பெண்களுக்கு சத்யராஜ் வேண்டுகோள்
சென்னை, டிச.13- மகளிர் உரிமைத் தொகையின் இரண்டாம் கட்ட விரிவாக்க நிகழ்ச்சி வெல்லும் தமிழ்ப் பெண்கள் என்கிற பெயரில் சென்னையில் நடைபெற்றது. அரசுத்துறை உயரதிகாரிகள் தொடங்கி தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த சாமானிய பெண்கள் கலந்து கொண்டனர்.
இதில் நடிகர் சத்யராஜ் பேசும்போதும், எதைப் பார்த்தும் ஏமாந்துவிடாதீர்கள். சாதனைகளின் பக்கம் மட்டும் நில்லுங்கள். திராவிட மாடல் அரசுக்கு துணை நிற்க வேண்டும் என்று பேசினார்.
தமிழ்நாடு அரசு சார்பில் சென்னையில் வெல்லும் தமிழ்ப் பெண்கள் மகளிர் உரிமைத் திட்டத்தின் 2ஆவது கட்ட விரிவாக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளில் தடம் பதித்த பெண்கள், அதிகாரிகள், அமைச்சர், திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். சாதனை பெண்களின் கடந்து வந்த கடினமான பாதை குறித்து பல நெகிழ்ச்சி தகவல்கள் மேடையில் பகிரப்பட்டன.
வெல்லும் தமிழ்ப் பெண்கள்
நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சத்யராஜ், “தமிழ்நாட்டின் அரணாக, கவசமாக விளங்கிக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவரின் தோளோடு, தோளாக போர் படை தளபதியாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிற்கிறார்.
இவர்களின் சாதனைகளை எல்லாம் பார்க்கும்போது எனக்கு வியப்பாக உள்ளது. உருவத்தில் நான் சற்று உயரமாக இருப்பதால், இந்த மேடையில் சற்று உயரமாக தெரியலாம். உங்கள் சாதனை உயரத்துக்கு முன்னால் நான் மிகவும் குறைவு தான்.
உங்கள் வாழ்க்கைப் பிரச்சினைகளை சொல்லும் போது வியப்பாக, அதிர்ச்சியாக உள்ளது. எந்தளவுக்கு மன உறுதியோடு உழைத்திருந்தால் வாழ்க்கையில் இந்த இடத்திற்கு வந்திருக்க முடியும். நான் வசதியான குடும்ப பின்னணியில் இருந்து வந்தவன்.
அதனால் உங்களின் கஷ்டங்களை நேரில் வந்து பார்க்க முடியவில்லை. நீங்கள்பட்ட கஷ்டங்களை இப்போது கேட்கும்போது மிகவும் வியப்பாக உள்ளது. இந்தளவுக்கு வறுமையின் பிடியில் இருந்திருந்தால், என்னால் இப்படி வந்திருக்க முடியுமா என எனக்கு தெரியவில்லை.
திராவிட சித்தாந்தத்தின் நீட்சி
இந்த கண்கொள்ளாக் காட்சியை பார்ப்பதற்கு பெரியாரும், அண்ணாவும், கலைஞரும் இல்லையே என்பது வருத்தமளிக்கிறது. இது அவர்கள் கண்ட கனவு. உங்களுக்கு தெரியாது திராவிட மாடல் சித்தாந்தம் அங்கிருந்து தான் பிறந்தது. உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கலாம்.
அது தனிப்பட்ட விஷயம். உங்களின் முன்னேற்றம் திராவிடத்தில் இருந்துதான் பிறந்தது. அது 100 ஆண்டுகளுக்கு முன்பு நீதிக்கட்சியில் ஆரம்பித்த விஷயம். முத்துலட்சுமிதான் சாதனைப் படைத்த முதல் பெண் மருத்துவர்.
அதன் பிறகு மூவலூர் ராமாமிர்தம் பெண்களின் வளர்ச்சிக்காக மிகவும் பாடுபட்டுள்ளார். நீங்கள் எல்லாம் இன்றைக்கு வளர்ந்திருப்பதற்கு அந்த வேர்தான் காரணம். திராவிட சித்தாந்தத்தின் நீட்சி தான் நீங்கள் எல்லாம்.
இதை உங்களுக்கு தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். அந்த வேர்களை புரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் திராவிட மாடல் அரசுக்கு ஏன் துணை நிற்க வேண்டும் என்பது புரியும். உங்களுக்கு தெரியும் எதைப் பார்த்தும் ஏமாந்துவிடாதீர்கள். சாதனை திட்டங்களின் பக்கம் மட்டும் நில்லுங்கள்.” இவ்வாறு அவர் பேசினார்.
