திருவாங்கூர் சமஸ்தானம் (13) ‘‘மறந்த வரலாறும், மாறாத வடுக்களும்!’’ மருத்துவர் இரா.கவுதமன் இயக்குநர், பெரியார் மருத்துவ அணி

6 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

நம்பூதிரிப் பார்ப்பனர்கள் கீழ்ஜாதிப் பெண்களைக் கொடுமைப்படுத்தியது என்பது உலக வரலாற்றில் எங்கும் நிகழாதது. நம்பூதிரிகளுக்கு கீழ் ஜாதிப் பெண்கள் மீது எப்பொழுதும் பாலியல் உரிமை உண்டு. பார்ப்பனர்களின் பாலியல் இச்சைக்கு இணங்காதவர்கள் “வழி கெட்டவர்கள்” (வேசிகள்) என்று முத்திரைக் குத்தப்பட்டு, தீண்டத்தகாதவர்களாக நடத்தப்பட்டனர்.

இதில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் நாயர்கள் சமூகப் பெண்களே! நம்பூதிரி குடும்பங்களில் முதல் மகன் மட்டுமே நம்பூதிரிப் பெண்ணை மணக்க முடியும். நம்பூதிரிப் பார்ப்பனர்கள் மக்களைச் சுரண்டி, அரச அனுமதியோடும், நாயர்களின் உதவியோடும்தான், பெரும் பணக்காரர்களாக, நிலக்கிழார்களாக விளங்கினர். அவர்களின் சொத்து பிரிந்துவிடக் கூடாது என்பதற்காக மூத்த மகன் மட்டுமே நம்பூதிரிப் பெண்களை மணக்க முடியும் என்ற ஜாதியச் சட்டத்தை அமல்படுத்தினர். அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த மற்ற ஆண் பிள்ளைகள் நாயர் பெண்களுடன் உறவு வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

ஞாயிறு மலர்

ஆனால், அதே நம்பூதிரிப் பார்ப்பனர்கள் அவர்களை “சூத்திரர்கள்” என்ற கடைசி வருணத்தில் தான் வைத்திருந்தனர். உடலுறவு என்ற தொடர்பில் பார்ப்பனர்கள் கீழ்ஜாதி என்று பார்ப்பதில்லை என்பதற்கு இது ஓர் உதாரணம்.

ஜாதியையும், மதத்தையும் காட்டி நாயர் பெண்களை சூறையாடினர் நம்பூதிரிப் பார்ப்பனர்கள். நம்பூதிரிகளின் இந்தப் பாலியல் அக்கிரமத்திற்கு “சம்பந்தம்”  திருமண முறை என்று பெயர். இது “கூட்டணி” என்று பொருள்படும் “சம”, “பந்தம்” என்ற சமஸ்கிருத வார்த்தையில் இருந்து உருவானது.

இது ஒரு முறையான சட்டப்பூர்வமான திருமணச் சடங்குகளைக் கொண்டிருக்காமல் சமூக ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமைந்த ஓர் உறவுமுறை. இந்த உறவுமுறை பல பகுதியில், பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. “புடவமுரி”, “புடவகொடா”, “வஸ்திரதானம்”, “விட்டாரம் கயருகா”, “மங்கலம்”, “உழகம் போருக்குக்கா” என்று பல பெயர்கள் இந்தத் திருமண முறைக்கு வழங்கியது. மெட்ராஸ் பிரசிடென்சியின் “1896 மெட்ராஸ் திருமணச் சட்டம், சம்பந்தம் திருமண முறையை “ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையிலான ஒரு கூட்டணி” என்று வரையறுத்துள்ளது.

திருவாங்கூர் சமஸ்தானத்தில் வழக்கத்தில் இருக்கும் “மருமக்கதாயம்” சட்டம், இதை அடிப்படையாகக் கொண்டே வழக்கத்தில் வந்தது. சம்பந்தம் திருமண முறை, திருமணத்தின் மிக முக்கிய அமைப்பான “வாழ்நாள் கூட்டணி”யை வலியுறுத்தவில்லை. சம்பந்தம் திருமணம் ஒப்பந்தத்தின் அடிப்படையைக் கொண்டவை. அவை இருவரும் விருப்பப்பட்டு கலைத்தும் கொள்ளலாம். தான் விரும்பும் நாயர் பெண்ணுக்கு, “புடவை” கொடுத்து நம்பூதிரிப் பார்ப்பனர்கள் உறவு கொண்டனர். அதனால்தான், “புடவமுரி”, “புடவகொடா”, “வஸ்திரதானம்” என்றெல்லாம் சம்பந்தம் திருமண முறை பெயர் பெற்றது.

இந்தத் திருமண முறையில், பெண்களுக்குச் சொத்துரிமை இருந்தது. குழந்தைகள் தாயிடமிருந்து வந்தவர்கள். தந்தையிடமிருந்து அல்ல. அதனால் குழந்தைகள் வளர்ப்பதில், பராமரிப்பதில் தந்தைக்கு எந்தப் பொறுப்பும் இல்லை என்று சமூகச் சட்டங்கள் இருந்தன.  நாயர் பெண்களை நம்பூதிரிப் பார்ப்பனர் பாலியல் வன்கொடுமைக்குப் பலியாக்க இந்தச் சட்டங்கள் பயன்பட்டன. செல்வம் கொழிக்கும் நம்பூதிரிப் பார்ப்பனர்களுக்கும், நாயர் பெண்ணுக்கும் பிறக்கும் குழந்தைக்கு அப்பாவின் சொத்தில் எந்த உரிமையும் கிடையாது.

அதனால் “அச்சன் நம்பூதிரி”யின் (குடும்பத்தின் தலைவர்) சொத்து பிரியாமல் குடும்பச் சொத்தாகவே இருக்கும். அந்தச் சொத்தை நாயர் பெண்களோடு கூடிப் பிறந்த குழந்தைக்குக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. அந்தக் குழந்தையும் ‘அச்சன் நம்பூதிரி’யின் சொத்தில் உரிமைக் கோர முடியாது. நம்பூதிரிப் பார்ப்பனர்களின் உறவு ‘புனித’மானதாகவும், ‘கவுரவமான ஒரு சமூக அந்தஸ்து கொடுக்கும் ஒரு முறை’ என்று சூத்திர நாயர்கள் மூளைச் சலவை செய்யப்பட்டனர். இந்தச் ‘சம்பந்தம்’ திருமண முறை நாயர்களோடு நில்லாமல், சத்திரியர்களும் இந்தப் பாலியல் சுரண்டல்களுக்கு ஆளானார்கள். அரச குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் இந்தக் கொடுமைக்கு ஆளானார்கள். திருவாங்கூர் நாட்டில் நம்பூதிரி – சத்திரியர்,  நம்பூதிரி – நாயர் ‘சம்பந்தம்’ திருமணம் இயல்பான ஒன்றாகப் பரவலாக நடைபெறும் நிகழ்வாகிப் போனது.

ஒப்பீட்டளவில் மேல் ஜாதியான நம்பூதிப் பார்ப்பனர்களின் பிள்ளைகள் என்றாலும், கீழ் ஜாதிப் பெண்ணுக்குப் பிறந்ததால் மேல் ஜாதி அந்தஸ்த்தை சமூகத்தில் அந்தப் பிள்ளைகள் பெற முடியாது. தங்கள் அப்பாவின் வீட்டின் பெயரையோ (தாரவாடு), முன்னெழுத்தாக அவர் பெயரையோ, அவர் பட்டங்களையோ பயன்படுத்த முடியாது. (Ref: விக்கிப்பீடியா – சம்பந்தம்)

பல பெயர்களில் அழைக்கப்பட்ட ‘சம்பந்தம்’ திருமண முறை எப்படி நடைபெறுகிறது? இயல்பான நடைமுறைகள் இந்தத் திருமண முறையில் கிடையாது. இந்தச் சடங்குப் பெண்ணின் ஜாதகத்தையும், நம்பூதிரிப் பார்ப்பானின் ஜாதகப் பொருத்தம் பார்ப்பதில் தொடங்குகிறது. ஜாதகம் பொருந்தியிருப்பின் நாயர் குடும்பத்தினர் அந்தத் தகவலை நம்பூதிரிக் குடும்பத்திற்குத் தெரிவிப்பர். பொருத்தத் தகவல் அச்சன் நம்பூதிரிக்குத் தெரிவிக்கப்படுகிறது. அதேபோல் நாயர் கூட்டுக் குடும்பத்தின் தலைவர்  ‘காரணவன’க்குத் தெரிவிக்கப்படுகிறது. பின் பெண் வீட்டார், பையன் வீட்டாரை விருந்துக்கு அழைப்பர். விருந்திற்கு “அயனி ஊனு” என்றும், மணமகன் “மணவாளன்” அல்லது “பிள்ளை” என்றும் அழைக்கப்படுகிறான். திருமண நாள் – அந்த மணநாளை விருந்தன்று முடிவெடுப்பர்.

திருமண நாள் அன்று மணவாளன் (மாப்பிள்ளை) பந்தலின் மய்யத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறான். அங்கு மூங்கில் பாய்கள், கம்பளங்கள் மற்றும் வெள்ளைத் துணிகள் விரிக்கப்பட்டிருக்கும். அதில் மணவாளன் அமர வைக்கப்படுவான். பெண்ணின் சகோதரர் மணப் பெண்ணை வீட்டின் உள்ளிருந்து சுமந்து வருவார். மணப் பந்தலை மூன்று முறை சுற்றி வந்ததும் மணவாளனின் இடது பக்கத்தில்பெண்ணை உட்கார வைப்பார். பின்னர் பெண்ணின் தந்தை ஒரு கம்பளியில் கட்டப்பட்ட ஒரு புதிய துணியை ஜோடிக்கு வழங்குகிறார்.

இந்தத் துணி “மந்திரவாதி” என்றழைக்கப்பட்டது. பின்னர் மணமக்கள் இந்தப் புதிய துணியை மாற்றிக் கொள்கிறார்கள்.  பெண்ணின் தாரவாட்டின் கரணவனின் மனைவி “கணுக்கால்” போன்றவற்றைக் கொண்டு பெண்ணை அலங்கரிக்கிறாள். பின் ‘எலாயுது’ (பார்ப்பனர்களில் திருமணம் நடத்தி வைக்கும் புரோகிதர்)  மணவாளனுக்குத் தாலியைக் கொடுக்கிறார். குடும்ப ஜோதிடர், “முகூர்த்தம்” என்று கத்துகிறார். மணவாளன் தனது, வாளை மடியில் வைத்து, பெண்ணின் கழுத்தில் தாலியைக் கட்டுகிறார். பெண் அப்பொழுது கையில் கண்ணாடியும், அம்பும் வைத்திருக்க வேண்டும். பார்ப்பனத் தம்பதிகள் மணமக்களை ஆசிர்வதித்து சில பாடல்களைப் பாடுவர். பின் மணமக்களை  வீட்டிற்கு உள்ளே அழைத்துச் செல்வர். அவர்கள் அங்கு மூன்று நாட்கள் இருக்க வேண்டும்.

நான்காவது நாள் அருகில் உள்ள ஆற்றிலோ, குளத்திலோ குளிக்க வேண்டும். பின் வீட்டிற்கு வருவார்கள். அதற்கு முன் ஓர் ஊர்வலம் வரும். பெண்ணின் குடும்பத்தின் செல்வ வளத்தைப் பொறுத்து எளமையாகவோ, ஆடம்பரமாகவோ இந்த ஊர்வலம் நடக்கும். வீட்டிற்கு வெளியே மணமக்கள் மீது குங்குமப்பூ தண்ணீர் தெளிக்கப்படும். வீட்டின் கதவுகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும். மணவாளன் அவற்றை வலுக்கட்டாயமாகத் திறக்க வேண்டும். பிறகு மணவாளன் வீட்டிற்குள் நுழைகிறார். வீட்டின் வடக்குப் பகுதியில் அவர் அமருகிறார். அதோடு திருமணச் சடங்குகள் நிறைவடைகின்றன. (Ref: கோஃப் கே “தாய் வழி உறவு” பக். 298 – 404)

பிற்காலத்தில் மணமக்களுக்குள் பிளவு ஏற்பட்டால் சம்பந்தம் உடைக்கப்படலாம். அவர்கள் வேறு உறவை உண்டாக்கிக் கொள்ளலாம். நாயர்கள் போர் வீரர்களாக இருந்ததால் போரில் அவர்கள் இறந்தால், அவர் மனைவி வேறு ஒருவரை ‘சம்பந்தம்’ முறையில் மணக்கலாம். இதன் மூலம் “விதவை”த் தனம் தவிர்க்கப்படுகிறது.

விவாகரத்து ஆன தம்பதியினர் குழந்தைகளுக்குக் காப்பாளராக சட்டபூர்வமாக மாமா (பெண்ணின் சகோதரர்) அல்லது கரணவன் இருப்பார். விதவைகள் மற்றும் விவாகரத்தான பெண்கள் மறுமணம் செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். ஆனால், முதல் திருமணம் போலன்றி அதிக சடங்குகள் இல்லாமல் எளிமையாக இந்தத் திருமணம் நடைபெறும். ஆண் பெண்ணின் வீட்டிற்கு நண்பர்களுடன் சென்று வெற்றிலை, பாக்கு, சேலை கொடுத்து அவரை மனைவியாக்கிக் கொள்கிறார்.

1908இல் நிறுவப்பட்ட புரட்சிகர எண்ணம் கொண்ட “நம்பூதிரி யோகாஷேமா மகாசபை அனைத்து நம்பூதிரிகளும் தங்கள் சொந்த ஜாதியில்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று கிளர்ச்சி செய்தது. இளைய சகோதரர்களும் நம்பூதிரிப் பெண்களையே மணக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.

இவர்கள் கூட்டம் 1919ஆம் ஆண்டு திருச்சூரில் உள்ள “பாரதி பூஷணம்” என்ற இடத்தில் நடந்தது. 1933இல் மெட்ராஸ் பிரசிடென்சி அரசு” மெட்ராஸ் நம்பூதிரி சட்டம்” இதை உறுதி செய்தது. அதே ஆண்டில், “மருமக்கதாயம் சட்டம்” ஆங்கிலேயே அரசால் நிறைவேற்றப்பட்டது. ‘மருமக்கதாயம் சட்டம்’ மறைமுகமாக ‘சம்பந்தம்’ திருமண முறையை அங்கீகரித்தது.

ஆனால், நம்பூதிரி இளைய மகன்கள் நம்பூதிரிப் பெண்களை மணக்கலாம் என்ற நடைமுறை வழக்கத்திற்கு வந்ததும் ‘சம்பந்தம்’ திருமண முறை சட்டென்று குறைந்து, கடைசியில் இறந்தும்விட்டது. நம்பூதிரிப் பார்ப்பனர்களின் சமூகச் சட்டங்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான நாயர் மற்றும் சத்திரியப் பெண்கள் அதிலிருந்து தப்பித்து விடுதலைப் பெற்றனர். (Ref:  விக்கிபீடியா, “சம்பந்தம்”)

(தொடருவேன்…)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *