“பெரியார் எந்த ஜாதியை ஒழித்தார்?”, எனச் சிலர் கேட்பார்கள். அவர்கள் யாரெனில், ஜாதி ஒழியக் கூடாது என நினைப்பவர்கள்; இன்னும் சொன்னால் ஜாதிப் பெருமை பேசுபவர்கள், ஜாதி எனும் நெருப்பு அணைந்து விடக் கூடாது என ஆயிரமாயிரம் முயற்சிகளைச் செய்யும் ஆரியத்திற்குத் துணை போகிறவர்கள். இப்படியான சூழலில் தான் பெரியார் எனும் பேரண்டம் வெடித்து, ஜாதிக் கட்டுமானங்களைக் கலகலக்கச் செய்தது! இவர்களின் சுய ஜாதி வெறியால் உணர்ச்சிகளைக் கொட்டலாமே தவிர, பிற ஜாதிகள் இன்றி உயிர் வாழவே முடியாது!
ஹிந்து மதத்தால் பாதிக்கப்படும் ஹிந்துக்கள்!
ஹிந்து மதத்தால், ஒரு ஹிந்துவே ஒடுக்கப்படும் கொடுமைகள் இந்த நாட்டில்தான் நிலை பெற்று இருக்கின்றன. சிந்தனைகளால் தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு, பிறர் செயல்களால் கூனிக் குறுகி, ஒவ்வொரு இடத்திலும் அவமானப்படும் இந்த வாழ்க்கை ஹிந்து மதம் தந்த பரிசு. தன்னை ஏளனமாகப் பார்ப்பது, தன் பெயரைக் கூட சொல்லி அழைக்காதது, வாடா, போடா என ஏகமாய்ப் பேசுவது என ஒவ்வொரு ஹிந்துவின் வாழ்க்கையும் குரூரமானது.
அப்படியான வாழ்க்கையை வாழ்ந்த ஒரு ஹிந்து, சுயமரியாதைக் கொள்கையை அறிந்து, அதனைப் புரிந்து, கருப்புச் சட்டை அணிந்து, பெரியார் திடலுக்குள் நுழைகிற போது, அந்தத் தோழருக்கு வயது 23 இருக்கலாம்; எதிரில் வரும் 75 வயது பெரியார் தொண்டர், “அய்யா வாங்க!” என அழைக்கும் போது, புதியோர் உலகத்திற்கு அந்தத் தோழர் நுழைகிறார். கலர் சட்டைக்கும், கருப்புச் சட்டைக்குமான வேறுபாட்டை அவர் உணர்கிறார். வயது வித்தியாசம் கிடையாது, ஜாதிகள் என்னவென்றே தெரியாது…. எல்லோரும் என்னைக் கண்டு அய்யா என்கிறார்களே, கை கொடுத்தும், கும்பிட்டும் செல்கிறார்களே என, “சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு” என்கிற முடிவிற்கு அவர் வருகிறார். அவர் என்றால் குறிப்பிட்ட ஒருவரல்ல; அனைத்து ஜாதிகளிலும் இப்படியான சுயமரியாதை மீட்புக் கதைகள் உண்டு.
ஆத்திகர் உருவாக்கிய நாத்திகர்!
அந்த வகையில் ஒரு கருப்புச் சட்டைக்காரரை, கலகக்காரரை இன்று பார்க்க இருக்கிறோம். அவர் பெயர் கரு.அசோகன். சிவகங்கை மாவட்டத்தில் “ஆதிக்க ஜாதி” என அடையாளப்படுத்தப்பட்ட ஜாதியில் பிறந்தவர். அதனால் என்ன…? பிறந்த போதே கருப்புச் சட்டைக்குள் நுழைந்து கொண்டவர். அப்படி நுழைவதற்குக் கழுத்தில் உத்திராட்சக் கொட்டையும், நெற்றியில் திருநீறும் அணிந்த ஒரு ஆன்மிகவாதி தான் காரணம்.

பெரியார் மண் என்று சொல்வதற்கு இது நாத்திகர்கள் நிறைந்த மண் என்று பொருள் அல்ல; ஆத்திகர்களும் அய்யா பெரியாரால் பக்குவடைந்த மண் இது! அப்படியாக கரு.அசோகன் அவர்களை நாத்திகராக்கிய ஆத்திகர், அவரின் தந்தை கருப்பையா அவர்கள். 1925 காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாட்டில், நீதிக் கட்சியின் சார்பில் மாவட்டப் பிரதிநிதியாகக் கலந்து கொண்டவர். தந்தை பெரியாரைத் தனது குக்கிராமமான விசாலயன் கோட்டைக்கு அழைத்துச் சென்றவர்.
“அம்பலம்” தோழராக மாறிய அற்புதம்!
பர்மாவிற்குப் பயணம் செய்த பெரியாரை, அங்கிருந்த கருப்பையா “அம்பலம்” சந்திக்கிறார். 35 ஆண்டுகளாகப் பர்மாவில் இருந்தவர் இவர். பெரியாரைச் சந்தித்த பிறகு கருப்பையா “அம்பலம்” என்பதை, தோழர் கருப்பையா என மாற்றிக் கொண்டார். சிலர் “காம்ரேட் கருப்பையா” என்றும் அழைப்பதுண்டு! ஒரு பக்கம் சைவ சித்தாந்தம், மறுபக்கம் பெரியார் என்று தொடர்ந்த நிலையில், இறுதியாக உத்திராட்ச மாலைகள் ஓரமாகக் கழட்டி வைக்கப்பட்டன.

பர்மாவில் இருந்து தமிழ்நாடு வந்த பிறகு தம் கிராமத்தில் ஆரியத்தை அலற வைத்ததும், மூடநம்பிக்கையின் முடை நாற்றத்திற்குப் பகுத்தறிவு வாசம் வீசச் செய்ததுமாக, இறுதி வரை கழகத்தின் வீரராக வலம் வந்தவர் “காம்ரேட்” கருப்பையா. பெயருக்குப் பின்னால் இருந்த ஜாதி வால்கள், பெரியார் இயக்கத்தால் எப்படித் துண்டிக்கப்பட்டன என்பதை இந்த வரலாறுகள் சொல்லும்! அதன் தொடர்ச்சியாகக் கருப்புச் சட்டை அணிந்தவர் தான் கரு.அசோகன்.
பகுத்தறிவுப் பரிணாமங்கள்!
சில ஆண்டுகள் அப்பா பெயரில் இருந்த ஜாதி, அசோகன் காலங்களில் பிறந்ததில் இருந்தே இல்லை என்பது தான், இந்த மண்ணின் பெருமை! அடுத்த தலைமுறைகளோ தமிழர்களின் வீடுகளில் திருமணம் செய்து கொண்டார்களே தவிர, தங்கள் ஜாதிக்காரர்கள் வீடுகளில் செய்து கொள்ளவில்லை. படிப்படியாக வந்த பகுத்தறிவுப் பரிணாமம் என்பது இதுதான்!
“புலிக்குப் பிறந்தது பூனை ஆகுமா?”, என்பார்கள். கரு.அசோகன் 11 ஆம் வகுப்புப் படிக்கும் போதே, தாய்மொழி காக்கும் ஹிந்தித் திணிப்புப் போரில் பங்கேற்று 21 நாட்கள் சிறை சென்றவர். அறிஞர் அண்ணாவை காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்திற்கு அழைத்துப் பேசச் செய்தவர். கலைஞரை வைத்து தேவகோட்டையில் கூட்டம் நடத்தியவர். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியரைப் பலமுறை விசாலயன்கோட்டைக்கு அழைத்துச் சென்றவர். இப்படியான இவரின் இயக்க வாழ்க்கைக்கு இணையாக அரசியல் புரட்சியும் தொடர்ந்தது.
ஆத்திகத்திற்கு நாத்திகமே உதவி!
நடுக்குளம் அய்யனார் கோயிலுக்கு மற்ற ஹிந்துக்கள் மண் குதிரை எடுத்துச் செல்ல உரிமையுள்ளபோது, ஒடுக்கப்பட்ட ஹிந்துக்களுக்கு உரிமை இல்லாமல் இருந்தது. “எங்கள் ஹிந்துவை எப்படி நிராகரிக்கலாம்?”, என அங்கிருந்த அர்ச்சகர்களுக்குக் கோபம் வரவில்லை. எந்நேரமும் கருப்புத் துண்டைத் தோளில் போட்டிருக்கும் கரு.அசோகன் எனும் நாத்திகரே, ஆத்திகர்களின் உரிமைகளை மீட்டெடுத்திருக்கிறார்.
பிற்படுத்தப்பட்ட ஹிந்துக்களுக்கும், ஒடுக்கப்பட்ட ஹிந்துக்களுக்கும் பாலமாக இருந்து அந்தக் கிராமத்தையே பகுத்தறிவுக் கரை சேர்த்தவர் கரு.அசோகன். இந்த மாற்றங்களை அவர் செய்து முடித்து 35 ஆண்டுகள் ஆகிறது. 45 பஞ்சாயத்துகளை உள்ளடக்கிய கல்லல் ஒன்றியத் தேர்தலில் போட்டியின்றி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இதுவே அவரின் சுயமரியாதை, நாத்திகக் கொள்கைக்குக் கிடைத்த பெரு வெற்றி! பல்வேறு பொறுப்புகள் வகித்து, இப்போது தி.மு.க. பொதுக்குழு உறுப்பினராக இருந்து வருகிறார்.
அமரர் ஊர்தி!
30 ஏக்கரில் தென்னை மரம் வைத்திருக்கும் இவர், அதற்குப் பெரியார் பண்ணை என்று பெயர் வைத்துள்ளார். இது நேற்று, இன்றல்ல; 50 ஆண்டுகளுக்கு முன்பே வாங்கி, அய்யா பெயர் சூட்டப்பட்டது. கிராமத்தில் ஒவ்வொரு ஜாதியும் ஓர் அமரர் ஊர்தி வைத்துக் கொண்டிருந்த போது, வழக்கமாக ஒடுக்கப்பட்டவர்கள் பாதிக்கப்பட்டார்கள். எவரும் வாடகைக்கும் கொடுக்கவில்லை. இந்நிலையில் 2004ஆம் ஆண்டு அமரர் ஊர்தி செய்து, அவர்களின் பயன்பாட்டிற்கு கரு.அசோகன் தந்துள்ளார். இவை பதவியில் இருக்கும் போது மட்டுமல்ல; எந்நாளும் கருப்புச் சட்டைப் பணிகளை அவர் தொடர்ந்து செய்தே வந்துள்ளார்.
அதேபோல ஒடுக்கப்பட்ட தோழர்களுக்குத் திருமண மண்டபம் கிடைப்பதில் சிரமம் இருந்த போது, இவரே இவர் இடத்தில் சொந்தமாக மண்டபம் கட்டி, இலவசமாகக் கொடுத்து வந்துள்ளார்; வருகிறார்! இது தொடங்கியது 1972 ஆம் ஆண்டு. இந்த இடத்தில் “இலவசம்” என்பது புரிந்து கொள்வதற்காகச் சொல்லப்படுகிறது! சக மனிதரின் உரிமைகளின் பக்கம் பல்லாண்டுகளாக நிற்கும் கரு.அசோகன், “ஒதுக்கப்பட வேண்டியதும், ஒழிக்கப்பட வேண்டியதும் ஆரிய சித்தாந்தத்தை மட்டுமே”, என்பதில் உறுதியாக இருக்கிறார்.
பிறருக்கும் சுயமரியாதை முக்கியம்!
1971ஆம் ஆண்டே “கரு படிப்பகம்” என்பதைக் கிராமத்தில் உருவாக்கியவர். 6 வயதில் இறந்த மகள் கோப்பெருந்தேவி பெயரில் கல்வி அறக்கட்டளை நடத்தி வருகிறார். பெரியார், ஜென்னி, அலெக்சாண்டர், அரிஸ்டாட்டில், எடிசன், காரல்மார்க்ஸ், நியூட்டன், ஆஸ்டின் போன்றவை எல்லாம் இவரின் குடும்பப் பெயர்கள். ஒரு தனி மனிதரை, கருப்புச் சட்டைக்காரரைப் பாராட்ட வேண்டும் என்பதற்காக இவற்றை எழுதவில்லை. அப்படிப் பார்த்தால் இவர் செய்த பல செயல்களும் 40, 50 ஆண்டுகளைக் கடந்துவிட்டன.
இவரின் சொந்த ஊர் விசாலயன்கோட்டை என்றாலும், தலைவராக இருந்தது கல்லல் ஒன்றியம் என்பதால், “வாய்யா கல்லல்” என்றுதான் கலைஞர் அழைப்பாராம். அதனாலே “கல்லல் அசோகன்” என்பது நிலைத்துவிட்டது. பெரியார், கலைஞர், ஆசிரியர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு திராவிட இயக்கத்தவர்கள் இவரின் விசாலயன்கோட்டை கிராமத்திற்குச் சென்றுள்ளனர். 1971 இல் கட்டிய இல்லத்திற்குப் பகுத்தறிவு இல்லம் எனப் பெயர் சூட்டி, பெரியார், அண்ணா, கலைஞர் படத்தை கிரில் வடிவத்தில் செதுக்கி, திராவிட இயக்க வண்ணமான கருப்பு, சிகப்பை ஆங்காங்கே ஓவியமாக்கி, சென்ற மாதம் வாங்கிய புது காரில் கூட மறக்காமல் சுயமரியாதை எனும் “ஸ்டிக்கர்” ஒட்டி, 50 ஆண்டுகளாகத் தம் அடையாளங்களைக் கோழி தன் குஞ்சுகளை அடைகாப்பது போல பாதுகாத்து வருகிறார்.
இடையில் உடல்நலம் சரியில்லாத நிலையிலும், நவம்பர் 28 காரைக்குடியில் நடைபெற்ற பெரியார் உலகம் நிதியளிப்புக் கூட்டத்தில் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுடன் இறுதி வரை மேடையில் அமர்ந்திருந்தவர். “தம் கொள்கை வாழ்க்கைக்கு சாமி.திராவிடமணி தொடங்கி இன்று வரையுள்ள தோழர்கள் உறுதுணையாக உள்ளனர்”, எனக் கூறினார். “சுயமரியாதை” என்பதுதான் மட்டுமே பெற்றுக் கொள்வதில்லை; பிறருக்கும் அதை உறுதி செய்வதில் தான் பெரியாரியம் அடங்கியிருக்கிறது!
