உயர் கல்வி நிறுவனங்களில் மூன்றாவதாக ஒரு மொழியைக் கற்பிக்கும்படி பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வெளியிட்டிருக்கும் அறிவிப்பு பேசுபொருளாகியிருக்கிறது. இதை நடைமுறைப்படுத்துவதில் உள்ள பல்வேறு சிக்கல்களை ஒன்றிய அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.
தேசியக் கல்விக் கொள்கை-2020, பள்ளிக்கூடங்களிலும் கல்லூரி, பல்கலைக்கழகம் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களிலும் மூன்று மொழிகள் கற்பிப்பதை ஒரு வழிகாட்டுதலாகக் கொண்டுள்ளது. ‘மாணவர்கள் அவரவர் உள்ளூர் மொழி, ஆங்கிலம் ஆகியவற்றுடன், அரசமைப்புச் சட்டம் பட்டியலிடும் 22 இந்திய மொழிகளில் ஏதேனும் ஒன்றையும் கூடுதலாகக் கற்றுக்கொள்ள வேண்டும்’ என இந்தக் கொள்கை கூறுகிறது. ‘பள்ளிக் கல்வியில் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம்’ எனத் தமிழ்நாடு அரசு மறுத்ததும் பி.எம்.சிறீ. திட்டத்தில் சேராத தமிழ்நாட்டிற்கு ‘அனைவருக்கும் கல்வி’ திட்டத்துக்கான ரூ.2,500 கோடி நிதியை வழங்க முடியாது என ஒன்றிய அரசு மறுத்ததும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இந்நிலையில் உயர் கல்வியிலும் மும்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்த வழிவகுக்கும்வகையில் பல்கலைக்கழக மானியக் குழுவின் செயலர் மனிஷ் ஜோஷி, இந்தியா முழுவதும் அனைத்து உயர் கல்வி நிறுவனங்களுக்கும் அண்மையில் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
இதன்படி, மாணவர்களுக்கு மூன்றாவதாக ஓர் இந்திய மொழி கற்பிக்கப்பட வேண்டும். மாணவர்கள் மட்டுமல்லாமல், ஆசிரியர்களும் பணியாளர்களும் புதிய மொழியைக் கற்குமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. மாநிலப் பல்கலைக்கழகம், மத்தியப் பல்கலைக்கழகம், தனியார் – நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அனைத்துக்கும் இந்த உத்தரவு பொருந்தும்.
மாநில எல்லைகளைக் கடந்து பண்பாட்டுப் புரிதல் விரிவடையவும் ஒற்றுமை வளரவும் ஒன்றிய அரசு இலக்காகக் கொண்டுள்ள ‘விக்ஷித் பாரத் – 2047’ திட்டத்தை வலுப்படுத்தவும் இந்த முயற்சி உதவும்; அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளைக் கண்டடைய முடியும் எனப் பல்கலைக்கழக மானியக் குழு கூறுகிறது. எனினும் இதை நடைமுறைப்படுத்துவதில் உள்ள வரம்புகளைக் கணக்கில் கொள்ள வேண்டும்.
விருப்பத் தெரிவாக இருப்பின் மாணவர்களால் ஆர்வத்துடன் உள்வாங்கப்படுவதும், கட்டாயமாக்கப் படுகையில் அது எதிர்மறையான விளைவுகளை அளிப்பதும்தான் கல்வித் துறையின் யதார்த்தம். இந்திய அளவில் மிகமிகக் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்கள்தான் உயர் கல்வியை எட்ட முடிகிறது; அவர்களில் படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய் பவர்களின் எண்ணிக்கை இன்னும் குறைவு. முதன்மைப் பாடத்தையும் இரண்டு மொழிப் பாடங்களையும் சரியாக உள்வாங்க இயலாமல் போராடிக்கொண்டிருக்கும் இவர்கள், கூடுதலாக ஒரு மொழியைக் கற்க வேண்டும் என்பது சுமை ஆவதற்கே சாத்தியம் அதிகம். உலகளாவிய மொழிகள் மூலம் அதிக வேலை வாய்ப்புகள் கிடைக்கக்கூடிய சூழலில், இந்திய மொழிகள் மூலம் அந்தளவுக்கு வாய்ப்புகள் உருவாகுமா என்பதும் கேள்விக்குரியது. உள்ளூர் மொழிகளுக்கான ஆசிரியர்களின் தீவிரப் பற்றாக்குறை, பல அரசுப் பல்கலைக் கழகங்களின் கட்டமைப்பில் போதிய பராமரிப்பின்மை போன்றவையும் பரிசீலனைக்கு உரியவை.
தமிழ்நாடு இருமொழிக் கொள்கையில் காலூன்றி நிற்பதோடு, சாதகமான கல்வியறிவு விகிதத்தோடு, பன்னாட்டு நிறுவன வேலைவாய்ப்புகளைப் பெறுவதிலும் முன்னணி வகிக்கிறது. கட்டாய ஹிந்தி கற்பித்தலுக்கு எதிராக நிலவும் அரசியல் சூழலும் மும்மொழித் திட்டத்துக்கு இங்கே கூடுதல் சவாலாக இருக்கும். புதிய பாடங்களின் சேர்க்கையைவிட, ஒட்டுமொத்த படிப்பின் தரம் மேம்படுத்தப்படுவதே தற்போது அவசியம்.
நன்றி: ‘இந்து தமிழ்திசை’ தலையங்கம், 12.12.2025
