச்சி, மதுரை மண்டல தலைமைப் பொறியாளர் ரமேஷ், தக்கலை செயற்பொறியாளர் அருள்சன், உதவி செயற்பொறியாளர் கதிரவன், உதவி பொறியாளர்கள் வினிஷா, செல்வகுமார், கண்காணிப்பாளர் சிவகுமார் உட்பட பலரும் கலந்து கொண்டனர். இந்த காவடிகள் தக்கலை பகுதியில் உள்ள அரசு அலுவலகங்களுக்குச் சென்று திரும்பின. அப்பொழுது அந்தந்த அலுவலகங்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து காவல்துறை மற்றும் பொதுப்பணித்துறை காவடிகள் ஊர்வலமாக தக்கலை நகரை வலம் வந்த பின்னர் குமார கோயிலுக்குச் சென்றனர் – என்று செய்தி வெளியாகியுள்ளது.
மதசார்பற்ற ஒரு நாட்டில் அதுவும் தமிழ்நாட்டில் இப்படி காவல்துறையினர், பொதுப்பணி துறையினர் கோவிலுக்கு காவடி எடுப்பது எவ்வளவு மூடநம்பிக்கைக்கும் பரிகாசத்திற்கும், சட்ட மீறலுக்கும் உரியது! இனிமேல் காவல் நிலையங்களில் துப்பாக்கிகள் தேவைப்படாது; காலை முதல் பஜனைப் பாடல்களை பாடிக் கொண்டிருக்க சொல்லலாமா? மாந்திரீகர்களை அழைத்து மந்திரிக்க சொல்லலாமா? இவர்கள் படித்தவர்கள் தான் என்று நாம் நம்ப வேண்டுமா?
மக்கள் மத்தியில் ‘‘விஞ்ஞான மனப்பான்மை வளர்க்க வேண்டும்’’ என்று அரசமைப்புச் சட்டம் ஒரு பக்கத்தில் கூறுகிறது. இன்னொரு பக்கத்தில் அரசு துறைப் பணியாளர்களும் அதிகாரிகளும் குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்த சடங்கு ஆச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அரசின் கவனத்திற்கு இது வந்ததா? என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது!
