புனேவில் தொழில் செய்துவரும் செல்வந்தர் நவம்பர் இறுதி வாரத்தில் தனது தாயாரின் உடல் நிலை மோசமாகியதால் புனேவில் இருந்து டில்லி சென்று அங்கிருந்து தரைமார்க்கமாக அரியானாவில் உள்ள ரோஹதக் செல்ல ‘இண்டிகோ’ விமானத்தில் பதிவு செய்து 29.11.2025 அன்று புனே விமான நிலையத்திற்கு வந்தார்.
அங்கு அதிர்ச்சி காத்திருந்தது, அவரது விமானம் ரத்து செய்யப்பட்டு விட்டதாகவும் அடுத்த விமானத்திற்கு செல்லாம் காத்திருங்கள் என்று அவரது உடமைகளையும் ‘இண்டிகோ’ நிறுவனம் பெற்றுக்கொண்டது,சரி அடுத்த விமானம் தானே என்று காத்திருப்போர் அறைக்கு வந்தால் அங்கே வித்தியாசமான சூழலை கண்டார், ஆம் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இருந்து பலர் இதே போல் விமானம் ரத்து காரணத்தால் அங்கேயே காத்திருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அவரோ “எனது உடமைகளைத் தாருங்கள் நான் எப்படியும் ஊர் போய் சேரவேண்டும்” என்று கதறாத குறை. ஆனால், விமான நிர்வாகமோ ஒரே பதிலைக் கூறியது. காத்திருங்கள், பதறாதீர்கள்! (வெயிட் சார் ‘டோண்ட்பேனிக்’) 3 நாட்களாக விமான நிலையத்திலேயே காத்திருந்தார், இதற்குள் அவரது தாயார் இறந்துவிட்டார். இறுதி மரியாதை நிகழ்வுகளுக்காவது வந்துசேர் என்று உறவினர்கள் கதறினார். ஆனால் அவர் 6.12.2025 அன்றுதான் வீடு சென்று சேர முடிந்தது, அங்கே அவரது தாயாரின் படத்தினைப் பார்த்து விழுந்து கதறினார்,
அவர் ஏழை அல்ல; வெளிநாட்டிலிருந்து வாகன உதிரிப்பாங்களை மொத்தமாக வாங்கி சில்லரை விற்பனைக்கு தரும் கோடிக்கணக்கான ரூபாய் புரளும் அளவிலான தொழிலதிபர்.
இது ஒருவரின் கண்ணீர் அனுபவம்
இதுபோன்ற நூற்றுக்காணக்கான அனுபவங்கள் நவம்பர் இறுதிவாரத்தில் இருந்து இது அச்சாகும் வரை கொட்டிக்கிடக்கிறது. ‘ஹாஸ்டாக் இண்டிகோ’ என்று சமூக வலைதலத்தில் பதிவிட்டாலே கண்ணீர்க் கதைகள் – அனைவரும் பெரும் செல்வந்தர்கள்!
இதுதான் நேரம் என்று இதர விமான நிறுவனங்கள் கட்டணத்தை 300 மடங்கு உயர்த்தினர், புனே மும்பை விமானக் கட்டணம் சாதாரணமாக 5000 முதல் 8000 ஆயிரம் வரை ஆனால் இண்டிகோ சிக்கலைப் பயன்படுத்தி 85 ஆயிரம் வரை உயர்த்தியது.
திருச்சி – சென்னை விமானக்கட்டணம் 47 ஆயிரம் வரை உயர்ந்தது. தனியார் மயத்தின் ஆபத்தை மக்கள் உணருவதற்கு ‘இண்டிகோ’ மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறது.
ஏன் இந்தச் சிக்கல்?
விமானிகளுக்கான பணி நேர வரம்பு (FDTL) விதிகளில் செய்யப்பட்ட மாற்றங்களே இந்த நெருக்கடிக்குக் காரணம் என்று ‘இண்டிகோ’ நிறுவனம் கூறியுள்ளது.
விமானிகளின் பணி அட்டவணையை திருத்த முயற்சித்துக் கொண்டிருப்பதாகவும், சிக்கல் முழுமையாக தீர இன்னும் சில நாட்கள் ஆகும் என்றும் ‘இண்டிகோ’ நிறுவனம் தெரிவித்துள்ளது.
‘எகனாமிக் டைம்ஸ்’ பத்திரிகையின்படி, இந்த விதிகளின் அடிப்படையில், விமானப் பாதுகாப்பிற்காக, ஒரு விமானி 28 நாட்களில் 100 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்.
விமானம் புறப்படுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் தனது வரவைக் குறிப்பிடும் நேரத்திலிருந்து அவரது பணி தொடங்கியது எனக் கருதப்படும்.
